மலையாளத்தில் ‘ஆர்டினரி’ என்ற பெயரில் வெளியான சூப்பர்ஹிட் படத்தின் தமிழ் ரீமேக் தான் ‘ஜன்னல் ஓரம்’.
பழனியில் இருந்து பண்ணைக்காடு செல்லும் அரசு பேருந்தின் ஓட்டுநர் பார்த்திபன். அதில் நடத்துனராக வேலைக்கு சேர்கிறார் விமல். சேர்ந்த சில நாட்களிலேயே அந்த அழகிய கிராமத்தோடும் அங்குள்ள பென்ணோடும் காதல் வயப்படுகிறார் விமல். ஆனால் திடீரென நடக்கும் சம்பவம் அவர் வாழ்க்கையையே புரட்டிப்போடுகிறது. அது என்ன சம்பவம்? அதிலிருந்து விமல் மீண்டரா? என்பதுதான் ‘ஜன்னல் ஓரம்’ படத்தின் த்ரில் கலந்த காதல் கதை.
போக்குவரத்துக் கழகத்தில் பல வருடங்கள் வேலை பார்த்த மாதிரியான அனுபவம் தெரிகிறது பார்த்திபன், விமல் இருவரின் நடிப்பிலும். ஓட்டுனராக வரும் பார்த்திபன் காட்சிக்கு காட்சி தனது பேச்சால் கலகலப்பூட்டுகிறார். காதல் காட்சிகளைவிட இடைவேளைக்குப்பின் வரும் காட்சிகளில் விமலின் நடிப்பு நன்றாக இருக்கிறது.
விதார்த்தின் கதாபாத்திரம் தான் எதிர்பாராத ட்விஸ்ட். அது என்ன என்பதை படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். ஆனால் விதார்த் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளார். குறைந்த நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார் ரமணா. பூர்ணாவும், மனிஷா யாதவும் தங்கள் நடிப்பில் கிராமத்து அழகையும் சேர்த்து பிரதிபலித்திருக்கிறார்கள்.
சென்னையில் அமர்ந்து படம் பார்ப்பவர்களுக்கு கூட பழனியில் இருந்து பண்ணைக்காடு மலைக்கு ட்ரிப் போய்வந்த அனுபவத்தைத் தருகிறது அர்பிந்துசாராவின் ஒளிப்பதிவு. மலைப்பிரதேச காட்சிகளில் தியேட்டர் ஏ.சி.யையும் மீறி அவ்வளவு குளுமை. வித்யாசாகரின் இசையில் ‘என்னடி என்னடி ஓவியமே’ பாடல் தாளம் போட வைக்கிறது. ஒரிஜினலான மலையாளத்திற்கும் இசை இவர்தான் என்பதால் தமிழுக்கு ஏற்ப லாவகமாக செயல்பட்டிருக்கிறார்.
மலையாளத்தில் இருந்து அருமையான கதையை தேர்ந்தெடுப்பது பெரிய விஷயமல்ல.. அதை நமது தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி நேட்டிவியுடன் தருவதுதான் கடினம். ஆனால் கரு.பழனியப்பன் சுவராஸ்யமான கதையை தேர்ந்தெடுத்திருப்பதுடன் அதை அழகியல் மாறாமல் அதேசமயம் ரீமேக் என்ற உணர்வு எழாத வண்ணம் நம்ம ஊருக்கு ஏற்ற வகையில் படமாக்கியிருக்கிறார். இந்தப்படத்தின் மூலம் தானும் வெற்றிபெற்று, விமல், விதார்த், பார்த்திபன் மூவருக்கும் இன்னொரு புதிய பாதையை போட்டுத் தந்திருக்கிறார் கரு.பழனியப்பன்.
பார்த்து ரசிக்கவேண்டிய காட்சிகள் படத்தில் நிறைய இருக்கின்றன. ஒருமுறை ‘ஜன்னல் ஓரம்’ அமர்ந்து பயணித்து அந்த சுகமான அனுபவத்தைப் பெற்றுத்தான் பாருங்களேன்.