சூர்யாவைத் தொடர்ந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு அமைப்பில் தன்னையும் இணைத்துக்கொண்டுள்ளார் அனுஷ்கா. சித்தார்த்தும் ஸ்ருதிஹாசனும் ஏற்கனவே இந்த அமைப்பில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளனர். இப்போது அனுஷ்காவும்.
மேலும் மற்ற சில நடிகர்களுடன் சேர்ந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய அனிமேஷன் படம் ஒன்றில் அனுஷ்காவும் நடித்திருக்கிறார். அனுஷ்கா இந்த அமைப்பில் இணைந்ததன் பின்னணியில் பல சுவராஸ்யங்கள் இருக்கின்றன. இதோ அதுபற்றி அவரே என்ன சொல்கிறார் என கேட்போமே.
“நான் ரொம்பவே கண்டிப்பான குடும்பத்தில் இருந்து வந்தவள். அதனால் பள்ளியிலோ, கல்லூரியிலோ எய்ட்ஸ் குறித்து பேசலாமா கூடாதா என்றுகூட எனக்கு தெரியாது. அதன்பிறகு பல வருடங்களுக்கு முன்பு இரண்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு அமைப்புகளில் சேர்ந்து பணியாற்றி இருக்கிறேன். ஆனால் அப்போதெல்லாம் அவர்களுக்கு தரப்படும் உணவை அவர்களுடன் சேர்ந்து சாப்பிடக்கூட நான் தயங்கினேன். காரணம் அப்போது எனக்கு எய்ட்ஸ் விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை. ஆனால் இப்போது அதை நினைத்தால் சங்கடமாக இருக்கிறது.
அதன்பின் எந்த அமைப்புகளிலும் என்னை நான் இணைத்துக்கொள்ளவில்லை. காரணம் ஒரு செயலை தொடர்ந்து பின்பற்றுவது என்பது அப்போது எனக்கு கடினமாகவும் ஏன்.. சோம்பேறித்தனமாகவும் கூட இருந்தது. ஆனால் இப்போது எய்ட்ஸ் குறித்த அறிவு எனக்கு இருக்கிறது. நான் முழு மனதுடன் எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தயாராக இருக்கிறேன்” என்கிறார் அனுஷ்கா.