‘பாண்டியநாடு’ படத்தில் ஜோடியாக நடித்த விஷாலும் லட்சுமி மேனனும் அடுத்த படத்திலும் ஜோடி சேர்கிறார்கள் என்பதும் படத்திற்கு ‘நான் சிகப்பு மனிதன்’ என ரஜினி நடித்த சூப்பர்ஹிட் படத்தின் டைட்டிலை வைத்திருக்கிறார்கள் என்பதும் ஏற்கனவே தெரிந்த செய்திதான்.
‘தீராத விளையாட்டுப்பிள்ளை’, ‘சமர்’ என விஷாலை வைத்து இரண்டு படங்களை இயக்கிய விஷாலின் ஆஸ்தான இயக்குனரான ‘திரு’ தான் இந்தப்படத்தையும் இயக்குகிறார். யுடிவி நிறுவனத்துடன் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறார் விஷால். மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார்.
முதலில், தமன் தான் இந்தப்படத்திற்கு இசையமைப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் மாற்றம் செய்யப்பட்டு இப்போது ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். “இசையமைப்பாளர்கள் மாறியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. முதலில் இந்தப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷை அணுகினோம். அவர் பிஸியாக இருந்ததாலும் நாங்கள் படத்தின் வேலைகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று நினைத்ததாலும் அடுத்ததாக தமனை அணுகினோம். ஆனால் இப்போது ஜி.வி.பிரகாஷ் தன் வேலைகளில் சிலவற்றை முடித்துவிட்டு முன்னுரிமை அடிப்படையில் இந்தப்படத்துக்கு இசையமைத்து குறித்த நாட்களில் பணிகளை முடித்துத்தருவதாக கூறினார். அதனால் மீண்டும் ஜி.வி.பிரகாஷை ஒப்பந்தம் செய்துவிட்டோம்” என்கிறார் இந்தப்படத்தின் தயாரிப்பாளரான தனஞ்செயன். இன்னும் சில தினங்களில் படப்பிடிப்பைத் தொடங்கி ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து, 2014 சம்மர் சீசனில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.