நடிகர்கள் : கார்த்திகேயன், சுகுணா, எம்.சி.வி.தேவராஜ், நெல்லை சிவா, தீப்பெட்டி கணேசன்
இசை : ஜெ.ஆனந்த்
ஒளிப்பதிவு : மகிபாலன்
இயக்கம் : எம்.சி.வி.தேவராஜ்
தயாரிப்பு : வி.டி.எஸ் சினிமாஸ் – வேணுகோபால் தேவராஜ்
அறிமுக இயக்குநர் எம்.சி.வி.தேவராஜ் இயக்கத்தில், அறிமுக நடிகர்கள் கார்த்திகேயன், சுகுணா நடிப்பில், விடிஎஸ் சினிமாஸ் நிறுவனம் சார்பில் வேணுகோபால் தேவராஜ் தயாரிப்பில் வெளியாகியிருக்கும் ‘உருச்சிதை’ படம் எப்படி இருக்கிறது?, விமர்சனத்தை பார்ப்போம்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் அப்பா, அம்மா மற்றும் இரண்டு தங்கைகளுடன் வாழ்ந்து வரும் வாய்பேச முடியாத நாயகன் கார்த்திகேயனுக்கு பெரிய விளையாட்டு வீரராக வேண்டும் என்பது தான் லட்சியம். ஆனால், விபத்தில் தனது பெற்றோர் இறந்துவிட, குடும்ப பொறுப்பை சுமக்கும் நாயகன் தனது லட்சியத்தை ஓரம் வைத்துவிட்டு, தங்கைகளை காப்பாற்றுவதற்காக, அவர்களை அழைத்துக்கொண்டு சென்னைக்கு செல்கிறார்.
சென்னையில் கூலி வேலை செய்து குடும்பம் நடத்தும் அவருக்கு நாயகி சுகுணா உதவி செய்ய, அதன் மூலம் வாழ்வில் உயரத்தை தொடும் நிலையில், அவரது வாழ்வில் விதி விளையாடுகிறது. அதனால், அவரது வாழ்வு என்னவானது என்பதை நெஞ்சு பதறும் வகையில் சொல்வது தான் ‘உருச்சிதை’ படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் அறிமுக நடிகர் கார்த்திகேயன், வாய்பேச முடியாத கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்திருக்கிறார். முதல் படம் என்பதால் அவரது நடிப்பில் இருக்கும் சிறு குறைகளை பார்க்காமல் அவரது முயற்சியை தாராளமாக பாராட்டலாம்.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை சுகுணா, எளிமையாக இருந்தாலும் கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வாக இருப்பதோடு, அளவான நடிப்பு மூலம் தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்.
நெல்லை சிவா மற்றும் தீப்பெட்டி கணேசன் ஆகியோ வரும் காட்சிகள் சில சிரிக்க வைக்கிறது.
சேகர் என்ற வேடத்தில் நடித்திருக்கும் பாடலாசிரியர் ஜெயம்கொண்டான், நாயகனின் அம்மா, அப்பாவாக நடித்திருக்கும் நடிகர் நடிகை, வில்லன்களாக நடித்திருக்கும் நடிகர்கள் என படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் அனைவரும் புதுமுகங்களாக இருந்தாலும் கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நடித்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் மகிபாலன் கதைக்கு ஏற்றபடி காட்சிகளை படமாக்கியிருக்கிறார். ஜெ.ஆனந்த் இசையமைப்பில், கலைக்குமார் வரிகளில் பாடல்கள் கேட்கும்படியும், புரியும்படியும் இருக்கிறது. தீப்பொறி நித்யா வடிவமைத்திருக்கும் சண்டைக்காட்சிகள் எளிமையாக இருந்தாலும் கதையோட்டத்துடன் பயணித்துள்ளது.
எழுதி இயக்கியிருக்கும் எம்.சி.வி.தேவராஜ், எளிமையான கதையை எளிமையான முறையில் படமாக்கியிருந்தாலும், க்ளைமாக்ஸில் கலங்க வைத்துவிடுகிறார்.
காதல், காமெடி, சண்டைக்காட்சிகள், குத்துப்பாட்டு என அத்தனை கமர்ஷியல் அம்சங்கள் இருந்தாலும் அனைத்தையும் அளவாக பயன்படுத்தி குடும்பத்தோடு பார்க்க கூடிய விதத்தில் நாகரீகமான முறையில் படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் எம்.சி.வி.தேவராஜை தாராளமாக பாராட்டலாம்.
ரேட்டிங் 3/5