
பள்ளிக்குழந்தைகளை கையாளுவதில் மிகுந்த கவனம் தேவை என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது இந்த ‘குற்றம் கடிதல்’.. சக மாணவிக்கு அவள் பிறந்தநாள் பரிசாக முத்தம் கொடுத்த மாணவனை (சிறுவன் தான்) கண்டிக்கிறார் டீச்சர்.. உங்களுக்கும் பிறந்தநாள் என்றால் முத்தம் தருவேன் என மாணவன் விளையாட்டாக சொல்ல அவனை ஓங்கி அடிக்கிறார் டீச்சர்.
மயங்கிவிழும் மாணவனின் உடல் நிலை ஐ.சி.யூவில் சேர்க்கும் அளவுக்கு சீரியஸ் ஆகிறது.. பள்ளி நிர்வாகத்தின் உத்தரவுப்படி கணவரை அழைத்துக்கொண்டு வேறு ஊருக்கு தலைமறைவாக கிளம்புகிறார் டீச்சர்.. பாதி வழியில் குற்ற உணர்வு மேலிட மனம் கேட்காமல், திரும்பி வந்து சிறுவனின் தாயின் காலடியில் விழுந்து கதறுகிறார். சிறுவனின் நிலை என்ன..? டீச்சரின் கதி என்ன..? இரண்டுக்கும் சேர்த்து இனிய விடை சொல்கிறது க்ளைமாக்ஸ்.
மெர்லின் டீச்சர் கதாபாத்திரத்திற்கு தனது யதார்த்தமான நடிப்பால் உருவமும் உயிரும் கொடுத்திருக்கிறார் ராதிகா பிரசித்தா. பையனை அடித்துவிட்டு, குற்ற உணர்வால் தவிப்பதும், பிரச்சனையை கண்டு ஒதுங்கி ஓடாமல் அதை எதிர்கொள்ள தயாராவதும் என முதல் படத்திலேயே கனமான கதாபாத்திரத்தை அசால்ட்டாக பண்ணியிருக்கிறார்.. குழந்தையின் தாய், தனது பையனின் இந்த நிலைக்கு காரணமான டீச்சரை கட்டியணைத்து ஆறுதல் சொல்லும்போது, மனிதரில் தெய்வமாகத்தான் தெரிகிறார்.
டீச்சரின் கணவராக வரும் சாய் ராஜ்குமார், பையனின் மாமனாக வரும் பாவெல் நவகீதன், பள்ளி நிறுவனராக வரும் குலோத்துங்கன் என அனைவருமே மிகச்சரியாக வார்த்தெடுக்கப்பட்ட பாத்திர படைப்புகள். மாணவனுக்கு என்ன ஆகுமோ, டீச்சருக்கு என்ன நேரமோ என படத்தின் இறுதிவரை விறுவிறுப்பை தக்கவைத்திருக்கிறார் இயக்குனர் பிரம்மாஜி.
ஆசிரியர் அடித்ததில் மாணவன் மரணம், பிரம்பால் தாக்கியதில் மாணவனின் கண்பார்வை பறிபோனது என அவ்வப்போது மனதை பகீரிட வைக்கும் செய்திகளின் உக்கிரம் இந்தப்படத்தை பார்க்கும்போது கண்ணில் அறைகிறது. இன்றைய சூழலில் மனநிலையில் சராசரிக்கும் கீழேயுள்ள ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் ஒருமுறை பார்த்து தங்களை சீர்திருத்திக்கொள்ள வேண்டிய படம்.. இல்லையில்லை பாடம் தான் இந்த ‘குற்றம் கடிதல்’.
Comments are closed.