நடிகர்கள் : அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, மிஷ்கின், ரிதா, சண்முகராஜா, டாக்டர்.யோஹன் சாக்கோ, அருள்தாஸ், தருண் மாஸ்டர், தயா செந்தில், பாண்டி ரவி, சேரன் ராஜ், பிருந்தா சாரதி, பாலா சிவாஜி, கவிதா கோபி
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார் & சாம்.சி.எஸ்
ஒளிப்பதிவு : ஆர்.பி.குருதேவ்
இயக்கம் : பாலா
தயாரிப்பு : வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் – சுரேஷ் காமாட்சி
கன்னியாகுமரியில் தனது தங்கையுடன் வாழ்ந்து வரும் அருண் விஜய், தன் கண் முன் எந்த தவறு நடந்தாலும், அதை யார் செய்தாலும், அதிரடியாக தட்டிக்கேட்கும் கடும் கோபம் கொண்டவர். அந்த வகையில், அவர் வேலை பார்க்கும் ஆதரவற்ற மாற்றுத்திறனாளி பெண்கள் இல்லத்தில் இருக்கும் பெண்களுக்கு எதிராக ஒரு அநீதி நடக்க, அதற்கு காரணமானவர்களுக்கு அவர் கடும் தண்டனை வழங்குகிறார். அதனால், அவரது வாழ்க்கை என்னவானது என்பதை சொல்வதே படத்தின் மீதிக்கதை.
கோட்டி என்ற கதாபாத்திரத்தில் முரட்டுத்தனமும், கடும் கோபமும் கொண்ட இளைஞராக அருண் விஜய் மிரட்டியிருக்கிறார். வசனம் ஏதும் பேசாமல் தனது உடல் அசைவுகள் மற்றும் முக பாவனைகள் மூலமாகவே பல உணர்வுகளை ரசிகர்களிடத்தில் கடத்தியிருப்பதோடு, கடுமையாகவும் உழைத்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ரோஷினி பிரகாஷின் அறிமுகம் அமர்க்களமாக இருந்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் நாயகனை ஒருதலையாக காதலிப்பது, அவரது முரட்டுத்தனத்தை ரசிப்பது, அவருக்காக கண்ணீர் சிந்துவது, என பார்வையாளர்களின் மனதில் ஒட்டாமல் ஓடிவிடுகிறார்.
அருண் விஜயின் தங்கையாக நடித்திருக்கும் ரிதா, அண்ணனின் பாசத்திற்காக ஏங்கும் காட்சிகளில் படம் பார்ப்பவர்களையும் கலங்க வைத்துவிடுகிறார்.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் இயக்குநர்கள் மிஷ்கின் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோரது திரை இருப்பு படத்திற்கு பெரும் பலம்.
டாக்டர்.யோஹன் சாக்கோ, சண்முகராஜா, அருள்தாஸ், தருண் மாஸ்டர், தயா செந்தில், பாண்டி ரவி, சேரன் ராஜ், கவிதா கோபி, பாலா சிவாஜி, முனிஷ்குமரன், பிருந்தா சாரதி, தீபிகா என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும் நடிப்பு மற்றும் வசன உச்சரிப்பு மூலம் கன்னியாகுமரி மாவட்ட மக்களாக வலம் வந்திருக்கிறார்கள்.
ஜிவி பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கதைக்களத்தை விவரிக்கும் வகையில் உள்ளது. இசையமைப்பாளர் சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை டைடில் கார்டு போடும் போதே கவனம் ஈட்ப்பதோடு, திரைக்கதைக்கு ஏற்ப அளவாக பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ் எளிய மக்களின் வாழ்வியலையும், அவர்களது உணர்வுகளையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா மற்றும் சண்டைக்காட்சிகளை வடிவமைத்த ஷில்வா இருவரும் இயக்குநர் பாலா சொன்னதை மட்டுமே செய்திருக்கிறார்கள் என்பது படம் முழுவதும் தெரிகிறது.
பேரன்பும், கடும் கோபமும் நிறைந்த விளிம்புநிலை மனிதனை கதையின் நாயகனாக சித்தரித்து, அவர் மூலம் எளிய மக்களுக்கு அநீதி இழைப்பவர்களுக்கு கடும் தண்டனை கொடுப்பதை தனது படங்களின் முக்கிய அம்சமாக வைத்திருக்கும் இயக்குநர் பாலா, இந்த படத்திலும் அதே பாணியை பின்பற்றி தன் ரசிகர்களை திருப்திப்படுத்தியிருக்கிறார்.
எளிய மக்களையும், அவர்களது வாழ்க்கை மற்றும் வலிகளை திரையில் கொண்டு வருவதோடு, அவர்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை எதிர்த்து நிற்கும் நாயகனையும் எளிய மக்களின் ஒருவனாக சித்தரித்து அவர்களை முன்னிலைப்படுத்துவதை தொடர்ந்து செய்து வரும் இயக்குநர் பாலா, தனது கதாபாத்திரங்களின் கடும் கோபத்தை இரத்தம் தெறிக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருந்தாலும், அதை எதார்த்தமான காட்சிகளின் மூலம், சில இடங்களில் கலகலப்பாகவும் கையாண்டு படத்தை ரசிக்க வைத்திருக்கிறார்.
ரேட்டிங் 3.5/5