பைரவா – விமர்சனம்

278

         bairava review                    

மனித உயிரை காப்பற்ற உதவும் மருத்துவக்கல்வி வீணர்களின் கையில் சிக்கி வியாபாரம் ஆகிவிடக்கூடாது என்கிற கருத்தை மையப்படுத்தி, விஜய் படத்துக்குண்டான சகல மசாலாக்களையும் சேர்த்து வெளியாகியுள்ள படம் தான் ‘பைரவா’.
 

சென்னையில் கலெக்சன் ஏஜெண்ட்டாக வேலைபார்க்கும் விஜய்க்கு, ஒய்.ஜி.மகேந்திரன் மகள் திருமணத்துக்காக திருநெல்வேலியில் இருந்து, வருகின்ற கீர்த்தி சுரேஷை கண்டதும் காதல்.. அவர் ஊருக்கு திரும்புவதற்குள் காதலை சொல்லிவிட முயற்சிக்கும் விஜய்க்கு திருநெல்வேலியில் கீர்த்தி சுரேஷ் எப்படிப்பட்ட இக்கட்டான சூழலில் சிக்கியிருக்கிறார் என்பது தெரியவருகிறது.

 
திருநெல்வேலியில் மெடிக்கல் காலேஜ் நடத்திவரும் ரவுடியான ஜெகபதிபாபுவின் அராஜகமும் அவரது சூழ்ச்சியில் பலியான கல்லூரி மாணவியின் மரணமும் கல்லூரி மாணவர்களின் எதிர்காலமும் கூடவே கீர்த்தி சுரேஷின் காதலுமுமாக எல்லம் சேர்த்து விஜய்யை நெல்லைக்கு டிக்கெட் போட வைக்கின்றன.. நெல்லை வந்து இறங்கிய கணத்தில் இருந்து விஜய்க்கும் ஜெகபதிபாவுக்கும் நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் மீதிப்படம்..

 
விஜய்க்கு விளையாடுவதற்கு நிறைய இடம் உள்ள கதை தான்.. ஆனால் முதல் அரைமணி நேரத்தை காமாசோமாவென நகர்த்தி விஜய்யை வீணடித்திருக்கிறார்கள்.. விக் வைத்த விஜய் புதிதாக இருக்கிறார்.. ஆக்சன் காட்சிகளில் தெறிக்கவிடும் விஜய், காதல் காட்சிகளில் பெரிய அளவில் ஸ்கோர் பண்ண தவறுகிறார்.. இல்லையில்லை ஸ்கோர் பண்ணும்படியான காட்சிகள் இல்லை என்றுகூட சொல்லலாம்.
 

கோயம்பேடு ஆம்னி பஸ்டாண்ட் சண்டைகாட்சியில் அதிரவைக்கிறார் விஜய். சமீபகாலமாக வரும் விஜய் படங்களில் உள்ள மிகப்பெரிய மைனஸ் பாயிண்ட்டே அவர் எல்லா வசனங்களையும் பஞ்ச் வசனமாகவோ, அல்லது கிண்டல் வசனமாகவோ பல்லை கடித்துக்கொண்டு பேசுவதுதான். இதிலும் அதற்கு குறைவில்லை.. அடுத்துவரும் இயக்குனர்களாவது அதை மாற்றுவார்களா என பார்க்கலாம்.
 

மருத்துவ கல்லூரி மாணவியான கீர்த்தி சுரேஷை வெரைட்டி மீல்ஸ் கணக்காக காதல், செண்டிமெண்ட், கோபம் என கனகச்சிதமாக கலந்து கமர்ஷியல் கதாநாயகியாக உலவ விட்டிருக்கிறார்கள். இன்னொரு கதாநாயகியாக பிளாஸ்பேக்கில் கொஞ்ச நேரமே வந்தாலும் நடிப்பால் மனதில் நிற்கிறார் அபர்ணா வினோத்.
 

வில்லன் ஜெகபதி பாபு.. வழக்கம்போல தனது ரவுடித்தனத்தால் மற்றவர்களை மிரட்டி, ஆனால் ஹீரோவிடம் சிக்கி சின்னாபின்னப்படும் கேரக்டர்.. இம்மி பிசகாமல் செய்திருக்கிறார்.. அடியாளாக டேனியல் பாலாஜி.. ஆரம்பத்தில் வில்லத்தனம் காட்டி பின் அப்ரூவர் ஆகி அநியாயத்திற்கு உயிரை விடுகிறார். விஜய்க்கு உதவுவதற்கே சதீஷுக்கு  நேரம் சரியாக இருப்பதால் காமெடி ஏரியாவில் சரக்கு குறைச்சல் தான். நான் கடவுள் ராஜேந்திரனையும் வீணடிக்கவே செய்திருக்கிறார்கள்.
 

கெட்டவராக இருந்து நல்லவராக மாறும் ஹரீஷ் உத்தமன், அவரது மனைவியாக வரும் ‘றெக்க’’ புகழ் மாலாக்காவான ஷிஜா ரோஸ், அபர்ணாவின் தந்தை விஜயராகவன், நட்புக்காக ஒய்.ஜி.மகேந்திரன் என அவரவர் தங்களது பங்களிப்பை சரியாகவே செய்திருக்கிறார்கள்.
 

சந்தோஷ் நாராயணன் இசையில் படத்தில் வரும் பாடல்களுக்கு விஜய் ரசிகர்கள் எழுந்து ஆடுகிறார்களே தவிர, அவரது முந்தைய படங்களின் பாடல்களால் ஈர்க்கப்பட்ட பொதுவான ரசிகர்களுக்கு குறைவான தீனியையே தந்திருக்கிறார். கமர்ஷியல் படங்களுக்குண்டான வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார்.
 

பெரிய மனிதர்கள் போர்வையில் கல்லூரி நடத்திவரும் ரவுடிகள் பற்றியும் அவர்களது கல்லூரி நிர்வாகம் பற்றியும் அவ்வப்போது செய்தித்தாள்களில் படிக்க நேர்வதால் கதையின் உண்மைத்தன்மை நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறது. ஆனால் ஆக்சன் காட்சிகளுக்கு வசதியாகவும் ஹீரோவை மாஸ் ஆக காட்டவும் லாஜிக் இல்லாத பல காட்சிகளை உள்ளே நுழைத்திருக்கிறார் இயக்குனர் பரதன்.

குறிப்பாக, முதல்நாள் மாலை சென்னையில் இருந்து கிளம்பி மறுநாள் காலை நெல்லைக்கு வரும் விஜய் இன்கம்டாக்ஸ் அதிகாரி என்கிற பெயரில் ஒரு குரூப்பாக ஜெகபதிபாபு வீட்டில் நுழைந்து ரெய்டு நடத்தி ஆவணங்களை கைப்பற்றுகிறார்.. ஆனால் அந்த ஒரு இரவுக்குள் ஐடி கார்டு முதல், செட்டப் ஆட்கள், வாகனங்கள் வரை விஜய்யால் எப்படி ஒன்று சேர்க்க முடிந்தது.. அதுவும் சென்னையில் இருந்துகொண்டு ஆள் பழக்கம் இல்லாத திருநெல்வேலியில்.. இதில் ஜெகபதிபாபு சினிமாவில் நடிப்பது போல போஸ்டர் ஒன்றையும் தயாரித்து அதையும் விடிகாலைக்குள் நெல்லை முழுவதும் ஓட்ட வைக்கிறாராம். அதைவிட ஜெகபதிபாபு வீட்டு வாசலிலேயே அவருக்கு தெரியாமல் ஒட்டுகிறாராம். 

க்ளைமாக்ஸில் பிரதமருக்காக வரும் அதிரடிப்படை வீரர்களை வைத்து ஜெகபதிபாபுவிடம் விஜய் ஆடும் கேம் இதைவிட செம பூச்சுத்தல். அதிலும் விஜய் கேட்டார் என சதீஷ் கொண்டுவந்து தரும் சமாச்சாரங்கள் எல்லாம் சாமானியன் எளிதில் வாங்கவே முடியாத சாதனங்கள்.. குறிப்பாக ஒரு நகரத்திற்கு பிரதமர் வருகிறார் என்கிறபோது சாத்தியமே இலாத ஒன்று.
 

இதுபோன்று இன்னும் சில அதிரடி அயிட்டங்களை தனது வசதிக்கேற்ப ஆங்காங்கே புகுத்தியிருக்கிறார் இயக்குனர் பரதன். அதைக்கூட பொறுத்துக்கொள்ளலாம்.. ஆனால் இந்தப்படம் தொடங்கியதில் இருந்தே இதில் விஜய் டபுள் ஆக்சன் பண்ணுகிறார் என்றும் எங்க வீட்டுப்பிள்ளை எம்.ஜி.ஆர் போல நடிக்கிறார் என்றும் ஒருசிலர் பில்டப் கொடுத்ததையும் அதை எதிர்பார்த்துப்போன ரசிகனை சிங்கிள் விஜய்யை மட்டும் காட்டி ஏமாற்றியதையும் மட்டும் மன்னிக்கவே முடியாது.

Comments are closed.