வலியவன் – விமர்சனம்

 

ஷாப்பிங் மால் ஒன்றில் மார்கெட்டிங் மேனேஜர் ஜெய். ஒருநாள் திடீரென சப்வேயில் எதிர்ப்படும் ஆண்ட்ரியா, ஜெய்யை லவ் பண்ணுவதாக சொல்லிவிட்டு காணாமல் போகிறார். முதலில் அலட்சியப்படுத்தும் ஜெய்யை காதல் உணர்வு உந்தித்தள்ள, ஒரு வழியாக ஆண்ட்ரியாவை கண்டுபிடிக்கும் ஜெய்யிடம் தான் அவரை காதலிக்கவில்லை என முதலில் பிகு பண்ணுகிறார்.

குழம்பும் ஜெய்யிடம் தான் சுட்டிக்காட்டும் ஒருத்தனை அடிக்கவேண்டும் என்றும் அடித்தால்தான் காதலுக்கு க்ரீன் சிக்னல் என்றும் செக் வைக்கிறார்.  அடிக்க வேண்டிய ஆளையும் அடையாளம் காண்பிக்க, அவனோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வாங்கி வந்த பாக்ஸர். அவனை பார்த்ததும் அவனிடம் தீர்க்கவேண்டிய உண்மையான கணக்கு ஒன்று தனக்கும் இருக்கிறது என்பது ஜெய்க்கு தெரிய வருகிறது.

அவன் யார்..? அவனுக்கும் ஜெய்க்கும் என்ன பகை..? சம்பந்தமில்லாமல் ஆண்ட்ரியா அவனை அடிக்க வேண்டும் என ஜெய்க்கு செக் வைப்பது ஏன் என்பதற்கெல்லாம் கடைசி இருபது நிமிடம் விடை சொல்கிறது. தமிழ் சினிமாவில் அவ்வப்போது வந்துபோகும் பாக்ஸிங் கதைக்கு அடித்தளமாக காதல், அவமானம் என புது கோட்டிங் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சரவணன்.

முதல் பாதி முழுக்க காதல் ஸ்டூடண்ட் மாதிரி ஆண்ட்ரியாவை மட்டுமே சுற்றித்திரியும் ஜெய், இடைவேளைக்குப்பின் சட்டையை கிழித்து சிக்ஸ் பேக் காட்டும்போது தனது கேரக்டருக்காக நிறைய ஒர்க் அவுட் பண்ணியிருக்கிறார் என்பது நிறையவே தெரிகிறது. ஆண்ட்ரியாவுடனான காதல் காட்சிகளில் அவரது முந்தைய படங்களின் மேனரிசங்கள் தான் பெருமளவு தலைகாட்டுகின்றன. பாக்ஸிங்கிற்கு அவர் தயாராவது ஓரளவு க்ளைமாக்சில் நம்பகத்தன்மையை கொடுக்கிறது.

கதையில் ட்விஸ்ட் தரும் வேலையை செய்கிறார் ஆண்ட்ரியா. அவருக்கும் ஜெய்யின் தந்தையாக வரும் அழகம்பெருமாளுக்குமான நட்பு அழகு… ஜெய்யை சீண்டும் காட்சிகளில் ஆண்ட்ரியாவிடம் குறும்பு கொப்பளித்தாலும், ஜெய்யிடம் மாட்டிக்கொண்டு அவ்வப்போது அவஸ்தைப்பட்டாலும் அழகாகத்தான் இருக்கிறது. ஆனால் இருவருக்குமான ஜோடிப்பொருத்தம் தான் செட்டாகவில்லை.

வலிந்து திணிக்கப்பட்ட வில்லனாக இல்லாமல் சூழ்நிலையால் வில்லனாக அவதாரம் எடுக்கும் பாக்ஸராக வரும் ஆரான் கடைசி இருபது நிமிடத்தில் ஓரளவு வில்லத்தனம் காட்ட முயற்சித்திருக்கிறார். அழகம்பெருமாள் அவமானப்படும் இடத்தில் பரிதாபத்தை அள்ளுகிறார். பாலசரவனம் ஜஸ்ட் லைக் தட் டயலாக்கிலேயே பில் பண்ணுகிறார். சப்வேயில் ஜெய்க்கு டீ வாங்கித்தந்து அவருக்கு தன்னம்பிக்கை தரும் நபர் நம் மனதில் பதிகிறார்.

யார் வலியவன் என்பதற்கு தனது பாணியில் ஆக்ஷன் விளக்கம் கொடுத்துள்ளார் இயக்குனர் சரவணன். அதற்காக திரைக்கதையை எங்கெங்கோ அழைத்து சென்றிருப்பது தான் அலுப்பு தருகிறது. அதற்கு துணையாக இமானின் இசையில் பாடல்களும் சேர்ந்துகொள்கிறது,. குறிப்பாக ஆண்ட்ரியா – ஜெய் இருவரும் காரில் பயணிக்கும் காட்சி நீளமோ நீளம்..!

ஆனால் வில்லனுடன் அவன் இடத்திற்கே சென்று ஜெய் மோதுவதில் இருந்து கடைசி அரை மணி நேரம் கொஞ்சம் விறுவிறுப்பை கூட்டுகிறது. வலியவனுக்கு ஆரம்பத்தில் இருந்தே கொஞ்சம் பூஸ்ட் கொடுத்திருந்தால் இன்னும் பலமானவனாக இருந்திருப்பான்.

AndreaD ImmanJaiValiyavan reviewஆண்ட்ரியாஇமான்ஜெய்வலியவன் விமர்சனம்