தேசிங்குராஜா – விமர்சனம்

58

இரண்டு கிராமங்களுக்கு இடையே இருக்கும் பகையும் அங்கே ஏற்படும் காதலும்தான் கதைக்களம். விமலின் தந்தையை பிந்துமாதவியின் அப்பா கொல்கிறார். பதிலுக்கு அவரது மகனை விமலின் தாத்தா கொல்கிறார். ரெண்டு பக்கமும் சரியாப்போச்சு என்று அத்துடன் நிறுத்தாமல் அடுத்து விமலுக்கு குறிவைக்கிறார்கள்.

இந்நிலையில் எதிர்பாராத விதமாக பிந்துமாதவியை காதலிக்கிறார் விமல். அவரோ பிடிகொடுக்காமல் யோசித்துச் சொல்கிறேன் என்கிறார். இந்நிலையில் இருவரும் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரே அறையில் மாட்டிக்கொள்ள, திருமணத்திற்கு முன்பே சாந்திமுகூர்த்தம் முடிந்துவிடுகிறது. எப்படியோ பிந்துமாதவி கழுத்தில் விமல் தாலியைக்கட்ட இப்போது ஊர் அவர்களுக்கு சாந்தி முகூர்த்தம்(!) நடக்கவிடாமல் தடுக்கிறது. இதையெல்லாம் முறியடித்து இருவரும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் எனபதுதான் படத்தின் கதை.

விமலுக்கு கிராமத்து கேரக்டர் என்றால் அளவெடுத்து தைத்த சட்டை மாதிரி. வழக்கம்போல இந்தப்படத்திலும் நன்றாகவே பொருந்தியிருக்கிறது. அவருக்கு ஜோடியாக நடித்திருக்கும் பிந்து மாதவியின் நடிப்பு படத்துக்கு படம் மெருகேறி வருவது நன்றாகவே தெரிகிறது. விமல் பிந்துமாதவியிடம் குலோப்ஜாமூன் தந்து தன்னை காதலிக்கச் சொல்லும் இடம் சரியான காமெடி கலாட்டா.

சூரி, சிங்கம்புலி, சிங்கமுத்து, சாம்ஸ் என மிகப்பெரிய காமெடிக்கூட்டணி. இவர்கள் போதாதென்று வில்லன் ரவிமரியாவும் அவ்வப்போது காமெடியில் சேர்ந்து கொள்கிறார். விமலைத் தேடுகிறோம் என்று சூரி க்ரூப் கல்யாண வீட்டில் சிங்கம்புலியை வைத்து அடிக்கும் கூத்துக்கள் கலகல ரகம். அதிலும் சிங்கம்புலியின் பாயாச காமெடி நம் வயிற்றை பதம் பார்க்கிறது.

டி.இமான் இசையில் இரண்டு பாடல்கள் கேட்கும்படி உள்ளன. கும்கிக்கு இசையமைத்தவரா இந்தப்படத்திற்கும் இசையமைத்திருக்கிறார் என்ற ஆதங்கம் எழுவதை தவிர்க்கமுடியவில்லை. சூரஜ் நல்லுசாமியின் ஒளிப்பதிவு குறை சொல்லும்படி இல்லை என்பது ஆறுதல்.

கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் எழில். முழுநீள காமெடிப்படத்தை தரமுயற்சி செய்து அதில் பாதி வெற்றியும் பெற்றிருக்கிறார். ஆனால் அதற்காக இரண்டு கிராமம், காலம் காலமாக பகை என்பதை விட்டுவிட்டு புதிய கதைக்களத்தில் இறங்கியிருந்தால் தேசிங்குராஜாவின் வேகம் இன்னும் கூடியிருக்கும்.

நடிப்பு : விமல், பிந்துமாதவி, சூரி, சிங்கம்புலி, ரவிமரியா மற்றும் பலர்

ஒளிப்பதிவு : சூரஜ் நல்லுசாமி

இசை : டி.இமான்

இயக்கம் : எழில்

தயாரிப்பு : எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் மதன்

Leave A Reply

Your email address will not be published.