
இதுவரை ரஜினி படங்களுக்கு இல்லாத மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கும் ‘கபாலி’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்தி இருக்கிறதா..?
மலேசிய சிறையில் இருந்து 25 வருடங்கள் சிறைத்தண்டனை முடிந்து வெளியே வருகிறார் கேங்க்ஸ்டர் ‘கபாலி’ ரஜினி. தனது பழைய குரூப்புடன் மீண்டும் பார்முக்கு வருகிறார். சிறைக்கு அவர் சென்ற அந்த சமயத்திலேயே அவரது கர்ப்பிணி மனைவி ராதிகா ஆப்தே இறந்துவிட்டார் என்கிற தகவல் சொல்லப்படுகிறது. மனைவியின் மரணத்துக்கும் தான் ஜெயிலுக்கு செல்வதற்கும் காரணமான ஒவ்வொருவராக கட்டம் கட்டுகிறார்.
முக்கிய எதிரிகளான கிஷோரும் அவரது கேங் தலைவரான மலேசிய வில்லன் டோனி லீயும் சேர்ந்து ரஜினிக்கு மீண்டும் குடைச்சல் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள். இந்த நிலையில் ரஜினிக்கு மகள் இருப்பதும், பின்னர் மனைவி உயிரோடு இருப்பதும் ரஜினிக்கு தெரிய வருகிறது. ஒருவழியாக பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்றுகூட, அதேசமயம் வில்லன் கேங் ரஜினியை அழிக்க திட்டம் தீட்டுகிறார்கள்.. இந்தமுறை கபாலி முந்திக்கொண்டு பகை முடிக்கிறார்.. ஆனால் இறுதியில்…?
படம் முழுக்கவே நடை, உடை, பாவனை, பேச்சு என இயக்குனர் ரஞ்சித் சூப்பர்ஸ்டாரை டோட்டலாக மாற்றியிருக்கிறார்.. ரஜினியின் தற்போதைய வயதுக்கேற்ற கேரக்டர் என்பதால் அவரது நடிப்பிலும் ஸ்டைலிலும் எந்த குறையும் காணமுடியவில்லை.. ஆக்சன் காட்சிகளில் அதிரடியாக இறங்கியிருக்கும் ரஜினி, தனது மாஸ் இன்னும் அப்படியேதான் இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். அதுதவிர்த்த குடும்ப சென்டிமென்ட் காட்சிகளில் பார்க்கும் ரஜினி நமக்கு புதுசுதான்.
ரஜினியின் மனைவியாக ஓரளவுக்கு சரியாகவே மேட்ச் ஆகியிருக்கிறார் ராதிகா ஆப்தே.. பாப் கட்டிங் தலையுடன் வரும் ‘ஆக்சன்’ தன்ஷிகா, ரஜினியை பார்த்து ‘அப்பா’ என செல்லமாக கொஞ்சும் காட்சிகள் க்யூட்.. ‘மெட்ராஸ்’ ரித்விகாவும் தனது இருப்பை சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஒரு ரவுடி கேங்கின் குரூப்பை அப்படியே பிரதிபலித்திருக்கிறார்கள் வில்லன்களாக வரும் கிஷோரும், மலேசிய வில்லன் டோனி லீயும்.. ரஜினியுடன் கூடவே வரும் விசுவாசி பாத்திரத்தில் நடித்திருக்கும் ஜான் விஜய்க்கு இதில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்.
அட்டகத்தி தினேஷ், கலையரசன், ரித்விகா, மெட்ராஸ் ஜானி, ரமா என ரஞ்சித்தின் டீம் மெம்பர்களுக்கு நல்ல கேரக்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதிலும் ரஜினியின் கையாளாக மாறும் அட்டகத்தி தினேஷின் அந்த விறைப்பு, மிடுக்கு, தடபுடல் காட்டுவது செம… இதுதான் படத்தின் காமெடி காட்சிகளும் கூட. சில காட்சிகளில் மட்டுமே வரும் நாசர், அடியாட்களாக வரும் சம்பத்ராம், மலேசிய போலீஸ் அதிகாரி உதயபானு மகேஸ்வரன், கபாலியிடம் உதார்விட்டு உயிரைவிடும் மைம் கோபி என பலரும் தங்களது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார்கள்..
சந்தோஷ் நாராயணின் இசையில்தான் ஏற்கனவே பாடல்கள் ஹிட்டாகி விட்டனவே. ஆனால் ரஜினி ஆக்சன் மோடுக்கு தயாராகும்போதேல்லாம் பின்னணி இசையால் சும்மா சும்மா ரசிகர்களை உசுப்பேற்றுகிறார்.. முரளியின் செழுமையான ஒளிப்பதிவு மலேசியாவில் நாமே வாழும் பிரம்மையை கொடுக்கிறது.
ரஞ்சித்திற்கு ரஜினியை இயக்குவது கிட்டத்தட்ட ஜாக்பாட் தான். அவர் தனது தரப்பை மிகச்சரியாக செய்திருக்கிறார் என்பதில் ஐயமில்லை. அதேசமயம் ரஜினி ரசிகர்களை திருப்திப்படுத்தவேண்டிய கடமையும் அவருக்கு இருக்கிறது அல்லவா..? அதில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாமோ என்றுதான் படம் முடிந்து வெளிவரும்போது தோன்றுகிறது.
Comments are closed.