‘பாண்டியநாடு’ தந்த வெற்றியின் உற்சாகத்தோடு பரபரப்பாக ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் நடித்துவருகிறார் விஷால். தற்போது மகாபலிபுரம் அருகில் மிகப்பிரம்மாண்டமான சர்ச் செட் ஒன்றை இந்தப்படத்திற்காக அமைத்திருக்கிறார்கள்.
பருத்திவீரன், ஆடுகளம் படங்களின் ஆர்ட் டைரக்டரான ஜாக்கி தான் இதை 25 லட்சம் ரூபாய் செலவில் நிர்மாணித்திருக்கிறார். முழுதும் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ள இந்த சர்ச்சின் பின்னணியில் பாடல்காட்சி ஒன்றை படமாக்க இருக்கிறார்கள். மூன்றுவித வண்ணங்களின் பின்னணியில் இந்தப்பாடல் காட்சியை படமாக்க இருக்கிறார்கள்.
கிறிஸ்துமஸ் வருவதையொட்டி தங்களது பகுதியில் புதிதாக ஒரு சர்ச் எழுந்திருப்பதை பார்த்து, அந்தப்பகுதிவாசிகள் ஆச்சர்யத்துடன் சந்தோஷமும் அடைந்திருக்கிறார்கள். அதனால் கிறிஸ்துமஸ் தினத்திற்கு முன்னதாகவே படப்பிடிப்பு முடிந்தாலும் கூட செட்டை சில நாட்களுக்கு பிரிக்காமல் அப்படியே விட்டுவைக்க முடிவு செய்திருக்கிறார்களாம் படக்குழுவினர்.