நடிகர்கள் : கயல் ஆனந்தி, ஆர்.கே.சுரேஷ், ரூசோ ஸ்ரீதரன், விஜித், பேபி நக்ஷத்ரா, சசி லயா, பரணி, ரித்திகா சக்ரபோர்த்தி, ஹாசின், தரணி ரெட்டி
இசை : சுதர்சன்
ஒளிப்பதிவாளர் : வி.இளையராஜா
இயக்கம் : கே.ராஜசேகர்
தயாரிப்பு : என்.ரஞ்சனி
பாலியல் தொழிலாளிகளை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று கொடூரமாக கொலை செய்யும் சைக்கோ கொலையாளியான ஆர்.கே.சுரேஷை போலீஸ் தேடி வருவது பக்கம் இருக்க, கணவரை இழந்த நாயகி கயல் ஆனந்தியின் மகளை கந்து வடிக்காரர் கடத்தி விடுகிறார். மகளை மீட்பதற்காக வேறு வழியில்லாமல் பாலியல் தொழிலில் ஈடுபட முடிவு செய்யும் கயல் ஆனந்திக்கு ஆர்.கே.சுரேஷிடம் இருந்து அழைப்பு வருகிறது. அதன்படி, அவரது வீட்டுக்கு செல்பவர், அங்கு நிலவும் சூழலையும், சில விசயங்களையும் பார்த்து அங்கு ஏதோ தவறு நடக்க இருப்பதை உணர்வதோடு, தனக்கும் ஏதோ ஆபத்து நேரப்போவதை உணர்ந்து போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்புக் கொள்கிறார்.
ஆனால், ஆனந்தியின் செல்போனில் சிக்னல் கிடைக்காததால், காவல்துறையால் அவர் எங்கிருக்கிறார், என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அதே சமயம், பொருமையாக இருந்த ஆர்.கே.சுரேஷ் தனது விஸ்வரூபத்தை காட்ட தொடங்க, மிரண்டு போகும் கயல் ஆனந்தி, அவரிடம் இருந்து தப்பித்தாரா?, தொடர் கொலைகள் செய்யும் ஆர்.கே.சுரேஷ் யார்?, கயல் ஆனந்தியின் மகள் நிலை என்ன ஆனது? போன்ற கேள்விகளுக்கான விடையை பரபரப்பாக சொல்வது தான் படத்தின் மீதிக்கதை.
நாயகியாக நடித்திருக்கும் கயல் ஆனந்தி அப்பாவியான முகத்தோடு அமைதியாக வலம் வந்தாலும், கொலையாளியிடம் இருந்து தப்பிக்க எடுக்க முயற்சிகளில் மிரட்சி நிறைந்த நடிப்பை மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
சைக்கோ கொலையாளியாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ், வசனம் பேசாமல் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை மிரட்டியிருக்கிறார்.
இளம் வயது ஆர்.கே.சுரேஷாக நடித்திருக்கும் பரணி பார்வையிலேயே மற்றவர்களை பயமுறுத்தும் விதத்தில் இருக்கிறார். கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருப்பவருக்கு நடிக்க நிறைய வாய்ப்புகள் இருந்தும், அதை வெளிப்படுத்துவதற்காக இடங்கள் சரியாக அமையவில்லை.
கயல் ஆனந்தியின் கணவராக நடித்திருக்கும் விஜித், காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ரூசோ ஸ்ரீதரன், போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் சாய் லயா, ரித்திகா சக்ரபோர்த்தி, ஹாசினி, தரணி ரெட்டி என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் சுதர்சனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கவும், முணுமுணுக்கவும் வைக்கிறது. பின்னணி இசை சுமார் ரகம்.
ஒளிப்பதிவாளர் வி.இளைஞராஜா இரவு நேரக் காட்சிகளை நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார். திகில் காட்சிகளை விறுவிறுப்பாகவும், படபடப்பாகவும் காட்சிப்படுத்தி ரசிகர்களை சீட் நுணியில் உட்கார வைத்துவிடுகிறார்.
ஏற்கனவே நாம் பார்த்த சைக்கோ க்ரைம் திரில்லர் பாணியிலான படங்களின் சாயல் தெரிந்தாலும், திரைக்கதை மற்றும் கதையை நகர்த்திய விதத்தில் வித்தியாசத்தை காட்டியிருக்கும் இயக்குநர் கே.ராஜசேகர், சவக்கிடங்கில் நடக்கும் குற்றத்தையும், அது வெளிவராததற்கான காரணத்தையும் சொல்லி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கிறார்.
இயக்குநரின் திரைக்கதை யுக்தி புதிதாக இருந்தாலும், காட்சியமைப்புகள் ஏற்கனவே பார்த்ததாக இருப்பது படத்தின் சுவாரஸ்யத்தை சற்று குறைத்தாலும், சைக்கோ கொலையாளியின் பின்னணி, ஆனந்தியை மையப்படுத்திய கதை போன்ற படத்தை ஆர்வத்தோடு பார்க்க வைக்கிறது.
ரேட்டிங் 2.5/5