குடி குடியைக் கெடுக்கும்’ – இந்தக்கருத்தை கைலாயத்திற்கும் பாங்காங்கிற்கும் முடிச்சுபோட்டு காமெடியாக சொல்ல முடிந்தால் அதுதான் ‘நவீன சரஸ்வதி சபதம்’.
ஜெய், சத்யன், வி.டி.வி.கணேஷ், ராஜ்குமர் நாலுபேரும் நண்பர்கள். லேகிய டாக்டரான ஜெய், நிவேதா தாமஸை காதலிக்கிறார். காதலும், கூடவே கல்யாணமும் ஈஸியாக கைகூடுகிறது. கல்யாணத்திற்கு முன் பேச்சிலர் பார்ட்டி கொண்டாட பாங்காங் செல்கிறது இந்த நால்வர் அணி. சென்ற இடத்தில் திடீரென ஆளே இல்லாத தீவில் மாட்டிக்கொள்கின்றனர். அவர்களை தீவுக்கு கொண்டுபோனது யார்? அங்கிருந்து மீண்டு(ம்) திரும்பி வந்தார்களா? என்பதை ஃபாண்டஸி, நையாண்டி கலந்து சொல்லியிருக்கிறார்கள்.
சித்தா டாக்டராக வரும் ஜெய்யின் கேரக்டர் நிச்சயம் புதுசு. அவருக்கு சொல்லியா கொடுக்கவேண்டும். காதல், காமெடி என ரவுண்டு கட்டுகிறார். கூடவே சத்யன், விடிவி.கணேஷ், ராஜ்குமார் என நால்வரும் சேர்ந்து தீவில் மாட்டிக்கொண்டபின் நடப்பவை அனைத்தும் காமெடி கலாட்டா தான்.
வி.டி.வி.கணேஷ் நன்றாகவே ஸ்கோர் பண்ணுகிறார். தலையில் அடிபட்டு நினைவுகளை மறப்பது, தங்களை காப்பாற்ற வந்தவர்களை குடிபோதையில் விரட்டிவிட்டு அப்புறம் முழிப்பது என கதையை தன் பங்கிற்கு கொஞ்சநேரம் சுமக்கிறார். எம்.எல்.ஏ.வாக வரும் சுவாமிநாதனும் அவரது மகனாக வரும் சத்யனும் வசனங்களிலேயே விளியாடுகிறார்கள்.
கதாநாயகி நிவேதா தாமஸுக்கு படம் ஆரம்பித்த அரைமணிநேரம் மட்டுமே வேலை.. இடையில் ஒரு கனவுப்பாட்டிலும் க்ளைமாக்ஸிலும் மட்டுமே வருவதால் அவருக்கு தன் திறமையைக் காட்ட பெரிதாக் ஸ்கோப் இல்லை.
சித்த வைத்தியரான சித்ரா லட்சுமணன், வரும் காட்சிகளில் எல்லாம் சிரிப்பதற்கு உத்தரவாதம் தருகிறார். சிவபெருமானாக பஞ்சு.சுப்பு, பார்வதியாக தேவதர்ஷினி, நாரதராக மனோபாலா என எல்லோருமே பொருத்தமான தேர்வுதான். அதிலும் லேட்டஸ்ட் டெக்னாலஜியை வைத்துக்கொண்டு கைலாயத்தில் நடக்கும் கலாட்டாக்கள் நல்ல கற்பனை.
வெங்கட்பிரபு இயக்குனராகவே சில காட்சிகளில் நடித்திருக்கிறார். “இதுவரை கதையே இல்லாமல் படம் எடுத்தேன்..இனி கதையோடு படம் எடுக்கிறேன்” என தன்னையே கலாய்ப்பதும், “பிரேம்ஜி படங்களைப் பார்த்து நடிப்புக் கத்துக்கோ” என ராஜ்குமாருக்கு அட்வைஸ் கொடுப்பதுமாக காமெடி சரங்களை கொளுத்திப்போடுகிறார்.
புதுமுகம் பிரேம் இசையில் இரண்டு பாடல்கள் இனிமை. ஜே.ஆனந்தின் ஒளிப்பதிவில் நாமே அந்த தீவிற்கு சென்று மாட்டிக்கொண்டாற்போல பிரமை ஏற்படுகிறது.
ஹைடெக் வசதிகள் கொண்ட கைலாயத்தில் படம் ஆரம்பிக்கும்போதே இது இன்னொரு ‘தமிழ்படம்’ஆக இருக்குமோ நம்மை நினைக்க வைகிறது. ஆனால் கொஞ்ச நேரத்தில் அப்படியே சிவபெருமான் நடத்தும் நவீன திருவிளையாடல் பாணியில் வேறு பாதையில் பயணிக்கிறது கதை.
குடி தான் இத்தனை கஷ்டங்களுக்கும் காரணம் என்பதை இந்த நால்வரும் உணர்வதற்கு இன்னும் அழுத்தமான காட்சிகளை வைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அதேபோல குடிப்பவர்களை திருத்த சிவபெருமான் ஆடும் திருவிளையாடலை, உலகத்தில் குடியே இல்லாமல் செய்ய அவர் ஆடும் ஆட்டமாக வைத்திருந்தால் இன்றைய ஜனங்களின் மனதை எளிதில் தொட்டிருக்கும். இருந்தாலும் தனது முதல் படத்தில் குடிக்கு எதிராக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, அதே சமயம் நகைச்சுவையாக படத்தை கொண்டு சென்றிருக்கும் இயக்குனரை பாராட்டலாம்.