முன்பெல்லாம் பாடல்களில் இருந்து ஒரு கேட்சிங்கான வரியை எடுத்து படத்துக்கு டைட்டில் வைத்தார்கள். இப்போது ஹிட்டான ஒரு காமெடி டயலாக்கை, படங்களுக்கு டைட்டிலாக வைப்பது புது ட்ரெண்ட் ஆகிவிட்டது. அந்தவகையில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் சந்தானம் பேசிய ‘நீயெல்லாம் நல்லா வருவடா’ என்ற டயலாக்கையே ஒரு படத்தின் பெயராக வைத்திருக்கிறார்கள்.
இயக்குநர் சீமான் மற்றும் சுசிகணேசனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய நாகேந்திரன் இந்தப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’ போன்ற படங்களை தயாரித்த புன்னகைப்பூ கீதா, எஸ்.ஜி.பிலிம்ஸ் மற்றும் கிளாப் சினிமாஸ் உடன் இணைந்து தயாரிக்கிறார்.
இந்தப்படத்தில் விமலும், இயக்குனர் சமுத்திரக்கனியும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். வெளிநாடுவாழ் தமிழ்ப்பெண்ணான அமிர்தா ஹீரோயினாக அறிமுகமாகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். காமெடி கலந்த ஆக்ஷன் படமாக உருவாக இருக்கும் இந்தப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் விரைவில் தொடங்க இருக்கிறது.