நடிகர் பாலு ஆனந்தை ஒரு காமெடி நடிகராக மட்டுமே உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பதுடன் சத்யராஜ் நடித்த ‘அண்ணா நகர் முதல்தெரு’ உட்பட பதினைந்து படங்களை இயக்கியும் இருப்பவர் பாலு ஆனந்த்.
நீண்ட நாட்களுக்குப்பிறகு இவர் இயக்கியுள்ள ‘சந்தித்ததும் சிந்தித்ததும்’ என்ற படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்தப்படத்தில் சத்யா கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக உதாஷா நடிக்கிறார். மற்றும் கஞ்சா கருப்பு, நிழல்கள் ரவி இவர்களுடன் பாலு ஆனந்தும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
“பெங்களூரில் போலீஸ் ரெகார்ட் மற்றும் பத்திரிக்கைகளில் இறந்து போனதாக அறிவிக்கப்பட்ட ஒருவன் தமிழ்நாட்டில் உயிருடன் வாழ்கிறான் அவன் எப்படி இறந்தான், எப்படி வாழ்கிறான் என்பது தான் கதை. அப்படி தமிழ் நாட்டில் வாழும் ஒருவனது காதல் கதையை காமெடியாக உருவாக்கி இருக்கிறோம். கதையை கேட்கும்போது ஆக்ஷன் படம் மாதிரி தெரிந்தாலும் இது முழுக்க முழுக்க ரொமான்டிக் காமெடி படம்” என்கிறார் பாலு ஆனந்த்.