யுடிவி தயாரிக்கும் மலையாள படங்கள் – ஒரு முன்னோட்டம்

58

மலையாளத் திரையுலகில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ள யுடிவி நிறுவனம் தற்போது அங்கே தயாராகி வரும் ஐந்து படங்களுடன் ஒரே நேரத்தில் இணைந்திருக்கிறது. அந்த ஐந்து படங்களைப் பற்றிய ஒரு முன்னோட்டத்தை இப்போது பார்க்கலாம்.

கூத்தரா
சூப்பர்ஸ்டார் மோகன்லால் நடித்துவரும் த்ரில்லர் படம்தான் ‘கூத்தரா’. இந்தப்படத்தை இயக்குபவர் ஸ்ரீநாத் ராஜேந்திரன். இவர் தான் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானை, தான் இயக்கிய முதல் படமான ‘செகண்ட்ஷோ’வில் ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர். இவரது இரண்டாவது படம் தான் இந்த ‘கூத்தரா’.

இந்தப்படத்தில் நம்ம பரத் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். பரத் மலையாளத்தில் நடிக்கும் இரண்டாவது படமும் இதுதான். இதுதவிர 1980களில் தமிழ்சினிமாவில் கதாநாயகியாக நடித்த ரஞ்சனி நீண்ட இடைவெளிக்குப்பின் இந்தப்படத்தில் நடிக்கிறார்.

பைசைக்கிள் தீவ்ஸ்
இந்தப்பெயரில் ஏற்கனவே ஆங்கிலத்தில் ஒரு சூப்பர்ஹிட் படம் வெளியாகியுள்ளது அனைவருமே அறிந்த விஷயம் தான். மலையாள சினிமாவில் வளர்ந்துவரும் நடிகரான ஆசிஃப் அலி கதாநாயகனாக நடிக்கும் மலையாள படம் தான் இந்த ‘பைசைக்கிள் தீவ்ஸ்’. இந்தப்படத்தில் ஆசிஃப் அலியும் அவரது நண்பர்களும் சைக்கிள் திருடர்களாக நடித்திருக்கிறார்கள்.

சைக்கிள்களை திருடி விற்று அதன்மூலம் வரும் வருமானத்தில் வாழ்க்கைய நடத்திவருகிறார்கள். இதில் ஆசிஃப் அலி மனிதநேயமுள்ளவராக, தான் திருடினாலும் அதில் முக்கால்வாசி வருமானத்தை ஏழைகளுக்காக செலவிடுபவராக நடித்திருக்கிறார்.

ஆசிஃப் அலிக்கு ஜோடியாக அபர்ணா கோபிநாத் நடிக்கிறார். இந்தப்படத்தை ஜிஸ் ஜாய் என்பவர் இயக்குகிறார். 1990ல் மம்முட்டி நடித்த ‘கலிக்காலம்’ படத்தின் அடிப்படையாக்கொண்டு இந்தப்படத்தை உருவாக்கி வருகிறார் ஜிஸ் ஜாய்.

பௌர்ணமி
சாலைகளில் நடைபெறும் கதையாக உருவாகி வருகிறது இந்த ‘பௌர்ணமி’ திரைப்படம். இந்தப்படத்தில் சன்னி வெயின் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக டோவினோ தாமஸ் நடிக்கிறார். இந்தப்படத்தின் படப்பிடிப்பை இந்தியாவில் உள்ள ஏழு மாநிலங்களில் நடத்துகிறார்கள்.

முதல்கட்ட படப்பிடிப்பை தலைநகர் டெல்லியில் ஆரம்பித்து மணாலியில் முடித்திருக்கிறார்கள். இரண்டாம்கட்ட படப்பிடிப்பை இமயமலைப்பகுதியில் உள்ள லடாக் பகுதியில் படமாக்க இருக்கிறார்கள். இந்தப்படத்தை ஆல்பி என்பவர் இயக்குகிறார்.

நிக்காஹ்
திருமணத்தை மையமாக வைத்து காமெடியாக உருவாகிவரும் ஒரு பொழுதுபோக்கு படம் தான் ‘நிக்காஹ்’. இந்த படத்தில் ஸ்ரீநாத் பாஸியும் சேகர் மேனனும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்தப்படத்தை இயக்குபவர் ஆசாத். இவர் பிரபல மலையாள இயக்குனர்களான அமல்நீரத் மற்றும் ஜெயராஜ் ஆகியோரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்.

ரஷ்புதின்
இதுவும் ஒரு ரொன்மாண்டிக் காமெடி கலந்த பொழுதுபோக்கு படம் தான். வினய் ஃபோர்ட், ஸ்ரீநாத் பாஸி, அஜு வர்கீஸ், வந்தனா ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தை ஜினு ஜி.டேனியல் இயக்கியுள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு மே மாதமே முடிந்துவிட்ட நிலையில் ரிலீஸுக்காக காத்திருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.