வாகா – விமர்சனம்

காதலித்த பெண்ணுக்காக பார்டர் தாண்டும் எல்லை பாதுகாப்பு படைவீரனின் கதைதான் வாகா.

காஷ்மீரில் சலமாபாத் பகுதியில் எல்லை பாதுகாப்பு படைவீரனாக பணியிலிருக்கிறார் விக்ரம் பிரபு. அங்கே துறுதுறுவென ஓடியாடும் இஸ்லாமிய பெண்ணான ரன்யவை கண்டதும் காதல் கொள்கிறார்.. சில நாட்களில் ரன்யாவும், விக்ரம் பிரபுவின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டுகிறார். திடீரென அந்தப்பகுதியில் ஏற்படும் கலவரத்தால், பாகிஸ்தானில் இருந்து வந்து தங்கியிருக்கும் அனைவரும் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்படுகின்றனர். அப்போதுதான் விக்ரம் பிரபுவுக்கு, ரன்யா ஒரு பாகிஸ்தானி என தெரிய வருகிறது..

பாகிஸ்தான் அனுப்பப்பட்டவர்கள் வழியிலேயே கலவரக்கார்களால் தாக்கப்பட, அவர்களிடம் இருந்து ரன்யாவை காப்பாற்றி பத்திரமாக இந்திய எல்லையை தாண்டி அவரது ஊரில் கொண்டுபோய் விடுகிறார் விக்ரம் பிரபு. அடுத்த கணமே பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி சிறையில் அடைக்கப்படுகிறார். சிறையில் கொடும் சித்திரவதைகளை சந்திக்கும் அவரால், தனது காதலியை கைப்பிடிக்க முடிந்ததா..? இல்லை பாகிஸ்தான் சிறையிலேயே அவரது ஆயுள் முடிந்ததா.? என்பது க்ளைமாக்ஸ்.

எல்லை பாதுகாப்பு படைவீரர் கேரக்டரில் விக்ரம் பிரபு செம பொருத்தம். ஆனால் ஒரு வீரருக்குண்டான துடிப்பான காட்சிகள் இல்லாமல், கிராமத்து பொலிகாளை போல காதலுக்காக சுற்றுவதையும் தண்ணியடிப்பதையும் மட்டுமே ஆரம்ப காட்சிகளில் அவர் செய்வதால் அவரது கேரக்டரின் மீதான மரியாதை குறைந்து விடுகிறது.. பாகிஸ்தான் சிறையில் அவர் சிக்கிக்கொள்வதும், பின்னர் தப்பிக்க முயலும் காட்சிகளும் பரபரப்பு..

ஆஹோ ஓஹோ அழகு என தூக்கிவைத்து கொண்டாட முடியாவிட்டாலும், பாகிஸ்தானி பெண்ணாக மிகச்சரியாக தனது கேரக்டரில் பொருந்துகிறார் அறிமுக நாயகி ரன்யா ராவ். வசனங்களை குறைத்து சின்னச்சின்ன முகபாவங்களாலேயே நடிப்பை வெளிப்படுத்துகிறார் ரன்யா. விக்ரம் பிரபுவின் சித்தப்பாவாக வரும் கருணாஸ் இந்தமுறை சென்டிமென்ட்டில் செட்டாகிறார்.

பாகிஸ்தானிய ராணுவ அதிகாரியாக நடித்திருப்பவரும் அவருக்கு பக்கபலமாக நடித்திருப்பவர்களும் பொருத்தமான தேர்வு என்பதை தங்களது நடிப்பால் வெளிப்படுத்தியுள்ளார்கள்.. பாகிஸ்தான் ராணுவ வீரரிடமும் மனிதாபிமானம் உண்டு என்பதையும் மறவாமல் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் குமாரவேலன்..

இமான் இசையில் பாடல்களை விட பின்னணி இசைக்கோர்ப்பு கச்சிதம். காஷ்மீரிலேயே நாமும் வசிப்பதுபோல, காட்சிகளை நம் கண் முன்னே நிறுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுகுமார். விக்ரம் பிரபு எல்லை தண்டும் காட்சிகளையும் தப்பிக்க முயலும் காட்சிகளையும் இன்னும் திரில்லிங்காக காட்டியிருக்கலாம். பாகிஸ்தான் ராணுவத்திடம் மாட்டிக்கொள்பவன் தானும் தப்பித்து தனது காதலியையும் மீட்டுக்கொண்டு வரும் ‘காதில் பூச்சுற்றும் கதையை இன்னும் நம்பகத்தன்மையான திரைக்கதையுடன் படமாக்கி இருக்கலாம். ஆரம்பகட்ட காதல் காட்சிகள் படத்திற்கு பெரிய பின்னடைவுதான்.

ஆனாலும் வழக்கமான மசாலாக்களாக பார்த்து சலித்த நமக்கு, ராணுவ பின்னணியில் சொல்லப்பட்ட ‘வாகா’ படம் கொஞ்சம் ஆசுவாசம் தருவதென்னவோ உண்மை.

G. N. R. KumaravelanRanya RaoVikram PrabhuWagah Tamil Movie Reviewவாகா – விமர்சனம்