கௌதம் மேனன் டைரக்ஷனில் சிம்பு நடித்துவரும் புதிய படத்தில் ஹீரோயினாக சமந்தா நடிக்கலாம் என்ற எதிர்பார்ப்பிற்கும் யூகத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் கௌதம். ஆம்.. இந்தப்படத்தில் பல்லவி சுபாஷ் என்ற வட இந்திய மாடல் நடிகையை அறிமுகப்படுத்துகிறார். இவர் நிறைய விளம்பரப்படங்களில் நடித்திருப்பதுடன் மராத்திய மொழிப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
ராஜீவ்மேனனின் விளம்பரப்படம் ஒன்றில் நடிக்கவந்தவரின் போட்டோ கௌதம் மேனனின் உதவி இயக்குனர் ஒருவர் கண்ணில்பட, கௌதமிடம் விஷயத்தை சொல்லியிருக்கிறார். அவரை அழைத்து டெஸ்ட் ஷுட் நடத்திய கௌதமுக்கு முழு திருப்தி ஏற்பட, இதோ இப்போது பதினைந்து நாள் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்தும் வருகிறார் பல்லவி.
“இந்தப்படத்தில் ரசிகர்களுக்கு அடையாளம் தெரிந்த நடிகையைத்தான் நடிக்கவைக்க விரும்பினேன். ஆனால் நான் கேட்கும் தேதிகளை அவர்களால் முழுமையாக கொடுக்க முடியவில்லை. அதனால் நடிக்கத்தெரிந்த, ஆனால் தமிழுக்கு புதுமுகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தபோது பல்லவி கண்ணில் பட்டார். அவரையே ஒப்பந்தம் செய்துவிட்டோம்” என்கிறார் கௌதம் மேனன்.
பல்லவிக்கு மராத்தி தான் தாய்மொழி. ஏற்கனவே ஒரு தமிழ்ப்படத்தில் ஒப்பந்தமாகி இவர் நடித்த படம் என்ன காராணத்தினாலோ பாதியிலேயே நின்றுவிட்டது இப்போது கௌதம் மேனன் அறிமுகம் மற்றும் சிம்புவின் ஜோடி என அங்கீகாரம் கிடைத்ததில் மகிழ்ச்சியில் இருக்கிறார் பல்லவி.