சில படங்களுக்கு வைக்கப்படும் டைட்டிலை பார்த்து தியேட்டருக்குப் போனால் திருகு வலி வந்து திரும்ப வேண்டியிருக்கும். சில நல்ல படங்களுக்கு வைக்கப்படும் தலைப்பே படத்திற்கு பலவீனமாகிவிடும். அப்படிப்பட்ட நல்ல படம் ஆப்பிள் பெண்ணே. ஏதோ ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள தியேட்டர்களில் போடப்படும் படம் போல டைட்டில் இருந்தாலும் ஒவ்வொரு ஊரிலும் இந்த படத்தை திரையரங்க முதலாளிகள் தாங்களாகவே முன் வந்து திரையிட வேண்டிய படம்.
எல்லாவற்றையுமே தவறாக புரிந்து கொள்ளும் ரெண்டுங்கெட்டான் வயது மகள். மகளுக்காக தன் வாழக்கையை தொலைத்த பாசக்கார அம்மா. இந்த இருவருக்குள்ளும் நடக்கும் பாசப்போராட்டத்தை துணை கதாபாத்திரங்களோடு சேர்த்து அருமையான திரைக்கதையில் வித்தியாசமான இயக்கத்தில் கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஆர்.கே.கலைமணி பள்ளிக்கூட யூனிபார்மை பார்த்தவுடன் வழக்கமான டூயட், பித்துகுளித்தனமான வசனம் இருக்கும் என்று பார்த்தால் அதைத் தாண்டி நட்பு, பாசம் என்று பயணிக்கிறது கதை. அதுவும் சின்ன கேரக்டருக்கே நடித்து குவிக்கும் தம்பி ராமையாவை அடக்கி வசனத்தைகூட உதடு பிரியாமல் பேசவைத்திருப்பது அந்த கேரக்டரின் கொடுரத்தை காட்டியிருக்கிறது.
யானைக்குழியில் அம்மா விழுந்து விட்டாள் என்று தெரிந்தும் காப்பாற்றாமல் மகள் ஓடுவதைப்பார்த்து ரோஜா கலங்கி அழும் இடம் மனதை பிசைகிறது. அதேமகள் அம்மாவை புரிந்துகொண்டு அதே யானை குழியின் முன் வந்து கதறும் இடம் இயக்குனரின் புத்திசாலித்தனத்தை காட்டுகிறது. இடுப்பு மடிப்பு தெரிய சேலைகட்டிகொண்டு கொஞ்சம் க்ளாமராகவே ஹோட்டல் நடத்தும் பெண்ணாக வரும் ரோஜா ரொம்பவே ரசிக்கவைக்கிறார். தன்னை அல்வாதுண்டாக நினைக்கும் ஆண்களுக்கு மத்தியில் மகளுக்காக உழைத்துப் போடும் அக்கறையான அம்மா கேரக்டர் போல் இனி ரோஜாவிற்கு நல்ல கேரக்டர் அமையாது. உருட்டும் கண்கள், உர்ரென்ற முகமுமாக வந்து அட்டகாச வில்லத்தனம் செய்திருக்கிறார் தம்பி ராமையா. ஹீரோயின் தன்னை கேலி செய்து சிரிக்கும் போதெல்லாம் அமைதியாக இருந்து விட்டு ‘உன் ஜாக்கெட் கிழிஞ்சிருக்கே’ என்று அவர் பண்ணுகிற வில்லத்தனம் கரண்ட் மேட்டர். அம்மாவிடமிருந்து வரும் மகளை காட்டுக்குள் ஒளித்துவிட்டு, அம்மா ரோஜாவிற்கு தானே போய் உதவுவது போல நடிக்கும் இடத்தில் தம்பியார் சரியான நம்பியார். பின்பாதியில் ரோஜாவின் காதல் வாழ்க்கையை காட்டி அவர் கேரக்டரை இன்னும் பட்டைதீட்டியிருக்கிறார் இயக்குனர்.
அதேபோல் தம்பி ராமையாவால் அனுப்பப்படும் வில்லனிடமிருந்து தப்பிக்க ஹீரோயின் குரல் கொடுக்கும் போது சத்தம் வெளியே கேட்காமல் ஒவ்வொரு ஜன்னலாக சாத்துவதும், பிறகு தம்பி ராமையா அதே போல் கத்தும்போது ரோஜா கதவை சாத்தும் இடம் நல்ல திருப்பம். சுரேஷ் ஃபாதராக மாறியதற்கும் அவரை ஹீரோயின் போய் சந்திப்பதற்கும் திரைக்கதையில் சரியான காரணத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர். புதுமுக ஹீரோயின் ஐஸ்வர்யா மேனன் பல படங்களில் நடித்தது போல நடித்திருக்கிறார். ஆனாலும் நட்சத்திர அந்தஸ்து இல்லாத கலைஞர்களால் நல்ல திரைக்கதையின் பலம் கடலில் கரைத்த பெருங்காயம் போலாகிவிட்டது. மணிசர்மா இசையில் பாடல்கள் கேட்டும்படி இருக்கிறது. ஸ்டெடிகேம் பிரபாகர் ஒளிப்பதிவு மலை கிராமத்தை அழகாக காட்டியிருக்கிறது.
ஆப்பிள் பெண்ணே – நல்ல சுவை