இப்படை வெல்லும் – விமர்சனம்

102

Ippadai Vellum Review

கௌரவ் நாராயணன் டைரக்சனில் லைகா தயாரிப்பில் உதயநிதி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘இப்படை வெல்லும்’.

சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைபார்ப்பவர் உதயநிதி.. வேலைபோன விபரத்தை, அரசு பஸ் ஓட்டுனரான அம்மா ராதிகாவுக்கு தெரிவிக்காமல், காதலி மஞ்சிமாவின் உதவியுடன் பிரச்சனைகளை சமாளிக்கிறார். மஞ்சிமாவின் போலீஸ் அண்ணன் ஆர்.கே.சுரேஷ் இவர்கள் காதலை தீவிரமாக எதிர்க்கவே, இருவரும் பதிவு திருமணம் செய்ய தயாராகிறார்கள்.

திருமணத்திற்கு முதல்நாள், தனது காரில் எதிர்பாராமல் அடிபட்ட டேனியல் பாலாஜியை, அவர்தான் போலீஸ் தேடிவரும் தீவிரவாதி என தெரியாமல் மருத்துவமனையில் சேர்த்து உதவுகிறார் உதயநிதி. அதேபோல டேனியல் விபத்தில் சிக்குவதற்கு முன்பே அவருக்கு பைக்கில் லிப்ட் கொடுத்து உதவியவர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டான சூரி..

ஹைதராபாத்தில் தாங்கள் தேடிக்கொண்டு இருக்கும் டேனியல் பாலாஜி சென்னையில் குண்டுவெடிப்பை நிகழ்த்த வந்துவிட்டதை அறிந்த போலீஸ், அதற்கு உதயநிதியும் சூரியும் உதவியாக இருப்பதாக தவறாக புரிந்துகொண்டு அவர்களையும் துரத்துகிறது.. இதை சாக்காக வைத்து, உதயநிதியை என்கவுன்டரில் போட்டுத்தள்ள முடிவு செய்கிறார் ஆர்.கே.சுரேஷ்.

உதயநிதியும் சூரியும் இத்தனை களேபரங்களை தாண்டி தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை எப்படி நிரூபிக்கிறார்கள் என்பதும் டேனியல் பாலாஜியின் சதிச்செயல் முறியடிக்கப்பட்டதா என்பதும் மீதிக்கதை..

ஸாப்ட் ஹீரோ-ஆக்சன் ஹீரோ இரண்டுக்கும் இடைப்பட்ட புத்திசாலி ஹீரோவாக இந்தப்படத்தில் மாறியுள்ளார் உதயநிதி. அதனால் அவரது நடிப்பு எங்கேயும் மிகைப்படுத்தல் இல்லாமல் யதார்த்தமாக இருக்கிறது. போலீசாரிடம் சிக்கி, துரத்தலுக்கு ஆளாகும் உதயநிதிக்கு படம் முழுதும் நிற்காமல் ஓடும் வேலைதான்.

சூரிக்கு இதில் காமெடி கலந்த குணச்சித்திர வேடம். முதல் பாதியில் பெரிய வேலையில்லை என்றாலும், இடைவேளைக்குப்பின் அவர் சீரியஸாக செய்யும் செயல்கள் எல்லாம் நமக்கு சிரிப்பை வரவழைப்பதாகவே இருக்கின்றன.

இக்கட்டில் சிக்கிய காதலனுக்கு உதவும் காதலி வேடத்தில் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார் நாயகி மஞ்சிமா.. அவரின் கோபக்கார அண்ணனாக கோபமுகம் காட்டும் ஆர்.கே.சுரேஷ் பொருத்தமான தேர்வு.. தீவிரவாதியாக வரும் டேனியல் பாலாஜியின் வில்லத்தனம் பற்றி சொல்லியா தெரியவேண்டும..? மிரட்டுகிறார் மனிதர். அட.. பஸ் ஓட்டும் ராதிகா… பார்க்கவே புதுசா இருக்கிறாரே..? இவர்களுக்கு இடையே டாக்டராக எம்.எஸ்.பாஸ்கர், கந்துவட்டி ரவிமரியா ஆகியோரும் தங்களது இருப்பை பதிவு செய்துள்ளார்கள்.

பரபர சேசிங் காட்சிகளால் நம்மை பரபரப்பாகவே வைத்திருக்கிறது ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு.. இமான் இசையில் குலேபாவா பாடல் ரிப்பீட் ரகம். குண்டுவைக்கும் கும்பல், ஆள் மாறிப்போவது, போலீஸ் துரத்தல் என வழக்கமான கதை தான் என்றாலும் ரசிகர்களை அதுபற்றி யோசிக்க விடாமல், பெரும்பாலும் லாஜிக்குடன் படத்தை நகர்த்த முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் கௌரவ் நாராயணன்.. தீவிரவாதிகள் தங்களுக்குள் செய்தியை பரிமாறிக்கொள்ளும் முறை, அதைவைத்தே அவர்களை மடக்க முயற்சி செய்யும் யுக்தி என சில இடங்களில் புத்திசாலித்தனமான காட்சிகளால் சபாஷ் சொல்லவும் வைத்திருக்கிறார்.

மொத்தத்தில் இப்படை தோற்கவில்லை என தாராளமாக சொல்லலாம்…

Comments are closed.