மக்கள் கவிஞர் – மறக்க முடியாத நினைவுகள்..!

65

வாழ்ந்தது இருபத்தொன்பது வயதுவரைதான். அதிலும் சினிமாவில் பணியாற்றியதோ ஐந்து வருடங்கள் மட்டுமே. ஆனாலும் தமிழ்சினிமாவில் பலவருடங்கள் கோலோச்சி நின்று தங்களது தனித்தன்மையை நிரூபித்துக் காட்டிய ஜாம்பவான்கள் மத்தியில் தான் வாழ்ந்த குறைந்த காலத்திலேயே காலம் உள்ளளவும் தனது பெயரை அழியாத கல்வெட்டாய் ஆழப்பதித்துச் சென்றவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். இன்று அவரது 54வது நினைவு நாள்.

1930ல் பட்டுக்கோட்டை அருகில் உள்ள செங்கம் படைத்தான்காடு கிராமத்தில் பிறந்த பட்டுக்கோட்டையார் முதன்முதலில் கவிதை எழுதுத ஆரம்பித்தபோது அவருக்கு வயது பதினான்கு. இவரது தந்தை அருணாசலக் கவிராயரும் கவிஞர் என்பதால் இவருக்கும் கவிதை ரத்தத்திலேயே ஊறியிருந்தது. பொதுவுடமைச் சிந்தனைகள் அவரிடம் மேலோங்கியிருந்ததால் சுயமரியாதை இயக்கக் கூட்டங்களிலும் கம்யூனிஸ்ட் கூட்டங்களிலும் பங்கேற்றுப் பாடிவந்தார்.

பாவேந்தர் பாரதிதாசனை தனது மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட பட்டுக்கோட்டையார் பாண்டிச்சேரிக்கு வந்து பாரதிதாசனைச் சந்தித்து அவரிடம் மாணவராகச் சேர்ந்து அவர் நடத்திவந்த ‘குயில்’ இதழை வெளியிடும் பணிகளில் ஈடுபட்டார்.

பட்டுக்கோட்டையாரின் திருமணம்கூட பாரதிதாசனின் தலைமையில்தான் நடைபெற்றது. அதன்பின்னர் அவரை அழைத்துவந்து மார்டன் தியேட்டர்ஸில் பாட்டெழுத சேர்த்துவிட்டார் பாரதிதாசன். பட்டுக்கோட்டையாரின் சினிமாப்பிரவேசத்திற்கு பிள்ளையார்சுழி போடப்பட்ட்து இங்கேதான். இவர் சினிமாவில் நுழைந்த காலகட்டத்தில்தான் புராணப்படங்களின் ஆதிக்கம் குறைந்து சமூகப்படங்களின் வரவு தலைதூக்கவும், பாடல்களில், வசனங்களில், நடிப்பில் மாற்றங்கள் உருவாகவும் ஆரம்பித்திருந்தன.

இவர் முதன்முதலில் பாடல் எழுதிய படம் படித்த பெண். ஆனாலும் இரண்டாவது படமான மகேஸ்வரி முந்திக்கொண்டு 1955ல் ரிலீஸானது. இவர் பாடல் எழுத ஆரம்பித்த நேரத்தில் உடுமலை நாராயணகவி, கண்ணதாசன், மருதகாசி போன்றவர்கள் வலுவான இடத்தில் இருந்தனர்.

ஆனாலும் பட்டுக்கோட்டையாரின் பாடல்வரிகள் இவர்கள் யாருக்கும் போட்டியாக இல்லாமல் நாடோடி மரபோடும் முற்போக்கு கருத்தோடும் தனிப்பாதையில் நடைபோட ஆரம்பித்தன. திரையுலகம் அவரைத் தன் தோள்களில் பெருமையுடன் தூக்கிவைத்துக்கொண்டது. பட்டுக்கோட்டை பாட்டுக்கோட்டை ஆனார்.

எம்.ஜி.ஆர், சிவாஜி நடித்த படங்களில் இவர் பாடல் எழுத ஆரம்பித்தபின் அவருக்கு வெற்றிமேல் வெற்றி குவிய ஆரம்பித்தது. ‘சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா’., ‘ தூங்காதே தம்பி தூங்காதே’, ‘திருடாதே பாப்பா திருடாதே ’, குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்’என எம்.ஜி.ஆருக்கு இவர் எழுதிய பாடல்கள் அரசியல் அரங்கில் எம்.ஜி.ஆர் வெற்றிநடை போட ரத்தினக்கம்பளம் விரித்தன.

தூங்காதே தம்பி தூங்காதே பாட்டைக் கேட்டு பல தமிழர்கள் தங்களது நீண்டநாள் அறியாமை உறக்கம் கலைந்து கண்விழிக்க ஆரம்பித்தார்கள். இன்னும் சொல்லப்போனால் பட்டுக்கோட்டையாரின் பாடல்கள் எம்.ஜி.ஆருக்கு சினிமாவிலும் அரசியலிலும் ஒரு புதிய தோற்றத்தை வடிவமைத்துக் கொடுத்தன என்றுகூட சொல்லலாம்.

திரையுலகில் நுழையும் யாரும் ஏதோ ஒருகட்டத்தில் சில சமரசங்கள் செய்து கொள்வது வாடிக்கையான ஒன்றுதான்.. ஆனால் இசைக்கு ஏற்ப பாடல் எழுதும் நிலையிலும் தனது அடையாளத்திலிருந்து பட்டுக்கோட்டையார் ஒருபோதும் விலகி நிற்கவில்லை.

பட்டுக்கோட்டையின் பாடல்களில் நகைச்சுவை, கேலி, கிண்டல் எல்லாமே ஆங்காங்கே விரவிக்கிடக்கும். ‘சும்மா கிடந்த நிலத்தைக் கொத்தி’, ’ஆடைகட்டிவந்த நிலவோ, ‘வாடிக்கை மறந்தது ஏனோ’, ‘என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே’ ‘உன்னைக்கண்டு நானாட’ ‘துள்ளாத மனமும் துள்ளும்’ என எல்லாவிதமான பாடல்களிலும் முத்திரை பதித்தவர் பட்டுக்கோட்டையார்.

1959-ம் வருடம் தனது இருபத்தொன்பது வயதிலேயே மரணத்தை தழுவிய பட்டுக்கோட்டையார் சினிமாவில் தான் பணியாற்றிய ஐந்து வருடங்களில் மட்டும் ஐம்பத்தேழு படங்களில் மொத்தம் இருநூற்று அறுபத்தியிரண்டு பாடல்களை எழுதியிருக்கிறார்.

1981ல் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தபோது மறைந்த பட்டுக்கோட்டையாருக்கு தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கி அவரை கௌரவப்படுத்தினார். 1993ல் முதலமைச்சர் ஜெயலலிதா அவரது பாடல்களை நாட்டுடமை ஆக்கினார். 2000-ம் ஆண்டில் அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதி பட்டுக்கோட்டையில் அவருக்கு மணிமண்டபம் அமைத்து தமிழர்களின் நீண்டநாள் ஏக்கத்தை தீர்த்துவைத்தார்.

பட்டுக்கோட்டையார் ஒரு தன்னிகரற்ற கவிஞர். அவர் இன்னும் ஒரு ஐம்பது வருடங்களாவது வாழ்ந்திருக்கவேண்டும். ஆனாலும் சமத்துவ நோக்குடன் பாட்டாளி வர்க்கத்தை முன்னிறுத்தி அவர் எழுதிய பாடல்கள் மூலம் இன்றளவும் பட்டுக்கோட்டையார் நம்முடன் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.

Comments are closed.