சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியை வெறும் இசை விழாவாக மட்டும் கடந்துபோய் விட முடியாது. அது ஒரு கலாச்சாரத் திருவிழா. மார்கழி மாத இசை விழாக்களில் தனித்துவமான அடையாளம் பெற்று சென்னை மாநகருக்கும், தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் சிறப்பு சேர்க்கும் விழாவாக விளங்குகிறது.
மும்மூர்த்திகளின் ஆசியுடன் தமிழ்த்திருநாட்டின் தலைநகரமாம் சென்னையில் வாழும் இசை உள்ளங்கள் மட்டுமல்லாமல் மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய எல்லைகள் கடந்து இசை வேட்கையோடு வருகை தரும் ரசிகர்களுக்காக தஞ்சை மண்ணின் தனிப்பெரும் இசைப் பாரம்பரியத்தை நிலைநாட்டவரும் நிகழ்வே “சென்னையில் திருவையாறு”.
எல்லோரும் திருவையாறு தியாகராஜர் ஆராதனை விழாவில் கலந்து கொள்வது என்பது இயலாத ஒன்று. அப்படியொரு இசைவிழாவினை சென்னையில் உள்ளோரும் கண்டு, கேட்டு, களிக்கும் வகையில் ”லஷ்மன் ஸ்ருதி”யின் சார்பாக உங்கள் பேராதரவுடன் ”சென்னையில்-திருவையாறு” என்ற வடிவத்தில் பதினான்காவது முறையாக இவ்வாண்டு அரங்கேற்றுகின்றோம்.
இசையை பேணிப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல அயராது பாடுபடும் இசைக் கலைஞர்களை கெளரவிக்கவும், அப்பணியை சிறப்புடன் செய்யும் பெரியோர்களை பெருமைப்படுத்தவும் ஒரு மிகச் சிறந்த மேடையை ”சென்னையில் திருவையாறு” சங்கீத நாட்டிய விழா அமைத்துத் தந்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும் சென்னை மாநகரத்தில் நிகழக்கூடிய தரமான, அழகான, முழுமையான இசை விழாவாகவும், சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாகவும் “சென்னையில் திருவையாறு” இசை விழா திகழ்கின்றது. இந்த ஆண்டு இந்த இசைவிழாவிற்கு வயது பதினான்கு.
வருகிற டிசம்பர் 18 ஆம் தேதி காலை 11.00 மணிக்கு ”எஸ்.ஜெயராமன்” அவர்களின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 14 ஆம் ஆண்டு துவக்க விழாவை மரியாதைக்குரிய மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் தங்களது பொற்கரங்களால் துவக்கி வைக்கிறார்.

Comments are closed.