தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் காலமானார்..!

222

சில நாட்களாகவே நோயால் அவதிப்பட்டு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வந்த தயாரிப்பாளர் அ.செ.இப்ராஹிம் ராவுத்தர் இன்று காலமானார். அவருக்கு வயது 63. விஜயகாந்தின் பால்யகால நண்பர்களுள் மிக முக்கியமானவரான இப்ராஹிம் ராவுத்தர், விஜயகாந்த் சினிமா வாய்ப்பு தேடிய காலங்களில் அவருக்கு பக்கபலமாக நின்றவர்.

விஜயகாந்த் முன்னணி நடிகராக வளர ஆரம்பித்ததும், ராவுத்தரை தயாரிப்பாளராக ஆக்கி அழகு பார்த்தார். புலன் விசாரணை, கேப்டன் பிரபாகரன் என விஜயகாந்த் – ஆர்.கேசெல்வமணி கூட்டணியில் உருவான இந்த இரண்டு வெற்றிப்படங்களும் ராவுத்தரின் பெயரை காலமெல்லாம் ஞாபகப்படுத்திக்கொண்டிருக்கும்.

இடையில் அவர்களது நட்பில் விரிசல் விழுந்து இருவரும் பிரிந்தாலும், சமீபத்தில் இப்ராஹிம் ராவுத்தர் மருத்துவமனையில் நினைவின்றி படுத்திருந்தபோது அவரை வந்து பார்த்த கேப்டன் கண்ணீர் சிந்தினார். அவர் நலம் பெற வேண்டி பிரார்த்தித்து உருக்கமான கடிதம் கூட எழுதினார்.. அந்த அளவுக்கு அவர்களின் ஆரம்பகால நட்பு இருந்துள்ளது.

சிலகாலம் தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் பணியாற்றிய இப்ராஹிம் ராவுத்தார், மற்றவர்களுக்கு ஒரு கஷ்டமென்றால் ஓடோடிச்சென்று உதவும் குணம் கொண்டவர். புதிய இயக்குனர்களை அறிமுகப்படுத்தி அவர்களை கைதூக்கி விடுவதில் முதன்மையானவர். கடைசிவரை திருமணம் செய்துகொள்ளமலேயே வாழ்ந்தவர். அவரது ஆன்மா சாந்தியடையை நாமும் பிரார்த்திப்போம்.

Comments are closed.