
வருமா..? வராதா..? என கிரிக்கெட் பெட்டிங் மாதிரி சினிமாவிலும் பெட்டிங் கட்டும் அளவுக்கு எதிர்பார்ப்பை உருவாக்கிய சிம்பு நடித்த ‘இது நம்ம ஆளு’ படம் ஒருவழியாக வந்தே விட்டது…. ஆனால் இத்தனை நாள் எதிர்பார்ப்புக்கு இந்தப்படம் உரிய தீனி போட்டுள்ளதா..? பார்க்கலாம்.
சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலைபார்க்கும் சிம்புவுக்கு ஆண்ட்ரியாவுடன் காதல் ஏற்பட்டு, ஒருகட்டத்தில் பிரேக் அப் ஆகிறது. இந்த நேரத்தில் அவரது அப்பா ஜெயபிரகாஷ், சென்னையில் வேலைபார்க்கும் தஞ்சாவூர் பெண்ணான நயன்தாராவை சிம்புவுக்கு திருமணம் செய்ய பேசி முடிக்கிறார். சிம்புவுக்கும் பெண்ணை பிடித்துவிடுகிறது.
இந்த சமயத்தில் நயன்தாராவுக்கும் ஏதாவது முன் காதல் இருக்குமோ என தேவையில்லாத சந்தேகத்தை கிளறிவிடும் சிம்புவின் நண்பரான சூரி, அதை உறுதிப்படுத்த தானாகவே டிடெக்டிவ் சந்தானம் மூலம் நயன்தாராவை வேவு பார்க்கிறார்.. விஷயம் தெரிந்து நயன்தாரா கொதித்தாலும், அதன்பின் கூல் ஆகிறார்.
அடிக்கடி செல்லச்சண்டை போட்டுக்கொள்ளும் இருவரும், போகப்போக விடிய விடிய போனிலேயே பேசி குடும்பம் நடத்தும் அளவுக்கு போய்விடுகின்றனர். திருமணத்திற்கு நாள் நெருங்கிவரும் நேரத்தில் பிரச்சனை மது அரக்கன் ரூபத்தில் இந்த இருவரின் அப்பாக்கள் வழியாக உள்ளே நுழைந்து, காதலுக்கும் கல்யாணத்திற்கும் வேட்டுவைக்க பார்க்கிறது.. காதலர்கள் என்ன முடிவெடுத்தார்கள் என்பது க்ளைமாக்ஸ்..
படம் முழுவதும் ஒரு சில காட்சிகளை தவிர, ஆண்ட்ரியா-சிம்பு, சூரி-சிம்பு, நயன்தாரா-சிம்பு என எல்லா இடங்களிலும் ஒரே சிம்பு மயம் தான்.. நிஜத்தில் நயன்தாராவுடன் சிம்புவின் காதல் பிரேக் அப் ஆகாமல் இருந்திருந்தால் அவரது வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை இதில் சினிமாவாக வாழ்ந்து பார்த்திருக்கிறார் சிம்பு.. முக்கியமாக நிஜத்தில் தனது கேரக்டர் என்ன என்பதை காட்சிக்கு காட்சி வெளிப்படுத்தவும் செய்து தனது ரசிகர்கள் அல்லாதவர்களையும் உள்ளே இழுக்க முயற்சி செய்திருக்கிறார் சிம்பு. அது ஓரளவு ஒர்க் அவுட் ஆகவும் செய்கிறது.
சிம்புவுடனான காதல் பிரேக் அப்பிற்கு பிறகும் கூட காட்சிக்கு காட்சி சிம்புவுடன் இவ்வளவு அன்யோன்யமாக நடித்திருக்கும் நயன்தாராவை பார்க்கும்போது தனது தொழில் மீது அவர் வைத்திருக்கும் பக்தி நன்றாகவே புலப்படுகிறது. படத்தில் சிம்புவுடனான அவரது (நீண்ண்ண்ண்ட) காதால் உரையாடல் நம் கண்களை அகல விரிக்க வைத்தாலும், ஒருகட்டத்தில் போதுமடா சாமி என காதுகளையும் மூட வைக்கிறது. (அவ்வளவு நேரம் பேசிக்கிட்டே இருக்காங்கப்பா).
இன்னொரு கதாநாயகி ஆண்ட்ரியா வலிந்து திணிக்கப்பட்ட கேரக்டர் என்றாலும், அவர் வரும் காட்சிகளில் எல்லாம் .லவ்லி பெர்பாமன்ஸ்.. மனதை அள்ளுகிறார்.. படத்தில் சிம்பு, நயன்தாராவுக்கு அடுத்த இடத்தை பிடித்திருப்பவர் சூரி தான்.. சிம்புவின் டூவீலர் ட்ரைவராக வரும் இவருக்கு படம் முழுதும் சிம்புவையும் நயன்தாராவையும் கலாய்ப்பதே வேலை.. உதாரணத்துக்கு
“அவன் நினைச்சத தான் செய்வான்.. சொன்ன நேரத்துக்கு வரமாட்டான்”
“குழந்தைக்கு பேர் வகிரோம்னு சொல்லிட்டு ரெண்டுபேரும் அவங்களோட எக்ஸ் லவ்வர் பேரா சொல்றாங்கப்பா”
“லவ் பண்றதே வேலையா திரியறயேப்பா.. எப்பத்தான் கல்யாணம் பண்ணப்போற..?”
சிம்பு : நான் வண்டை வண்டையா திட்டுவேன்…
சூரி : நான் பீப் சவுண்ட் போட்டுக்குவேனே
என நிறைய இடங்களில் சிம்புவை வாருவதையே காமெடியாக்கி இருக்கிறார்கள்.. சிம்புவும் அதற்கு படம் முழுவதும் பெருந்தன்மையுடன் ஈடு கொடுத்திருக்கிறார். போதாக்குறைக்கு குறைந்த காட்சிகள் என்றாலும் நட்புக்காக சஸ்பென்ஸ் என்ட்ரி கொடுத்து கலகலக்க வைக்கிறார் சந்தானம்.
சிம்புவின் தந்தையாக ஜெயபிரகாஷ் நிறைவான நடிப்பை தந்தாலும், சம்மந்தி வீட்டிலேயே அவர் தங்கி விடுவது கதையின் பிரச்சனை உருவாக உதவி புரிந்தாலும் அவரது கண்ணியத்தை குறைக்கவே செய்கிறது.. நயன்தாராவின் பெற்றோராக நடித்திருப்பவர்கள் இருவருமே படம் முடிந்தும் மனதில் நிற்கிறார்கள். ஆனால் நயன்தாராவின் அப்பா அந்த அளவுக்கு கோபப்படுவது அதன்பின் தொடரும் நிகழ்வுகள் கொஞ்சம் டூமச் ரகம் தான்.
குறளரசனின் இசையும் சிம்புவின் டான்ஸும் சிம்புவின் ரசிகர்களுக்காக மட்டுமே.. டைமிங் வசனங்களால் ரசிகர்களை தொடர்ந்து சிரிக்கவேண்டும் என மெனக்கெட்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். மொத்தத்தில் காதலர்களாகட்டும் பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணம் மூலம் இணைபவர்களாகட்டும், சந்தேகம் என்பது இருவருக்கும் இடையில் எந்த ரூபத்தில் நுழையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.. அப்படி நுழைந்தாலும் அதை முளையிலேயே கிள்ளி ஏறிய வேண்டும் என்பதை கலகலப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாண்டிராஜ்.
Comments are closed.