‘மகதீரா’, ‘நான் ஈ’ என முந்தைய ஹிட்டுக்களின் வெற்றிகளை தலைக்குமேல் தூக்கி வைத்துக் கொண்டாடாத இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, தற்போது தெலுங்கில் ‘பாஹூபாலி’ என்ற சரித்திரப்படத்தை இயக்குவதில் மும்முரமாக இருக்கிறார்.
‘ரிபெல் ஸ்டார்’ பிரபாஸ், அனுஷ்கா ஜோடியாக நடிக்கும் இந்தப்படத்தில் ராணா டகுபதி வில்லனாக நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜும் ஒரு பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தில் நடிக்கும் நட்சத்திர நடிகர்களின் பட்டியல் அனுமார் வால் போல நாளுக்கு நாள் நீண்டுகொண்டே போகிறது.
தான் இயக்கிய ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்த சுதீப்புக்கும் இந்தப்படத்தில் அட்டகாசமான கேரக்டர் ஒன்றை தந்திருக்கிறார் ராஜமௌலி. அதேபோல இன்னொரு முக்கியமான ராஜமாதா கேரக்டரில் ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். கொஞ்சம் வில்லித்தனமான கேரக்டரும் கூட.
இப்போது இந்தப்பட்டியலில் தமன்னாவும் இணைந்திருக்கிறார். இந்தப்படத்தில் பிரபாஸுக்கு பாஹுபாலி, சிவுடு என இரண்டு வேடங்கள். பாஹுபாலி கேரக்டருக்கு ஜோடியாகத்தான் தேவசேனா கதாபாத்திரமான அனுஷ்கா நடிக்கிறார். இன்னொரு கேரக்டரான சிவுடுவிற்கு ஜோடியாக தற்போது தமன்னாவை ஒப்பந்தம் செய்துள்ளார் ராஜமௌலி. ‘ரிபெல்’ படத்தை தொடர்ந்து பிரபாஸுடன் தமன்னா நடிக்கும் இரண்டாவது படம் இது.