நல்ல படங்களாக இருந்தால் அவற்றை லாப நோக்குடன் மட்டும் பார்க்காமல், மக்களிடம் அதைக்கொண்டுபோய் சேர்க்கும் விதமாக செயல்பட்டு வரும் நிறுவனம் தான் இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ். அந்தவகையில் தற்போது ரஃப் நோட் என்ற நிறுவனம் தயாரித்துள்ள ‘கோலிசோடா’ என்ற படத்தை வெளியிட இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்குனராக அவதாரம் எடுத்திருக்கும் படம் தான் ‘கோலிசோடா. “கோயம்பேடு மார்க்கெட்டில் ஒன்றாக தங்கி வேலைபார்க்கும் நான்கு சிறுவர்களைப் பற்றிய கதைதான் இந்தப்படம். காலம் முழுதும் நம்ம வாழ்க்கை இப்படியே போயிடுமோ, நமக்கான அடையாளம் என்ன என்று அந்த நான்குபேரும் யோசிக்கும்போது கதை ஆரம்பிக்குது. இதனால நம்ம அடையாளத்துக்கு ஏதாவது பிரச்சனை வந்துடுமோ?னு ஏற்கனவே அடையாளத்தோட இருக்கிற கடை முதலாளிங்க யோசிக்கும் போது பிரச்சனை ஆரம்பிக்குது. இப்படி ரெண்டு வெவ்வேற எண்ணங்களோட மோதல் தான் “கோலி சோடா’” என்கிறார் விஜய்மில்டன்.
பாண்டிராஜ் இயக்கிய பசங்க படத்தில் நடித்த கிஷோர், பக்கோடா பாண்டி, ஸ்ரீராம், முருகேஷ் என்ற நான்கு பொடிப்பையன்களை ஞாபகம் இருக்கிறதா? தற்போது கொஞ்சம் வளர்ந்துவிட்ட அந்த நாலுபேர்தான் இந்தப்படத்தின் ஹீரோக்கள்.
“அந்த நாலு போரையும் ஊர்ல இருந்து வரவழைச்சி டெஸ்ட் ஷூட் எடுத்தோம். சனி, ஞாயிறுகள்ல கோயம்பேடு மார்க்கெட்ல காலையில் இருந்து ஈவினிங் வரை சுத்தவிட்டு அதையும் ஷூட் பண்ணினோம். மார்க்கெட்ல சுத்தின அழுக்கு, நாற்றம் அத்தனையும் அவங்களுக்கு அத்துப்படி ஆகிருச்சு. மூட்டை தூக்கி உடம்பு இருகிருமே! அதுக்காக ஷூட்டிங்கைத் தள்ளி வெச்சு நாலு பேரையும் ஜிம்முக்கு அனுப்பினோம். அரும்பு மீசைக்காக ஏகப்பட்ட ட்ரீட்மென்ட். நான் நினைச்ச மாதிரி அவங்க உருமாறி வந்த பின்னாடி தான் ஷூட்டிங்க்கு கிளம்பினோம்” என பையன்களை மாற்றிய கதை சொல்கிறார் விஜய்மில்டன்.
இந்தப்படத்திற்கு பாண்டிராஜ் வசனம் எழுதியுள்ளார். கிட்டத்தட்ட படத்தின் வேலைகள் எல்லாம் முடிந்துவிட்டன. சமீபத்தில் இந்தப்படத்தை பார்த்த லிங்குசாமி படத்தின் கதையால் கவரப்பட்டு, தனது திருப்பதி பிரதர்ஸ் சார்பில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார்.