’சந்திரமுகி 2’ விமர்சனம்

533

நடிகர்கள் : ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு, லட்சுமி மேனன், ராதிகா, சுரேஷ் மேனன், மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, சுபிக்‌ஷா, ரவி மரியா, விக்னேஷ்
இசை : எம்.எம்.கீரவாணி
ஒளிப்பதிவு : ஆர்.டி.ராஜசேகர்
இயக்கம் : பி.வாசு
தயாரிப்பு : லைகா புரொடக்‌ஷன்ஸ் – சுபாஷ்கரன்

18 வருடங்களுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு ஒரு வருடத்திற்கும் மேலாக திரையரங்குகளில் ஓடி சாதனைப் படைத்த ‘சந்திரமுகி’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகியிருக்கும் ‘சந்திரமுகி 2’ எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.

ராதிகா மற்றும் குடும்பத்தாருக்கு தொடர்ந்து சில அசம்பாவிதங்கள் நடக்கின்றன. இதற்கு காரணம் குலதெய்வத்தை வழிபடாதது தான் என்று சாமியார் ஒருவர் சொல்கிறார். அதன்படி குலதெய்வத்தை வழிபடுவதற்காக ராதிகா மற்றும் குடும்பத்தார் வேட்டையபுரத்திற்கு செல்கிறார்கள். காதல் திருமணத்தால் ராதிகாவை விட்டு பிரிந்த அவரது மகளின் பிள்ளைகளும், அவர்களின் பாதுகாப்பாளரான ராகவா லாரன்ஸும் அவர்களுடன் வேட்டையபுரத்திற்கு செல்கிறார்கள். அவர்களுடைய குலதெய்வ கோவில் பராமரிப்பு இல்லாமல் பாழடைந்த நிலையில் இருக்கிறது. கோவிலை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் இறந்து விடுவதோடு, அந்த கோவிலில் வெளிச்சம் வருவதற்கு சந்திரமுகி விடமாட்டாள், மீறி முயற்சித்தால் மரணம் தான், என்று சாமியார் ஒருவர் எச்சரிக்கிறார்.

குலதெய்வ கோவிலில் பூஜை செய்தால் மட்டுமே குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் தீரும் என்பதால் எப்படியாவது பூஜை செய்ய வேண்டும் என்று நினைக்கும் ராதிகா குடும்பத்தாருக்கு ராகவா லாரன்ஸ் உதவி செய்ய முன்வருகிறார். அதன்படி கோவிலை அவர் சுத்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட, சந்திரமுக்யின் ஆன்மாவின் அதிரடியான ஆட்டம் தொடங்குகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது தான் ‘சந்திரமுகி 2’ வின் மீதிக்கதை.

பாண்டியன் மற்றும் வேட்டையன் என்று இரண்டு வேடங்களிலும் நடிப்பில் வேறுபாட்டை காட்டியிருக்கும் ராகவா லாரன்ஸ், ரஜினி சாயல் வராமல் இருக்க மிகவும் கஷ்ட்டப்பட்டிருப்பது திரையில் தெரிகிறது. ரஜினி சாயல் வரவில்லை என்றாலும் சில இடங்களில் காஞ்சனாவின் சாயல் அப்பட்டமாக தெரிகிறது. வழக்கமான தனது நடிப்பை சற்று அடக்கிவாசிக்க முயற்சித்தாலும், அது முடியாமல் தடுமாறியிருக்கும் ராகவா லாரன்ஸ், பாண்டியன் கதாபாத்திரத்தில் பல இடங்களில் சொதப்பியிருக்கிறார். பாண்டியன் சொதப்பல்களை செங்கோட்டையனாக இருந்து வேட்டையனாக மாறும் ராகவா லாரன்ஸ் சரி செய்து சமாளித்திருக்கிறார்.

சந்திரமுகி வேடத்தில் நடித்திருக்கும் கங்கனா ரணாவத் நடிப்பு மற்றும் நடனம் இரண்டையும் அறைகுறையாக செய்திருக்கிறார். நடிப்பு தான் இப்படி என்றால் சந்திரமுகி என்ற பேரழகி கதாபாத்திரத்திற்கு கொஞ்சமும் சம்மந்தமில்லாமல் இருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு களம் இறங்கியிருக்கும் லட்சுமி மேனனை சக்கர நாற்காலியில் உட்கார வைத்தபோதே தெரிந்து விட்டது, அவரை வைத்து தான் ஆட்டத்தையே ஆரம்பிக்க போகிறார்கள் என்று. அதன்படியே நடந்தாலும் அவரை சரியாக பயன்படுத்தவில்லை. அதேபோல், க்ளைமாக்ஸ் காட்சியில் அவருக்கு போடப்பட்ட மேக்கப் கொடுமையோ கொடுமை.

வடிவேலு வரும் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. அதிலும், வேட்டையன் மற்றும் சந்திரமுகியிடம் அவர் பேசும் காட்சிகள் வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது.

ராதிகா, மக்ஹிமா நம்பியார், ஸ்ருதி டாங்கே, சுபிக்‌ஷா, சுரேஷ் மேனன், ரவி மரியா, விக்னேஷ் என படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் இருந்தாலும், படத்தில் அவர்களுக்கு பெரிய முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.

காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருக்கும் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர், படம் முழுவதையும் கலர்புல்லாக காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார்.

எம்.எம்.கீரவாணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் இனிமையாக இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

முதல் பாகத்திற்கும் ‘சந்திரமுகி 3’-வுக்கும் எந்தவித சம்மந்தம் இல்லை என்று இயக்குநர் பி.வாசு சொல்லியிருந்தாலும், இரண்டு கதையும் ஒரே மாதிரியாக இருப்பது மட்டும் அல்ல காட்சிகளும் ஒரே மாதிரியாக இருப்பது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமளித்துள்ளது. இருந்தாலும் முழுக்க முழுக்க கமர்ஷியலான முறையில் திரைக்கதை மற்றும் காட்சிகளை நகர்த்தி படத்தை ரசிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் பி.வாசு.

லாஜிக் பார்க்காமல் படம் பார்த்தால், நிச்சயம் அனைவருக்கும் பிடித்த படமாக மட்டும் இன்றி, குடும்பத்துடன் பார்க்க கூடிய நல்ல பொழுதுபோக்கு படமாக இருக்கிறது இந்த ‘சந்திரமுகி 2’

ரேட்டிங் 3/5

Comments are closed.