கடந்த வருடம் தான் அறிமுகமானாலும் படு ஸ்பீடாக போய்க்கொண்டு இருக்கிறார் விக்ரம் பிரபு. கடந்த வருடம் அவர் நடித்து வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘கும்கி’ படத்திற்கும் விரைவில் வெளியாக இருக்கும் ‘இவன் வேற மாதிரி’ படத்திற்கும் கிட்டத்தட்ட ஒரு வருட இடைவெளி இருப்பது உண்மைதான்.
ஆனால் தற்போது அவர் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் படங்களின் பட்டியலோ பெரிதாகவே இருக்கிறது. அரிமா நம்பி, சிகரம் தொடு படங்களில் நடித்துவரும் விக்ரம்பிரபு அடுத்ததாக ஹரிதாஸ் படத்தை இயக்கிய ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார். இந்தப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை.
தொடர்ந்து கழுகு படத்தை இயக்கிய சத்யசிவா இயக்கும் புதிய படத்திலும் நடிக்கிறார் விக்ரம் பிரபு. இந்தப்படத்திற்கு ‘தலப்பாக்கட்டி’ என பெயர் வைத்துள்ளார்கள். ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்தப்படத்தில் நவீன் சந்திரா, ரூபா மஞ்சரி, தம்பிராமையா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து எழில் இயக்கவுள்ள புதிய படத்திலும் சத்யஜோதி ஃபிலிம்ஸ் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்கும் புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் விக்ரம் பிரபு. அனேகமாக இந்தப்படங்களின் படப்பிடிப்பு 2014 ஜூன் மாதத்திற்கு மேல ஆரம்பிக்கும் என தெரிகிறது. வரிசையாக படங்களை ஒப்புக்கொண்டாலும் கதையில் கவனம் செலுத்துவதன் மூலமும், ஒரு படத்தை முடித்துவிட்டு அடுத்த படத்தில் நடிப்பதன் மூலமும் மட்டுமே தொடர் வெற்றிகள் சாத்தியமாகும் என்பது சினிமா சொல்லும் உண்மை.