உருவானது பாடகர் சங்கம்- வந்தது ராயல்டி பிரச்சனைக்கு முடிவு

94

இசை அமைப்பாளர்கள், பாடலாசிரியர்கள் ஆகியோருக்கு தகுந்த ராயல்டியை ஆடியோ உரிமை பெறும் நிறுவனங்கள் தருவதில்லை என்றும் இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணவேண்டும் என்றும் கடந்த மாதம் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது இணையதள பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதை ஆமோதிக்கும் விதமாக பாடலாசிரியர் வைரமுத்துவும், பாடல்கள் திரைப்படத்தைத் தவிர வேறு துறைகளில் பயன்படுத்தப்படும்போது தங்களுக்கும் அதற்குரிய பங்கு வழங்கப்படுதல் வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து பரவலாக இந்தவிஷயம் திரையுலகில் பேசப்பட்டு வந்தது. தற்போது இதற்கு முடிவு காணும் விதமாக தமிழகத்தில் பாடகர்கள் சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ராயல்டி சம்பந்தமாக சில விதிமுறைகளை இந்த சங்கம் வகுத்துள்ளது. இதன்படி இனி தொலைக்காட்சி, வானொலி, இணையதளம், தொலைபேசி ரிங்டோன் என எந்த வகையிலும் பாடல் ஒலிப்பரப்பினால் ராயல்டி கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். நேரடி இசைக்கச்சேரிகள் சங்கத்தின் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.

பின்னணி பாடகர்கள் அனைவரும் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தால் ராயல்டியை பெறலாம். உறுப்பினர்களாக இல்லாத பின்னணி பாடகர்கள் இந்த சங்கத்தில் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி உறுப்பினர் ஆகலாம். 1963-ல் தொடங்கி பின்னணி பாடிய அனைத்து பாடகர்களுக்கும் ராயல்டி பெற இதில் வாய்ப்பு உள்ளதாம்.

இதுபற்றி பின்னணி பாடகர்கள் என்ன சொல்கிறார்கள்?

எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

“நாங்கள் மக்களின் சந்தோஷத்திற்காகவும், சோகத்திற்காகவும் மட்டுமல்ல, எங்களின் வயிற்றுப்பிழைப்பிற்காகவும் பாடுகிறோம். பாடகர்களுக்கு ராயல்டி தருவதால் பட தயாரிப்பாளர்களுக்கோ, இசையமைப்பாளர்களுக்கோ, பாடலாசிரியர்களுக்கோ எந்த பாதிப்பும் கிடையாது. நாங்கள் யாரிடமும் இருந்து எங்களுக்கு ராயல்டி தாருங்கள் என்று பறிக்கவில்லை. சினிமாவைத் தவிர மற்ற இடங்களில் எங்கள் குரல் பயன்படுத்துவதற்கு ராயல்டி கேட்கிறோம். அவ்வளவுதான்”

கே.ஜே.யேசுதாஸ்

“இசையமைப்பாளர்களுக்கும், பாடலாசிரியர்களுக்கும் வருகிற ராயல்டியில் நாங்கள் பங்கு கேட்கவில்லை. அதற்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை. ஒரு பாடல், பாடகர் மட்டும் பாடினால் உருவாகிவிடாது. அதில் பல இசைக்கலைஞர்கள், கோரஸ் பாடகர்களும் அடங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கும் பிற்காலத்தில் ராயல்டி கிடைக்குமானால் அதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. பல இசையமைப்பாளர்கள், நடிகை, நடிகைகள் பின்னணி பாடகர்களாக இருக்கிறார்கள். அவர்களும் இந்த சங்கத்தில் உறுப்பினராக ஆகலாம். பெரிய பாடகர், சிறிய பாடகர் என்ற வேறுபாடு இங்கு இல்லை. எல்லா பாடகர்களும் சரிசமம்தான்”.

ஏற்கனவே நடிகர்கள், பாடலாசிரியர்கள், இசையமைப்பாளர்கள் ஆகியோருக்கும் ராயல்டியில் பங்கு கிடைக்கும் வகையில் 2012ல் நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மு.விஜயகுமார்

Leave A Reply

Your email address will not be published.