‘த்ரிஷ்யம்’ ரீமேக்கில் நடிக்க விக்ரம் விருப்பம்

103

கிறிஸ்துமஸை முன்னிட்டு கடந்தவாரம் கேரளாவில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’ படம் சூப்பர்ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கிறது. மோகன்லாலுக்கு ஜோடியாக மீனா நடித்துள்ள இந்தப்படத்தை இயக்குனர் ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளர்.

படம் வெளியான மூன்றே நாட்களில் இந்தி உட்பட மற்ற மூன்று தென்னிந்திய மொழிகளிலும் இதன் ரீமேக் உரிமை எதிர்பாராத ஒரு தொகைக்கு விற்பனை ஆகியிருக்கிறது. அதிலும் குறிப்பாக பலர் இந்தப்படத்தின் ரீமேக் உரிமையைக் கைப்பற்ற போட்டிபோட்ட அதிசயமும் அரங்கேறியுள்ளது.

இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு கதையிலும் மோகன்லாலின் நடிப்பிலும் மனதைப் பறிகொடுத்துள்ள விக்ரம் இதன் தமிழ் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாக ஒரு செய்தி கசிந்துள்ளது. தற்போது இதன் தமிழ் மற்றும் இந்தி ரீமேக் உரிமையை மோகன்லாலின் மைத்துனரும் தயாரிப்பளாருமான சுரேஷ் பாலாஜி கைப்பற்றியுள்ளார்.

இவர் மலையாளத்தில் வெற்றிபெற்ற ’22 ஃபீமேல் கோட்டயம்’ படத்தை தமிழில் தற்போது ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ என்ற பெயரில் நடிகை ஸ்ரீபிரியா இயக்கத்தில் ரீமேக் செய்திருக்கிறார். படமும் விரைவில் வெளியாக உள்ளது ‘த்ரிஷ்யம்’ படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை நடிகை ஸ்ரீப்ரியாவின் கணவர் ராஜ்குமார் சேதுபதி வாங்கியுள்ளார்.

இயக்குனர் ஜீத்து ஜோசப் இந்த வருடத்திலேயே பிருத்விராஜ் நடித்து சூப்பர்ஹிட்டான ‘மெமோரிஸ்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். இந்தப்படம் தமிழில் ரீமேக் ஆகும்போது ஜீத்து ஜோசப்பே இயக்குவார் என்றும் சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ படம் வெளியான பின்னர் அதற்கு கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து ஸ்ரீபிரியாவே கூட இந்தப்படத்தை இயக்கும் வாய்ப்பும் இருக்கிறது என்றும் தெரிகிறது.

இந்த ‘த்ரிஷ்யம்’ இன்னொரு ‘பாடிகார்டு’ ஆக எல்லா மொழிகளிலும் வலம் வரும் என்று நம்புவோம்.

Leave A Reply

Your email address will not be published.