சிறுவயதில் தன் தாய் ஓடிப்போனதால் பெண்கள் என்றாலே ஜீவாவுக்கு வெறுப்பு. தன் தந்தை நாசர் இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்ய அன்றிலிருந்து அவருடனும் பேசுவதில்லை. சிறுவயதிலிருந்து அவரது நண்பர்களான வினய்யும் சந்தானமும் தான் அவரது உலகம். காதல் என்றாலே வெறுக்கும் ஜீவா தனது நண்பர்களிடமும் திருமணம் பண்ணிக்கொள்ளக்கூடாது என சத்தியம் வாங்குகிறார். ஆனால் அதையும் மீறி அவர்கள் திருமணம் செய்துகொள்ள அவர்களிடமிருந்து விலகி தனிமைப்படுகிறார்.
நண்பர்கள் இருக்கும்போதே விளம்பர இயக்குனரான ஜீவாவின் வாழ்க்கையில் த்ரிஷா நுழைகிறார். ஆனால் சக தோழியாகக்கூட அவரை முதலில் அங்கீகரிக்க மறுக்கும் ஜீவா நண்பர்களின் பிரிவுக்குப்பின் மெல்ல மெல்ல அவரது நண்பராக மாற அவருக்குள்ளும் காதலும் அரும்புகிறது. ஆனால் அவரது தேவையில்லாத ஈகோ த்ரிஷாவை காயப்படுத்துகிறது. கடைசியில் ஈகோ வென்றதா, இல்லை காதல் வென்றதா என்பது தான் க்ளைமாக்ஸ்.
ஜீவாவுக்கு இப்படி ஒரு ரோல் என்றால் எப்போதுமே அல்வா சாப்பிடுற மாதிரிதான். பெண்களையும் காதலையும் வெறுப்பதை அவ்வளவு அழகாக முகத்தில் பிரதிபலித்திருக்கிறார். போதாதென்று தன்னை நெருங்கிவரும் ஆண்ட்ரியாவிடமும் த்ரிஷாவிடமும் இவர் காட்டும் இடைவெளி அவரது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்க்கிறது.
த்ரிஷா, ஜீவாவை காதலுடன் நெருங்கும் காட்சிகளில் எல்லாம் ரோஜாப்பூவாக மிளிர்கிறார். கடைசியில் ஏர்போர்ட்டில் ஜீவா சொன்ன ஒரு வார்த்தையைக்கேட்டு மனம் வெதும்பும் காட்சியில் காதலின் வலியை உணர்த்தி விடுகிறார்.
விளம்பர மாடலாக அதிரடி கேரக்டரில் ஆண்ட்ரியா.. ஜீவாவைக் கவிழ்த்துக்காட்டுகிறேன் என சவால் விட்டுவிட்டு அவரிடம் அவமானப்படுவதும், பின்னர் அவரை சமயம் பார்த்து பழிவாங்குவதும் என வில்லி அவதாரம் எடுத்திருக்கிறார்.
படத்தின் கலகலப்புக்கு முழு உத்திரவாதம் தருபவர்கள் சந்தானமும் வினய்யும் தான். கடந்த சில படங்களாக சரியாக சோபிக்காத சந்தானம் இந்தப்படத்தில் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியிருக்கிறார். அட.. வினய்யும் காமெடியில் வெளுத்து வாங்கியிருக்கிறாரே.
பதினைந்து வருடங்களாக தன் மகன் தன்னுடன் பேச்சத சோகத்தை மனதில் வைத்திருக்கும் நாசர் அதை சரியாக வெளிப்படுத்தவும் தவறவில்லை.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் ஜீவாவும் த்ரிஷாவும் பாடும் பாடல் திரும்பவும் பலமுறை கேட்கத் தூண்டுகிறது. சென்னை மட்டுமல்ல ஸ்விட்சர்லாந்தின் பனி உறைந்த அழகையும் அள்ளி எடுத்து வந்திருக்கிறது மதியின் ஒளிப்பதிவு.
சில வருடங்களுக்கு முன் ‘வாமனன்’ படத்தை இயக்கிய அஹமது தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். காதல் கதையை கையில் எடுத்து அதில் சந்தானத்தையும் வினய்யையும் வைத்து நகைச்சுவை திருவிழா நடத்தியிருக்கிறார். ஜீவாவுக்கு பெண்களை பிடிக்காது என்பதற்காக அவர் சொல்லும் காரணம் சரி. ஆனால் அதற்காக அவரது நண்பர்களையும் திருமணம் செய்யக்கூடாது என்று சொல்லும் இடத்தில் தான் கொஞ்சம் இடிக்கிறது. அதேபோல த்ரிஷாவுடனான அவரது காதலைச் சொல்ல நேரத்தை இழுத்தடிப்பதை தவிர்த்து கொஞ்சம் ஷார்ட் & ஸ்வீட்டாக சொல்லியிருக்கலாம். ஆனால் என்ன..? இரண்டரை மணிநேரம் ஜாலியாக ரசித்து சிரிக்க, உத்திரவாதம் தந்திருக்கிறார் அஹமது.