புகழ்பெற்ற தலைவர்களின் வாழ்க்கையைப் படமாக எடுக்கவேண்டுமென்றால் அதற்கு சரியான நபர் இயக்குனர் ஞானராஜசேகரன் தான். பெரியார், பாரதியின் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்து வெற்றி பெற்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியான ஞானராஜசேகரன், தற்போது கணிதமேதை ராமானுஜத்தின் வாழ்க்கையைப் படமாக எடுத்து வருகிறார்.
ராமானுஜமாக மறைந்த நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் அபிநய் நடிக்கிறார். அபிநய் நடித்த ஒரு விளம்பரப் படத்தை பார்த்துவிட்டு அவர்தான் ராமானுஜர் என்று முடிவு செய்தாரம் ஞானராஜசேகரன். ராமானுஜத்தின் வாழ்க்கையிலும் அவரது முன்னேற்றத்திலும் அவரது தாய்க்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. அந்த கனமான கேரக்டரில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற யோசித்தபோது, அவருக்கு உடனே ஞாபகம் வந்தவர்தான் சுஹாசினி தான்.. ஆம்.. இந்தப்படத்தில் ராமானுஜரின் அம்மாவாக நடிக்கிறார் சுஹாசினி.
தொடர்ந்து தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை மட்டுமே படமாக்கி வருகிறீர்களே என்ன காரணம் என்று படத்தின் இயக்குனர் ஞானராஜசேகரனிடம் கேட்டால், “பாரதியின் இறுதி ஊர்வலத்தில் பதினைந்து பேர் மட்டுமே கலந்து கொண்டனர் என்ற ஒருவரிச் செய்திதான் அவர் வாழ்க்கையை படமாக்க தூண்டியது, ஒரு தலைமுறையை தன் பேச்சால் வாழ்க்கையால் கட்டிப்போட்டவர் என்பதால் பெரியாரைப் பற்றி படம் எடுக்க தோன்றியது. அதேபோல கணிதத்தை கனவில்கூட அறிந்திராத ஒரு தாய்தான் கணிதமேதை ஒருவர் உருவாக காரணமாக இருந்தார் என்ற செய்திதான் ராமானுஜத்தின் வரலாற்றை இயக்க என்னை உந்தித்தள்ளியது” என்கிறார். தற்போது கும்பகோணத்தில் ராமானுஜர் வாழ்ந்த வீடு மற்றும் அவர் படித்த பள்ளிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
சின்னமனூர் விஜயகுமார்