பிரியாணி – விமர்சனம்

137

பிரியாணி சாப்பிடப்போய் பிரச்சனையை விலைக்கு வாங்கிய கதைதான் இந்தப்படத்தின் கதையும்.. கார்த்தியும் பிரேம்ஜியும் கார் கம்பெனியில் வேலை பார்க்கிறார்கள். ஒரு விழாவின்போது மிகப்பெரிய தொழிலதிபரான நாசரை இண்டர்வியூ பண்ணுகிறார் கார்த்தி. அன்று இரவே நாசர் மர்மமான முறையில் கொல்லப்பட பழி கார்த்தியின் மேல் விழுகிறது. தலைமறைவாகும் கார்த்தி, நண்பர்கள் உதவியுடன் நாசரைக் கொன்றது யார் என கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். ஆக்‌ஷன், சேசிங் என பரபரக்கும் கதையில் இறுதியில் நாசரைக் கொன்றது யார் என்பதை ஆச்சர்யமான ட்விஸ்ட்டுடன் முடித்திருக்கிறார்கள்.

கார்த்தி அசால்ட்டாக பண்ணிவிட்டுப் போகக்கூடிய ஜாலிபாய் கேரக்டர் தான் இதிலும் என்பதால், அதில் நாம் குறைகாணத்தான் முடியுமா என்ன? ஒரு பக்கம் ஹன்சிகாவை லவ் பண்னிக்கொண்டே மறுபக்கம் வேறு ஃபிகர்களை கரெக்ட் பண்ண முயற்சிப்பது ஜாலி கலாட்டா. கூடவே பிரேம்ஜியும் சேர்ந்துகொள்ள கேட்கவேண்டுமா? ஆனால் ஒவ்வொரு முறையும் பிரேம்ஜியை பெண்களிடமிருந்து பிரிக்கும் காட்சிகள் சிரிப்புக்கு கேரண்டி தருகின்றன. அதேபோல ஆக்‌ஷன் காட்சிகளிலும் கார்த்தி எந்தக் குறையும் வைக்கவில்லை.

ஹன்ஷிகா வழக்கம்போல ஹீரோவை காதலித்து ஹீரோவுக்கு உதவிசெய்யும் அழகு பொம்மையாக வந்துபோகிறார்.. பிரேம்ஜி காதலில் ‘பல்பு’ வாங்கும் காட்சிகளுக்கு இந்தப்படத்திலும் குறைவைக்கவில்லை. நீண்ட் நாட்களுக்குப் பிறகு ஹேண்ட்சம் ராம்கி. ஆனால் அவருக்கு இன்னும் கொஞ்சம் காட்சிகளை அதிகப்படுத்தியிருக்கலாம்.

போலீஸ் அதிகாரியாக வரும் ஜெயப்பிரகாஷ், சி.பி.ஐ.அதிகாரியாக வரும் சம்பத் இருவருக்கும் ஏற்ற பொருத்தமான கதாபாத்திரங்கள் தான். கிரானைட் அதிபராக வரும் நாசரின் மரணம் கூட இந்தப்படத்தில் காமெடி செய்திருப்பது ஆச்சர்யம். அதிலும் க்ளைமாக்ஸில் பிரேம்ஜியாக மாறும் நாசரின் மேனரிசங்கள் சூப்பர்.

அவ்வளவு சீரியசான நேரத்தில் கூட மதுமிதாவிடம், “உன் தம்பி போன் பண்ணினா என் கார் எங்கேன்னு கேட்டு வை” என்று பஞ்சு சுப்பு பேசும்போது தியேட்டரில் கைதட்டல் அள்ளுகிறது. நிதின் சத்யா, படவா கோபி, ஆதவன் அனைவரும் நட்புக்கரம் நீட்டியிருக்கிறார்கள். மாயாவாக வரும் மாண்டி தக்கர் இன்னும் கொஞ்சம் நாளைக்கு ரசிகர்களை தூங்கவிடமாட்டார் என்பது உறுதி.

படத்தில் கொஞ்ச நேரமே வரும் உமா ரியாஸ்கானின் கேரக்டர் மிகப்பெரிய ட்விஸ்ட்.. அதிலும் அவர் கார்த்தியுடன்…. வேண்டாம் சஸ்பென்ஸை உடைக்க வேண்டாம்.. தியேட்டரில் போய் பார்த்துக்கொள்ளுங்கள்.

யுவனின் இசையில் இரண்டு பாடல்கள் ஆட்டம் போடவைக்கும் ரகம். அதோடு பின்னணி இசையிலும் மெனக்கெட்டிருப்பது நன்றாகவே தெரிகிறது. சக்திசரவணனின் கேமரா வெங்கட்பிரபுவின் வேகத்திற்கு ஈடுகொடுத்திருக்கிறது.

வெங்கட்பிரபு படம் என்றல் காமெடி, ஆக்‌ஷன் என பக்கா பேக்கேஜாக இருக்கும் என்பதை இதிலும் ஒருமுறை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். எத்தனை கேரக்டர்கள் இருந்தாலும் படத்தில் அத்தனை பேருக்கும் சரியான வாய்ப்புகளைக் கொடுத்திருப்பது வெங்கட்பிரபுவுக்கு மட்டுமே சாத்தியம். கிடைக்கிற கேப்பில், ஜெய், அரவிந்த் ஆகாஷ் என தனது சென்னை-28 பார்ட்னர்களையும் உள்ளே நுழைத்திருப்பது சுவாரஸ்யம்.

நாசர் கொலையைத் தொடர்ந்து கார்த்தி தலைமறைவாவது, நாசரின் கடத்தல் நாடகம், என சில காட்சிகளில் லாஜிக் இடித்தாலும் முதல் பாதி காமெடி, இரண்டாவதில் ஆக்‌ஷன் என சீரான வேகத்தில் பயணிக்கிறது வெங்கட்பிரபுவின் திரைக்கதை. நீண்ட நாள் காத்திருப்புக்குப்பின் பரிமாறினாலும் சுவையான பிரியாணியை சூடு குறையாமல் பரிமாறியிருக்கிறார் வெங்கட்பிரபு.

Leave A Reply

Your email address will not be published.