1990களில் தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் தனது நடிப்புக்கு தீனிபோடும், சவாலான வேடங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துக் கொண்டவர் கௌதமி. சமீபத்தில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துகொண்ட கௌதமி, “மலையாளப்படங்களில் நான் நடித்தவலுவான கேரக்டர்கள் தான், புற்றுநோயால் நான் பாதிக்கப்பட்டபோது அதை தாங்கி, எதிர்த்து நிற்கும் வலிமையை எனக்குத் தந்தன” என்று கூறியிருக்கிறார்.
35 வயதில் புற்றுநோய்க்கு எதிராக போராடி வென்ற கௌதமி, கமல் குறித்து கூறும்போது, “அந்த சோதனையான காலகட்டத்தில் கமல் ஒரு தூணைப்போல எனக்கு உறுதுணையாக இருந்தார். தசாவதாரம் படத்திற்கு உன்னால் காஸ்ட்யூம் டிசைனிங் பார்க்க முடியுமா என்று கேட்டபோது, இரண்டாவது யோசனைக்கே இடமில்லாமல் உடனே சரி என்று சொன்னேன்” என கமலின் கைகளை பிடித்துக்கொண்டு மீண்டும் தான் சினிமாவில் நுழைந்த கதையை நெகிழ்ச்சியுடன் ஞாபகப்படுத்தினார் கௌதமி. மேலும் மீண்டும் தான் மலையாள சினிமாவில் விரைவில் நடிக்க இருப்பதாக சூசகமான ஒரு தகவலையும் தெரிவித்தார் கௌதமி.