நடிகர்கள் : செல்வராகவன், குஷி ரவி, ஆர்.எஸ்.சதீஷ், கெளசல்யா, மைம் கோபி, ஒய்.ஜி.மகேந்திரன், லிர்திகா, சேலம் தீபக்
இசை : ஏ.கே.பிரியன்
ஒளிப்பதிவு : ரவி வர்மா
இயக்கம் : டென்னிஸ் மஞ்சுநாத்
தயாரிப்பு : விஜயா சதீஷ்
டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், செல்வராகவன், குஷி ரவி, ஆர்.எஸ்.சதீஷ், கெளசல்யா ஆகியோரது நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படம் எப்படி இருக்கிறது ?, விமர்சனத்தை பார்ப்போம்.
சாலை வசதி இல்லாத ஒரு மலை கிராமத்தைச் சேர்ந்த செல்வராகவன் நுங்கு வியாபாரம் செய்கிறார். அவருக்கும் குஷி ரவிக்கும் திருமணம் நடக்கிறது. தன்னை ஆசைப்பட்டு திருமணம் செய்து கொண்ட மனைவியை நல்லபடியாக பார்த்துக் கொள்வதற்காக பலரிடம் கடன் வாங்கி நெடுஞ்சாலை அருகே சிறிய உணவகம் ஒன்றை தொடங்குகிறார்.
இதற்கிடையே, செல்வராகவனுக்கு தெரிந்த பெண் ஒருவர் திடீரென்று இறக்கிறார். அவரை தொடர்ந்து செல்வராகவனை சுற்றி சுற்றி வரும் சிறுமி ஒருவரும் மர்மமான முறையில் இறக்கிறார். இதனால் கிராமமே சோகத்தில் மூழ்கியிருக்கும் நிலையில், செல்வராகவனின் மனைவியும் திடீரென்று தற்கொலை செய்துக்கொள்கிறார். மனைவியின் தற்கொலைக்கான பின்னணியை தேடும் செல்வராகவனுக்கு அதிர்ச்சிகரமான உண்மை தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது, என்பதை எளிய மக்களின் வாழ்வியல் மற்றும் சமூக பிரச்சனையாக சொல்வதே ‘மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் மீதிக்கதை.
சாதுவான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொறுந்தியிருக்கும் செல்வராகவன், தன் குணத்தை நடிப்பின் மூலமாகவும் மிக சரியாக வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். மனைவி மீதான அன்பு, அவருக்கு நேர்ந்த கொடுமையை எண்ணி கலங்குவதோடு, அவர் எடுக்கும் அதிரடி விஸ்வரூபம் மூலம் படத்தை தாங்கிப் பிடித்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை குஷி ரவி, அழகில் மட்டும் இன்றி நடிப்பிலும் கவர்கிறார். கணவர் மீதான காதலை வெளிப்படுத்தும் காட்சிகளில் மிக இயல்பாக நடித்து பாராட்டு பெறுகிறார்.
செல்வராகவனின் அக்காவாக நடித்திருக்கும் கெளசல்யாவுக்கு பெரிய வேடம் இல்லை என்றாலும், தனது வேலையை நிறைவாக செய்திருக்கிறார். அவரது கணவராக நடித்திருக்கும் ஆர்.எஸ்.சதீஷ், உணர்வுப்பூர்வமான பல விசயங்களை தனது நடிப்பின் மூலம் நேர்த்தியாக கடத்தி கவனம் ஈர்க்கிறார்.
கந்துவட்டி கொடுப்பவராக நடித்திருக்கும் மைம் கோபி, தன் கதாபாத்திரம் மீது பார்வையாளர்கள் வெறுப்படையும் விதத்தில் நடித்திருக்கிறார். அமைச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் வழக்கம் போல் செயற்கைத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். சிறுமி லிர்திகா, சேலம் தீபக் மற்றும் பல புதுமுகங்கள் மண்ணின் மக்களாக நடித்திருக்கிறார்கள். அவர்களது இயல்பான நடிப்பு, அந்த மண்ணின் வாழ்க்கையை திரையில் மிக சிறப்பாக பிரதிபலித்திருக்கிறது.
ரவி வர்மாவின் ஒளிப்பதிவு, தற்போதைய நவீன காலக்கட்டத்திலும் சாலை வசதி இன்றி இருக்கும் கிராமங்களின் அவலங்களையும், அந்த மண்ணில் வாழும் மனிதர்களின் வாழ்க்கை சூழலையும் நம் கண்முன் நிறுத்துகிறது. இசையமைப்பாளர் ஏ.கே.பிரியனின் இசையில் பாடல்கல் அனைத்தும் மனதில் நிற்கிறது. பின்னணி இசை கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளையும், வலிகளையும் பார்வையாளர்கள் மனதில் கடத்தும் வகையில் பயணித்திருக்கிறது. படத்தொகுப்பாளர் தீபக்.எஸ் பணியும் படத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறது.
எளிய மக்களின் வாழ்க்கை, அவர்களின் எதிர்பார்ப்பு, அதை அடைவதற்கான அவர்களின் கடின உழைப்பு ஆகியவற்றை உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத், கந்துவட்டி கொடுமைகளை எதிர்கொள்ளும் பெண்களின் அவலநிலையை மிக அழுத்தமாக பதிவு செய்திருப்பதோடு, அதற்கான திரைக்கதையை மிக எதார்த்தமாக கையாண்டிருக்கிறார்.
திரைக்கதை மெதுவாக பயணித்தாலும், அது படத்தின் குறையாக அல்லாமல், கதாபாத்திரங்களின் மன போராட்டங்களை படம் பார்ப்பவர்களிடத்தில் கடத்தும் ஒரு யுக்தியாக பயணித்திருக்கிறது. ஒரு கிராமத்தின் வாழ்வியல் மற்றும் அம்மக்களின் பிரச்சனைகளை பேசும் கதை, கணவன், மனைவி இடையிலான காதலை கவித்துவத்துடன் சொல்லி, இறுக்கமான சூழல்களை தளர்த்தி மனம் குளிர செய்து விடுகிறார்.
எளிய மக்களின் வாழ்வியல் மற்றும் அவர்களின் உணர்வுகளை மக்கள் மனதில் அழுத்தமாக பதிய செய்திருக்கும் இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத், பல உண்மைகளை தைரியமாக பேசியிருப்பதோடு, அதற்கான தீர்வுகளை முன் வைத்த விதம் அதிர்ச்சியளித்தாலும், அதன் மூலம் குற்றவாளிகளுக்கு எதிராக எளிய மனிதர் மூலம் அவர் எழுதியிருக்கும் தீர்ப்பு ’மனிதன் தெய்வமாகலாம்’ என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள வைக்கிறது.
ரேட்டிங் 3.5/5
Comments are closed.