நடிகர்கள் : சிவனைந்தன், ராகுல், கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜானகி, பத்மன், ஜெ.சதீஷ் குமார்
இசை : சந்தோஷ் நாராயணன்
ஒளிப்பதிவு : தேனி ஈஸ்வர்
இயக்கம் : மாரி செல்வராஜ்
தயாரிப்பு : திவ்யா மாரி செல்வராஜ், மாரி செல்வராஜ்
இயக்குநர் மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த சிறு பகுதியை மையமாக கொண்டு உருவாகியுள்ள ‘வாழை’ இயக்குநரின் வழக்கமான அரசியல் பேசுகிறதா? அல்ல மாறுபட்ட பாதையில் பயணிக்கிறதா?, விமசனத்தை பார்ப்போம்.
சிறுவயதிலேயே அப்பாவை இழந்த சிறுவன் பொன்வேல், அம்மா மற்றும் அக்கா அரவணைப்பில் வளர்கிறான். அம்மாவும், அக்காவும் பக்கத்தில் உள்ள ஊர்களில் வாழைத்தார்களை அறுத்து அதை லாரியில் ஏற்றும் பணியை செய்து வருகிறார்கள். பள்ளி விடுமுறை நாட்களில் பொன்வேலும் இந்த பணிக்கு சென்றாலும், அதில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என்று ஏங்கிக்கொண்டிருக்கிறான். இந்த சமயத்தில், வாழைத்தார் அறுக்கும் பணிக்கு தனது அக்கா உள்ளிட்ட ஊர் மக்களுடன் லாரியில் பயணிக்கும் சிறுவன் பொன்வேல், தீடிரென்று பாதியில் லாரியில் இருந்து இறங்கி விடுகிறான். தொடர்ந்து பயணிக்கும் லாரி, அதில் பயணிக்கும் மக்களை மிகப்பெரிய துயரத்தில் தள்ளுகிறது. அதன் மூலம் சிறுவன் பொன்வேல் அனுபவித்த வலியை மக்களிடம் கடத்துவதற்கான இயக்குநர் மாரி செல்வராஜின் முயற்சி தான் ‘வாழை’.
தனது முந்தைய படங்களில் சாதி அரசியலை அதிரடியாக பேசிய மாரி செல்வராஜ், தனது வாழ்க்கையில் நடந்த துயரமான சம்பவத்தை மையமாக கொண்டு இப்படத்தின் திரைக்கதை அமைத்திருப்பதால், படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், உண்மையில் மாரி செல்வராஜ் இந்த படத்தில் எந்தவிதமான அரசியலையும் பேசாமல், தனது வாழ்வில் நடந்த ஒரு துயரமான சம்பவத்தை வைத்துக்கொண்டு, நம் சமூகத்தில் உழைப்பாளிகளை அலட்சியமாக நடத்தும் முதலாளித்துவத்தை பற்றி மேலோட்டமாக பேசியிருக்கிறார்.
கதையின் நாயகன் சிவனைந்தனாக நடித்திருக்கும் சிறுவன் பொன்வேல், தனது கதாபாத்திரத்தை புரிந்து நடித்திருக்கிறார். பூங்கொடி டீச்சர் தனக்கு பிடித்தவர் என்று சொல்லிக்கொண்டு அவர் பயணப்படுவது, வாழைத்தார் வெட்டும் பணிக்கு செல்ல பயந்து நடிப்பது, கமலை வெறுப்பது என அனைத்து இடங்களிலும் எதார்த்தமாக நடித்து கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
சிவனைந்தனின் நண்பனாக சேகர் என்ற வேடத்தில் நடித்திருக்கும் ராகுல், மண்ணின் மைந்தனாக கவனம் ஈர்க்கிறார். சிவனைந்தனின் அம்மாவாக நடித்திருக்கும் ஜானகி, அக்காவாக நடித்திருக்கும் திவ்யா துரைசாமி, கலையரசன், டீச்சராக நடித்திருக்கும் நிகிலா விமல் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் திருநெல்வேலி வட்டார தமிழ் பேசி எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.
சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் அனைத்தும் கதைக்களத்தை சார்ந்து பயணித்திருக்கிறது. குறிப்பாக ஒப்பாரி பாடல் இதயத்தை கனக்கச் செய்கிறது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு திருநெல்வேலியின் பசுமையையும், மக்களின் எளிமையையும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது. விபத்து காட்சியை படமாக்கிய விதம் நேர்த்தி.
தனது படங்களில் பேசப்பட்டு வந்த அரசியலில் இருந்து விலகி இதில் கம்யூனிசம் பேசியிருந்தாலும், அதை அழுத்தமாக பேசாமல், கூலிவேலை செய்யும் விவசாய மக்களுக்கு நேர்ந்த வலிமிகுந்த சம்பவத்தை நம்மில் கடத்தியிருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
வலி மிகுந்த தனது வாழ்க்கை பயணத்தில், ஒரு லாரி பயணம் கொடுத்த கசப்பான சம்பவத்தை வைத்துக்கொண்டு எதார்த்தமான சினிமாவை அனைத்து தரப்பினரும் ரசிக்கும்படி கொடுத்திருக்கும் இயக்குநர் மாரி செல்வராஜ், ரஜினி, கமல் பற்றிய வசனங்கள் மூலம் ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார்.
எளிய மக்களின் வலி மிகுந்த வாழ்க்கையை எதார்த்தமாக விவரிப்பதோடு, இந்தியா போன்ற நாடுகளில் மக்களின் உயிரை அலட்சியமாக பார்ப்பது, உழைப்பாளிகளின் உழைப்பை சுரண்டும் முதலாலித்துவம் ஆகியவற்றை தொட்டிருக்கும் படம் எதார்த்த படைப்புகளை விரும்பும் ரசிகர்களுடன், ஜனரஞ்சக பட விரும்பிகளையும் கொண்டா வைத்து திருப்திப்படுத்தியிருக்கிறது.
ரேட்டிங் 3.5/5