‘எங்கேயும் எப்போதும்’ படத்தை தொடர்ந்து தான் இயக்கியுள்ள ‘இவன் வேற மாதிரி’ படம் ஆக்ஷன் படங்களிலேயே வேற மாதிரி இருக்கும் என்கிறார் சரவணன். இந்தப்படத்தில் க்ளைமாக்ஸில் இருபது நிமிடம் ஆக்ஷனில் மிரட்டியிருக்கிறாராம். சாம்பிளுக்கு 18 மாடி கட்டடம் ஒன்றின் மொட்டை மாடியில் தான் சண்டைக்காட்சியை படமாக்கிய விதத்தை நமக்கு போட்டுக்காட்டினார்.
உண்மையிலேயே மிரட்டல்தான். இந்த சண்டைக்காட்சிக்காக ஹெலிகேம் ஒன்று தேவைப்பட, வெளிநாட்டிலிருந்து அதை தருவித்து படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார் சரவணன். இத்தனைக்கும் அந்த கேமராவுக்கு ரிகர்சல் ஒருநாள், படப்பிடிப்பு ஒருநாள் என இரண்டுநாட்கள் மட்டுமே வேலை. ஆனாலும் காட்சியின் முக்கியத்துவம் கருதி செலவை பார்க்காமல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து தந்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ்.
சரவணனின் முந்தைய படத்தில் அஞ்சலி, அனன்யா என இருவருமே விதவிதமான நடிப்பில் வெளுத்து வாங்கினார்கள். அதேபோல இந்தப்படத்தின் கதாநாயகி சுரபிக்கு நடிப்புடன் ஆக்ஷன் காட்சிகளிலும் பங்கு உண்டாம். குறிப்பாக க்ளைமாக்ஸில் நடிகைகள் யாரும் செய்யத் தயங்குகின்ற ஒரு காரியத்தை ரிஸ்க் எடுத்து செய்திருக்காராம் சுரபி.
எல்லோருமே தவறு கண்டு கொந்தளிக்கிறோம். ஆனால் அத்துடன் சரி என எதுவும் செய்யாமல் ஒதுங்கி ஒதுங்கிப்போனால், அப்புறம் அதை யார் தான் சரி செய்வது?. அப்படி சரி செய்ய இறங்கும் ஒருவனின் கதைதான் ‘இவன் வேற மாதிரி’. கும்கியில் பார்த்த விக்ரம் பிரபுவை இதில் வேறமாதிரி பார்க்கலாம் என ட்ரெய்லரே சொல்கிறது.
வில்லனாக நடித்திருக்கும் தெலுங்கு நடிகர் வம்சிக்கும் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் கணேஷ் வெங்கட்ராமுக்கும் இந்தப்படம் ஒரு ஏணிப்படியாக இருக்கும் என்று சொல்கிறார் சரவணன். 2012ல் வெளியான ‘வேட்டை’ படத்திற்கு பிறகு திருப்பதி பிரதர்ஸுடன் யுடிவி கைகோர்த்து தயாரித்திருக்கும் இந்தப்படம் வரும் டிசம்பர் 13ஆம் தேதி ரிலீஸாகிறது. ஒரு ஆக்ஷன் விருந்துக்கு தயாராக இருங்கள்.