மந்திரிக்கு வலதுகையாக இருப்பவர் எம்.எல்.ஏ ரோபோ சங்கர்.. அவருடைய விசுவாசி டெய்லர் விஷ்ணு. உள்ளூரில் ஹோட்டல் நடத்தும் ஞானவேல் தனது மகள் நிக்கி கல்ராணிக்கு எப்படியாவது போலீஸ் வேலை வாங்கி கொடுக்கச்சொல்லி விஷ்ணுவிடம் பத்து லட்ச ரூபாயை கொடுக்கிறார். நிக்கியின் மீதுள்ள காதலால், அவருக்கு வேலை வாங்கித்தந்துவிட வேண்டும் என நினைக்கும் விஷ்ணு, அதை அப்படியே மந்திரியை பார்க்க வெளியூர் கிளம்பும் ரோபோ சங்கரிடம் அதை கொடுக்கிறார்..
போன இடத்தில் ரோபோ சங்கரிடம் 500 கோடி ரூபாய் ரகசியத்தை சொல்லிவிட்டு மந்திரி இறக்கிறார். அந்த ரகசியத்தை தெரிந்துகொள்ள மந்திரியின் மச்சான் ரவிமரியா, ரோபோவை துரத்த, அவர் கார்விபத்தில் சிக்கி கோமாவுக்கு போகிறார். கொஞ்சநாள் கழித்து ரோபோவுக்கு நினைவு திரும்பினாலும் சின்னப்பையன் போல நடந்துகொள்கிறார்.
இந்தநிலையில் மெரிட்டில் நிக்கி கல்ராணிக்கு போலீஸ் வேலை கிடைக்கிறது.. பத்து லட்சத்தை விஷ்ணு அபேஸ் பண்ணிவிட்டதாக நிக்கி நினைக்க, உண்மையை தெரிவிக்க வேண்டிய ரோபோவிடம் இருந்து விஷ்ணு, நடந்தை சொல்லவைக்க முயற்சிக்கிறார், மந்திரி சொன்ன ரகசியத்தை தெரிந்துகொள்ள மச்சானும் இன்னொரு பக்கம் முயற்சிக்க கடைசியில் என்ன ஆனது என்பதை தெரிந்துகொள்ள படத்திற்கு ஒரு ட்ரிப் அடித்துத்தான் பாருங்கள்..
லாஜிக், கருத்து சொல்வது என எதையும் கணக்கில் கொள்ளாமல் சிரிக்க வைக்கவேண்டும் என்பதை மட்டுமே கவனத்தில் வைத்து படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் எழில். விஷ்ணு முழு நீள காமெடியில் இறங்க முயற்சித்து பாஸ்மார்க்கும் வாங்கியுள்ளார்.. கொஞ்சம் கவர்ச்சி, கொஞ்சம் கலகலப்புக்கு நிக்கி கல்ராணி கன கச்சிதமாக பொருந்துகிறார்.
படத்தின் இரண்டு முக்கிய தூண்கள் சூரியும் ரோபோ சங்கரும் தான். ஒரு பவுன் மோதிரத்துக்கு ஆசைப்பட்டு ‘புஷ்பா புருஷன்’ ஆக மாறி அவர் படும் அவஸ்தை இருக்கிறதே.. படம் முழுதும் கலாட்டாதான். அந்த புஷ்பாவும் செம அப்ளாஸ் அள்ளுகிறார். க்ளைமாக்ஸுக்கு முன் ஒரு இருபது நிமிடம் ரோபோ சங்கரின் ராஜ்யம் தான். அதிலும் “காலையில் ஆறு மணிக்கு கோழி கூவுச்சு’ என்கிற டயலாக்கை அவர் தொடர்ந்து ரிப்பீட் அடிக்கும் காட்சியில் சிரிக்காதவர்கள் மனிதர்களாகவே இருக்க முடியாது. அந்த இருபது நிமிடம் தான் படத்தையும் காப்பாற்றுகிறது.
ரோபோ சங்கிடம் இருந்து உண்மையை தெரிந்துகொள்ள பலவிதமாக முயற்சி பண்ணும் ரவிமரியாவும் காமெடியில் இறங்கி அடித்திருக்கிறார்.. சபாஷ்.. நான் கடவுள் ராஜேந்திரன் இருந்தாலும் அவருக்கு வேலை குறைவுதான். படத்தில் காமெடியே முழு ஆக்கிரமிப்பு பண்ணுவதால் சத்யாவின் இசையில் பாடல்கள் பெரிதாக எடுபடவில்லை. வெகு சாதாரணமான கதை தான்.. ஆனால் ரசிகர்களை இரண்டுமணி நேரம் சிரிக்க வைக்கும் முயற்சியில் இயக்குனர் எழில் வெற்றிக்கோட்டை தொட்டுள்ளார்.