பொன்விழா கண்ட இசையமைப்பாளர் சங்கர் கணேஷ்

65

இசையமைப்பாளர் கலைமாமணி டாக்டர் சங்கர் கணேஷ் அவர்களின் 50 ஆண்டுகால கலை சேவையை பாராட்டியும் அவரது 65வது பிறந்த நாளையும் வெகு விமரிசையாக கொண்டாடி அவரை கௌரவித்துள்ளது திரையுலகம். இந்தவிழா நேற்று முன் தினம் காமராஜர் அரங்கத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

சங்கர் கணேஷ் 1963-ல் ‘மகராசி’ என்ற படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அதிலும் முதல் படத்திலேயே கவிஞர் கண்ணதாசன் வரிகளுக்கு இசையமைத்து மோதிரக்கையால் குட்டுப்பட்ட பாக்கியசாலி ஆனார். அதை தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் சுமார் 1050 படங்களைத் தாண்டி இசையமைத்துவிட்டார் என்பது இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஆச்சர்யம் தரும் செய்தி…

இதுமட்டும அல்ல.. ‘ஒத்தையடி பாதையிலே’ உட்பட ஏழு படங்களில் ஹீரோவாக நடித்துள்ள சங்கர் கணேஷ் ‘ஜெகதல பிரதாபன்’, ‘நான் உன்ன நெனச்சன்’ போன்ற படங்களை இயக்கியும் உள்ளார். இப்போது லேட்டஸ்ட் ட்ரெண்டிலும் இணைந்திருக்கும் இவர் ‘வின்’ என்ற படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கும் ஆடியிருக்கிறார். நிறைய நகைகள் அணிவதும், எப்போதும் வெள்ளை நிற உடையில் தோன்றுவதும் இவரது ஸ்டைல்.

விழாவிற்கு இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், இயக்குனர் திரு.எஸ்.பி.முத்துராமன் உட்பட பலர் வருகை தந்து கலைமாமணி டாக்டர் சங்கர் கணேஷுக்கு வாழ்த்து தெரிவித்தனர். விழாவில் பேசிய சங்கர் கணேஷ், “கால மாற்றத்திற்கு ஏற்பவும், ரசிகர்களின் ரசனைக்கு ஏற்பவும் இசை மாறிக்கொண்டு இருக்கிறது. இங்கே யாரையும், எதையும் குறைத்து மதிப்பிட முடியாது” என்று கூறினார். விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் ஸரிகமபதநி ஸ்ரீ கிருஷ்ணா மற்றும் நக்‌ஷத்ரா பவுண்டேஷன் உரிமையாளர் திரு.மேதிவ் மற்றும் நவீன் பைன் ஆர்ட்ஸ் திரு.பன்னீர்செல்வம் ஆகியோர் நன்றி தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.