’ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ – விமர்சனம்

111

ஒரு கடத்தல் கும்பல் தலைவன் கீழ் இயங்கி வந்த ஒருவன் போலீஸ் கண்ணிலிருந்து தப்ப ஒரு வீட்டிற்குள் பதுங்க, சந்தர்ப்ப சூழ்நிலையால் பார்வையற்றோர் குடும்பத்தில் இருந்த எட்வர்ட் என்னும் இளைஞனை சுட்டு விட, அந்த பிராயச்சித்தத்திற்காக அந்த குடும்பத்தை காப்பாற்ற தானே எட்வர்டாக மாறுகிறான். ஆனால் அவன் இயங்கி வந்த கடத்தல் கும்பல் தலைவன் மீண்டும் அவனை பழைய தொழிலுக்கே இழுக்க அவனை துரத்த, காவல்துறை ஒரு பக்கம் துரத்த இருவரிடமும் தப்பி அந்த பார்வையற்றோருடன் தப்பும் அவன் என்னவாகிறான் என்பது கதை.

கதை என்னவோ பழைய கதைதான். ஆனால் அதை படமாக்கிய விதத்தில் மிஷ்கின் தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு உயர்த்தியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். குண்டடி பட்டு கிடக்கும் மிஷ்கினை மருத்துவ மாணவன் காப்பாற்ற முயலுவதோடு படம் துவங்குகிறது. அதன் பிறகு அரங்கில் பின் ட்ராப் சைலண்ட் இருக்கையில் நம்மை கட்டிப்போடுகிறார். இயக்குனர் மிஷ்கின். காவல்துறையினராக காட்டப்படும் கதாபாத்திரங்களை படு நேர்த்தியாக கையாண்டிருக்கிறார்.

ஒரு தோளில் அம்மா மறு தோளில் குழந்தை என்று படம் முழுதும் தூக்கிக் கொண்டு ஓடும் மிஷ்கினின் பரிதாப தோற்றம் நம் நெஞ்சை கனக்க வைக்கிறது. கல்லறை தோட்டத்தில் அவர் குழந்தைக்கு கதை சொல்லும் காட்சியில் சிறந்த நடிகராக மின்னுகிறார். மிஷ்கினுக்கு அறுவை சிகிச்சை செய்யும் புதுமுகம் ஸ்ரீ பல்வேறு இடங்களில் ஜொலிக்கிறார். ”எட்வர்ட் அண்ணா” என்று அழைக்கும் குட்டி பொண்ணு மிரட்சியும், பயமும் விழிகளில் காட்டி நடித்து அசத்துகிறது.

மிஷ்கின் என்ற படைப்பாளியின் மனசாட்சியாக மாறி கதையை நகர்த்துவது இசையும், ஒளிப்பதிவும். இளையாராஜாவை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே நிறைய இடங்களை காட்சியில் விட்டு வைத்திருக்கிறார். ராஜாவின் இசை படத்திற்கு முதுகெழும்பு. க்ளைமாக்சில் மிஷ்கின் சரிந்து விழும் காட்சியில் அதுவரை திகிலூட்டி பதறிய மொத்த வயலினும் சட்டென்று அறுந்து மவுனமாவது அற்புதம். அந்த உழைப்பிற்கு நன்றியாக ’முன்னனி இசை கோர்ப்பு’ என்று டைட்டிலில் விசுவாசம் காட்டியிருக்கிறார் மிஷ்கின்.

கலை இயக்குனரும், எடிட்டரும் கன கச்சிதமாக தங்கள் பணியை செய்திருக்கிறார்கள். முந்தைய படங்களில் இழந்ததை மீட்டியிருக்கும் மிஷ்கின் எந்த இடத்திலும் சமரசம் செய்துகொள்ளாமல் தானே நடித்து ’படைப்பு செருக்கு’ள்ள படைப்பாளி என்பதை காட்டியிருக்கிறார்.

சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை நிரூபிக்கும் விதமாக படத்தில் வசனங்களே இல்லை. காவல்துறை சல்லடை போட்டு தேடிக் கொண்டிருக்கும் போது மிஷ்கின் குடும்பம் மட்டும் தனியாக உலவுவது, மேஜர் ஆபரேசன் செய்யப்பட்ட ஒருவர் எழுந்து நடமாடவே ஒரு வருடம் ஆகும்போது ஓடி, உருண்டு, அடிவாங்கி, மிஷ்கின் காமடி பண்ணுகிறார். போதா குறைக்கு சிறுநீர் பையோடும், இரண்டு பாடிகார்ட் சகிதமாக வில்லன் சுற்றி சிரிக்க வைக்கிறார். மிஷ்கினுக்கு காவல்துறை மேல் அப்படி என்ன தான் கோபமோ பல இடங்களில் நய்யாண்டி செய்திருக்கிறார். இப்படி சில இடங்களில் திருஷ்டி பரிகாரங்கள். இதையெல்லாம் தாண்டி மனதை பாதிக்க வைக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.

வித்தியாசமான படங்களை தூக்கிவைத்துக் கொண்டாடும் இன்றைய தலைமுறை நிச்சயம் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தையும் கவனிக்கும்.

ஓநாய்க்கும் ஆட்டுக்குட்டிக்கும் கண்டிப்பாக விருது நிச்சயம்.

தேனி கண்ணன்.

Leave A Reply

Your email address will not be published.