அரண்மனை – விமர்சனம்

66

அரண்மனை வாரிசுகளான வினய், சித்ரா லட்சுமணன், மனோபாலா, நிதின் சத்யா உட்பட சொந்த பந்தங்கள் அரண்மனையை விற்பதற்காக ஒன்று கூடுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு நாள் இரவும் திகிலுடனேயே நகர்கின்றன. லட்சுமிராய், ஆண்ட்ரியா இருவரின் கண்களில் அந்த வீட்டில் உலாவும் பேய் தட்டுப்படுகிறது. இதற்குள் மர்மமான முறையில் மூன்று பேர் இறக்கிறார்கள்.

அந்த வீட்டிற்கு வரும் ஆண்ட்ரியாவின் அண்ணன் சுந்தர்.சி, உண்மையை ஆராயத் தொடங்குகிறார். பேயின் நதிமூலத்தை அவர் கண்டுபிடிக்கும் வேளையில் நாலாவது ஆளுக்கு குறிவைக்கிறது பேய். போதாததற்கு ஆண்ட்ரியாவின் மீது நிரந்தரமாக இறங்கி அவரது கணவன் வினய்யை தன்வசப்படுத்த நினைக்கிறது. பேயாய் அலைவது யார்..? அதன் எண்ணம் நிறைவேறியதா? இல்லை சுந்தர்.சி அதை முறியடித்தாரா? அது திக் திக் க்ளைமாக்ஸ்..

வினய், சுந்தர்.சி என இரண்டு ஹீரோக்கள் இருந்தாலும் இருவரையும் ஓவர்டேக் பண்ணுபவர் சந்தானம் தான். சுவாமிநாதனுடன் சேர்ந்துகொண்டு இவர் அடிக்கும் காமெடி கூத்துக்களை பார்க்க, தியேட்டருக்கு போகும்போதே வயிற்றுவலி மாத்திரையுடன் சென்றுவிடுவது உத்தமம். குறிப்பாக பேயிடம் இவர்கள் இருவரும் மாட்டிக்கொள்ளும் இடம் இருக்கிறதே.. அந்த பேய்க்கே சிரிப்பு வந்துவிடும்.

கவர்ச்சிக்கு, கலக்கலுக்கு லட்சுமிராய், ஆண்ட்ரியா… பிளாஸ்பேக்கில் மட்டும் ஹன்சிகா. இதில் ஆண்ட்ரியா உங்களுக்கு தரும் வரவேற்பு இரண்டு நாளைக்கு தூங்க விடாது.. ஆனால் இடைவேளைக்குப்பின் வரும் ஹன்சிகா தான் பாவம்… மனோபாலா, கோவை சரளா காமெடி இதில் போரடிக்காதது ஆச்சர்யம்..

50% திகில், 50% காமெடி என சரிவிகிதமாக பிரித்திருக்கிறார் சுந்தர்.சி. திகில் காட்சிகள் அவ்வப்போது பயத்தை ஏற்படுத்தவும் தவறவில்லை.. நகைச்சுவை காட்சிகள் சிரிப்புக்கு உத்தரவாதம் தருகின்றன.. இதெல்லாம் உண்மைதான். ஆனாலும் பேய்க்கேன்று ஒரு உருவத்தை சித்தரித்திருப்பதும், அது அடிக்கடி நமக்கு தரிசனம் தருவதும் பேய் மீதான மரியாதையை குறைத்து விடுகிறது.

தவிர ஏற்கனவே வந்த சில பேய்ப்படங்களில் நாம் பார்த்த காட்சிகள் இதில் ரிப்பீட் ஆவது போன்று ஒரு உணர்வு.. குறிப்பாக கடைசி இருபது நிமிட காட்சிகள்.. இருந்துவிட்டு போகட்டுமே.. படம் பார்க்கப்போகும் நீங்கள் நிச்சயம் மிரள்வீர்கள் என்கிறபோது, அதெல்லாம் எதற்கு..?

முதன்முறையாக தனது ரூட்டிலிருந்து விலகி பேய்க்கதைக்குள் அடியெடுத்து வைத்திருக்கும் சுந்தர்.சி. அதை ஓரளவு திறம்பட நிறைவேற்றி இருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.. இருந்தாலும் படத்தை தூக்கி நிறுத்துவது அவரது எவர்கிரீன் காமெடி ஸ்டைல் தான்.

மொத்தத்தில் இந்த த்ரில்லர், காமெடியில் இருந்து திகிலுக்கு மாறியிருக்கும் இயக்குனர் சுந்தர்.சி.யை ஓஹோவென புகழவைக்கவிட்டாலும், அட த்ரில்லரையும் கூட நல்லாத்தானே பண்ணியிருக்கிறார் என நிச்சயம் உங்களை சொல்லவைக்கும்.

Comments are closed.