சிறுவயதில் படப்பிடிப்பு ஒன்றை வேடிக்கை பார்க்க போயிருந்தான் சிறுவன் ஒருவன். அப்போது நல்ல வெயில் காலம்.. படத்தை இயக்கிய வெள்ளைக்கார இயக்குனர் ஒருவர் ‘ரெய்ன்’ என ஆங்கிலத்தில் கத்த, படப்பிடிப்பு தளத்தில் செயற்கை மழை கொட்ட ஆரம்பிக்கிறது. அப்போதே அந்த சிறுவன் மனதில், எதிர்காலத்தில் தான் ஒரு இயக்குனராக ஆகவேண்டும் என்ற எண்ணம் ஆழமாக பதிந்துவிட்டது. அப்போதுதானே, தான் உத்தரவிட்டாலும் மழை பெய்யும்.. அந்த சிறுவன் தான்..
பாலுமகேந்திரா..
தங்கர்பச்சானின் வார்த்தைகளில் சொன்னால் ஒளி ஓவியர்.. காலதேவன் சமயம் பார்த்து காத்திருந்து களவாடிச் சென்றுவிட்ட வைரம்.
ஒரு ஒளிப்பதிவாளராக, கதாசிரியராக, தலைசிறந்த இயக்குனராக தமிழ்சினிமாவில் தனது அரிய பங்களிப்புகளை விட்டுச் சென்றிருக்கும் பாலுமகேந்திரா என்னும் அந்த இளைஞனின் உடலுக்கு வயது 75. மனதோ எப்போதும் பதினாறை தாண்டியதில்லை.
இலங்கையில் அவதரித்து, தமிழகத்தில் தடம் பதித்த அந்த மாமனிதனின் படைப்புகளை பார்த்து தேசியவிருதே தேடி வந்தது. இந்த 36 வருடங்களில் அவர் இயக்கியது வெறும் 22 படங்கள் தான்.. எண்ணிக்கையில் குறைவான படைப்புகள் என்றாலும் அவை அத்தனையும் காலத்தால் ‘அழியாத கோலங்கள்’.
1977-ல் கறுப்பு வெள்ளையில் கன்னட மொழியில் பாலுமகேந்திரா இயக்கிய முதல் படம் கோகிலா. பாலுமகேந்திராவுக்கு மிகப் பிடித்த கலைஞரான கமல்தான் ஹீரோ. ஷோபா நாயகியாக நடித்தார். இந்தப் படத்தில்தான் மோகனை அறிமுகப்படுத்தினார் பாலுமகேந்திரா. கன்னடத்தில் வெளியான இந்தப் படம், கன்னடத்தில் மட்டுமல்ல, தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்படாமலேயே 100 நாட்களைக் கடந்து ஓடியது.
தமிழ் சினிமாவின் தலைசிறந்த படங்களில் ஒன்றாகத் திகழும் ‘அழியாத கோலங்கள்’ தான் பாலுமகேந்திராவின் முதல் தமிழ்ப் படம். அறியாத வயதில் ஏற்படும் பாலியில் உணர்வுகளை ‘அழியாத கோலங்கள்’ படம் மூலமாக தைரியமாக செல்லுலாய்டில் செதுக்கிய படைப்பாளி பாலுமகேந்திரா..
அவரது மானசீக ஆசான்களில் ஒருவரான ஆல்ஃபிரெட் ஹிட்ச்காக் என்ற மாமேதைக்கு மரியாதை செலுத்தும் முகமாக, தமிழில் அவர் இயக்கிய சஸ்பென்ஸ் திரில்லர் தான் மூடுபனி… இந்தப்படத்திலிருந்து தான் பாலுமகேந்திரா இசைஞானி இளையராஜாவுடன் இணைந்து தனது இசைராஜாங்கத்தை விரிவுபடுத்த ஆரம்பித்தார்.. மூடுபனி அவருக்கு மூன்றாவது படம். ஆனால் இசைஞானிக்கோ அது நூறாவது படம். சென்னையில் 250 நாட்கள் ஓடிய படம் இது.
கமல், ஸ்ரீதேவியை உச்சத்துக்குக் கொண்டு போனது மூன்றாம் பிறை. இந்தப்படத்தை பாலுமகேந்திராவின் மாஸ்டர் பீஸ் என்று சொல்வார்கள் பலரும். கமலுக்கு சிறந்த நடிகருக்கான முதல் விருது கிடைத்த படம் இது. இரு தேசிய விருதுகள், மூன்று தமிழக அரசு விருதுகள் உள்பட 6 விருதுகள் இந்தப் படத்துக்குக் கிடைத்தன.
மூன்றாம் பிறையின் கடைசிக் காட்சியில் நீங்கள் பார்த்த அந்த நெஞ்சு முட்டும் சோகம் அந்தக் காலகட்டத்தில் அவர் மனதில் நிறைந்து கிடந்த சோகத்தின் ஒரு துகள் மட்டுமே.! நெஞ்சு வெடிக்கும் தனது துக்கத்தை கமல் என்னும் உன்னத கலைஞன் மூலம் இறக்கிவைத்து இளைப்பாறினார் பாலுமகேந்திரா.
தமிழில் வெற்றி பெற்ற மூன்றாம் பிறையைத்தான் 1983-ல் சத்மா என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்தார் பாலு மகேந்திரா. இளையராஜாவுக்கும் இதுதான் முதல் இந்திப்படம். படம் இந்தியில் சரியாகப் போகவில்லை என்றாலும் பாலிவுட்டின் மிகச்சிறந்த 50 படங்களுள் ஒன்றாக மதிக்கப்படுகிறது. இந்தப்படத்தில் இடம்பெற்ற ‘ஹே ஜிந்தகி கலே லாகாலே…’ இந்தியின் எவர்கிரீன் பாடல்களில் ஒன்று!
பாலுமகேந்திராவுக்கு வெகுஜன ரசனைக்கேற்ப படம் எடுக்கத் தெரியவில்லை என்றொரு குற்றச்சாட்டு எழுந்தபோது, ஒரு கோபத்தில் அவர் எடுத்த படம் தான் நீங்கள் கேட்டவை. வழக்கமான அவர் பாணியிலிருந்து விலகி காதல், மோதல், பழிவாங்கல், சூப்பர் பாடல்கள் என அக்மார்க் மசாலாவாக அந்தப்படத்தை கொடுத்தார். மிகப்வெற்றிப் படமாக அமைந்தது நீங்கள் கேட்டவை. ஆனால் விமர்சகர்களோ பாலு மகேந்திராவிடமிருந்து இப்படி ஒரு படத்தை எதிர்பார்க்கவில்லை என்றபோது, “நீங்கள்தானே இப்படி வேண்டுமென கேட்டீர்கள்… பிறகு எதற்கு குறை சொல்கிறீர்கள்?’ என்று பதிலடி கொடுக்கவும் அவர் தவறவில்லை..
பாலுமகேந்திராவின் முதல் மலையாளப் படம் ஓலங்கள். அமோல் பாலேகர், பூர்ணிமா, அம்பிகா ஆகியோர் நடிக்க, பாலு மகேந்திராவே ஒளிப்பதிவு செய்து இயக்கினார். இளையராஜா இசையில் ‘தும்பீ வா தும்பக் குளத்தில்’ பாடல்’ சாகா வரம் பெற்ற பாடலானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என 5 மொழிகளுக்கும் சுற்றுலா அடித்த ட்யூன் இந்தப் பாடலாகத்தான் இருக்கும்.
ரெட்டைவால் குருவி, மறுபடியும் என பாலுமகேந்திராவின் பல படங்கள் ரெண்டு பொண்டாட்டிக்காரன் கதைக்கருவை கொண்டிருந்தன கமலின் சொந்த தயாரிப்பில் உருவான படமான சதிலீலாவதி படமும் இதற்கு விதிவிலக்கல்ல. ‘மறுபடியும்’ படத்துக்குப் பிறகு பொருளாதார ரீதியாக சிக்கலில் இருந்த பாலுமகேந்திராவுக்கு, உதவுவதற்காக கமல் எடுத்த படம் தான் இது. சீரியஸாக படம் எடுப்பவர் என அறியப்பட்ட பாலுமகேந்திராவின் உச்ச கட்ட நகைச்சுவைப் படம் இது.
வசன உச்சரிப்பு, உடல் மொழி என நடிப்பு சார்ந்த எந்த விஷயத்தையும் மிகைப்படுத்திக் காட்டாமல் அவற்றை எளிமையாக்கி, நடிகர்களின் இயல்பு நிலையைக் காட்சிக்குள் தக்கவைத்துக் கொள்வது என சத்யஜித் ரே உருவாக்கிய திரைமொழி உலகெங்கிலும் தோன்றிய பல இயக்குனர்களிடம் தன் பாதிப்பை செலுத்தத் துவங்கியது. பாலுமகேந்திராவின் இந்தத் திரைமொழியும் சத்யஜித்ரேவின் திரைமொழியிலிருந்து உருவானது.
பாலுமகேந்திரா இயக்கும் படங்களின் திரைக்கதை, ஒளிப்பதிவு, மற்றும் படத்தொகுப்பு அனைத்தையும் அவரே செய்வது வழக்கம். அவரது முதல்படமான கோகிலாவிலிருந்து கடைசியாக வெளிவந்த தலைமுறைகள் வரை அதுதான் தொடர்ந்தது. தான் இயக்கும் படங்களுக்கான இசை, குறிப்பாக பின்னணி இசை எங்கு தொடங்கி எங்கு முடிய வேண்டும், அது எப்படிப்பட்ட இசையாக இருக்கவேண்டும் என்பவற்றில் அவர் வெகு உன்னிப்பாக இருப்பார்.
பாலுமகேந்திராவின் படங்கள் மத்தியதரவர்க்க மனிதர்களைப் பற்றியவை. அவரது பாத்திரங்களில் குறிப்பாக ஆண்களுக்கிடையில், உடல்ரீதியான வன்முறையைப் பிறர் மீது செலுத்துகிறவர்கள் எவரையும் காண்பது அரிது. சமூக வன்முறை என்பதனையும் அவரது படங்கள் சித்திரித்ததில்லை.
வீடு படத்தில் முதுமையின் பயணம் எப்படிப்பட்டது என்பதை அவ்வளவு நுட்பமாகப் பதிவு செய்திருப்பார் பாலுமகேந்திரா. அடர்ந்த காட்டின் நடுவே சலனமற்று ஓடும் நதியில் நிதானமாக மூழ்கிக் களிக்கும் சிலிர்ப்பை எப்படி சொல்லி புரியவைக்க முடியாதோ, அதுபோலத்தான் அவர் இயக்கிய சந்தியா ராகம் படமும்.
அவர் கடைசியாக ஒரு விழாவின்போது சொன்னது என்ன தெரியுமா..? “நல்ல சினிமா எடுக்கவேண்டும் என்று புறப்பட்டுவந்து இந்த 40 வருடங்களில் எனக்குப்பிடித்து நான் எடுத்த இரண்டே நல்ல படங்கள் ‘வீடு’, ‘சந்தியா ராகம்’ என ரெண்டே படங்கள் தான். “நான் இருக்கும் வரை இதுபோன்ற படங்களை எடுத்துக்கொண்டே இருப்பேன். என்று நான் படம் எடுப்பதை நிறுத்துகிறேனோ, அன்று நான் இல்லை”.. இந்த தள்ளாத வயதிலும் கடைசியாக அவர் இயக்கிய தலைமுறைகள் பட்த்திலும் தான் சொன்னதை செயலில் காட்டினார் பாலுமகேந்திரா..
இளைய தலைமுறையினருக்கு சினிமா எடுக்கும் சூத்திரங்களை கற்றுக்கொடுத்து வந்த அந்த பீஷ்மர், இன்னொரு விஷயத்தையும் மேடைதோறும் தவறாமல் வழியுறுத்தி வந்தார். அதுதான் திரைப்பட காப்பகம் உருவாக்குதல்.
“நம் தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்க கோடிகளைக் கொட்டுகிறார்கள், கதாநாயகனுக்கு அள்ளிக்கொடுக்கிறார்கள்.. படம் வெளியான பின்பும் பலர் கோடிகளில் லாபம் சம்பாதிக்கிறார்கள். ஆனால் இந்தப்படங்களின் நெகட்டிவ்களை பாதுகாத்து வைப்பதில் மட்டும் யாருமே முனைப்பு காட்ட மாட்டேன் என்கிறார்கள். தங்களது படத்தை என்றாவது திரும்பவும் மறுதிரையீடு செய்யவேண்டியிருக்கும் என்பதை மறந்துவிடுகிறார்கள். இன்று கர்ணன், ஆயிரத்தில் ஒருவன், பாசமலர், வசந்தமாளிகை ஆகிய படங்கள் மறுதிரையிடல் மூலம் மிகப்பெரிய லாபத்தை ஈட்டியிருக்கின்றன. அதனால் தமிழ்சினிமாவிற்குத் தேவை ஒரு திரைப்பட காப்பகம். இதற்கு தயாரிப்பாளர்களுடன் சேர்ந்து தமிழக அரசும் நிதி ஒதுக்கி ஒத்துழைக்கவேண்டும்” – இதுதான் பாலுமகேந்திரா அடிக்கடி நினைவுபடுத்தி வந்த விஷயம்..
ஒளிப்பதிவிற்காக இரண்டுமுறையும் நல்ல படங்களுக்காக மூன்றுமுறையும் தேசிய விருது பெற்றவர் இவராகத்தான் இருக்கமுடியும். சொல்லப்போனால் விருதுகள் இவரைத்தேடிவந்து தங்களுக்கு பெருமை தேடிக்கொண்டன என்றுதான் சொல்லவேண்டும்..
தமிழின் மீது பொறுப்பும், தமிழர்கள் மீது அக்கறையும், தமிழ் சினிமாவின் மீது அதீத காதலும் கொண்ட ஒரு மாபெரும் போராளி தான் பாலுமகேந்திரா. இன்றைய இளம் ஒளிப்பதிவாளர்களும் வளரும் இயக்குனர்களும் கட்டாயம் படிக்கவேண்டிய ஒரு திறந்த புத்தகம் தான் பாலுமகேந்திரா.
அவர் நம்மைவிட்டு மறைந்தாலும் சினிமாவிற்கு அவர் செய்திருக்கும் பணி காலத்திற்கும் கலங்கரை விளக்கமாக நின்று ஒளிகாட்டும்.. தன்னை பின்பற்றும் சினிமா சந்ததியினருக்கு வழிகாட்டும்..