நடிகர்கள் : யாஷ், கியாரா அத்வானி, நயன்தாரா, ஹுமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த்
இசை : ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா, தனிஷ்க் பாக்சி
ஒளிப்பதிவு : ராஜீவ் ரவி
இயக்கம் : கீது மோகன்தாஸ்
தயாரிப்பு : கே.வி.என் புரொடக்ஷன்ஸ், மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ்
தந்தையை பழி தீர்க்க துடிக்கும் மகன், அதன் பின்னணியில் இருக்கும் உளவியல் பாதிப்பு தான் ‘டாக்ஸிக்’ படத்தின் கதை என்றாலும், இதை 1947 முதல் 1970 காலக்கட்டங்களில் நடைபெறும் மாஃபியா யுத்தங்கள் பின்னணியில் பிரமாண்டமான முறையில் சொல்ல முயற்த்திருக்கிறார் இயக்குநர் கீது மோகன்தாஸ்.
1947-1970 காலக்கட்ட கோவா மாநிலத்தை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாஃபியாக்களின் மோதலில் கதை தொடங்குகிறது. துடிப்பான மற்றும் முரட்டுத்தனம் மிக்க இளைஞரான நாயகன் யாஷ் மற்றும் அவரது சகோதரி நயன்தாரா இருவரும் இணைந்து தங்களது எதிரிகளை வேட்டையாடுகிறார்கள். அக்கா நயன்தாராவுக்கு தனது தம்பி முழு நகரத்தையும் ஆள வேண்டும் என்பது ஆசை. அதற்காக அவருக்கு துணையாக பயணிப்பவர் திடீரென்று சிலரது சதியால் கொல்லப்படுகிறார். அக்காவின் கொலைக்குப் பிறகு கோவாவை விட்டு வெளியேறும் யாஷ், சீனாவில் தனது ராஜ்ஜியத்தை விரிவுப்படுத்துகிறார்.
இதற்கிடையே யாஷ் மீண்டும் கோவா திரும்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது. யாஷியின் வருகையை அறிந்து அவரது மனைவி கியாரா அத்வானி தற்கொலை செய்துக் கொள்கிறார். அவரது 10 வயது மகனை யாஷ் கொலை செய்ய முயற்சிக்கிறார். ஆனால், அது அவரால் முடியாமல் போக, அவரை அங்கிருந்து விரட்டியடிக்கிறார்.
மீண்டும் வழக்கம் போல் கோவாவில் தனது சாம்ராஜ்ஜியத்தை நடத்தும் யாஷ், ருக்மணி வசந்தை திருமணம் செய்துக் கொண்டு, குழந்தை பெற்றுக் கொண்டு வாழ்ந்துக் கொண்டிருக்க, அவரது வாழ்க்கையை புரட்டிப் போடும் சம்பவங்கள் நடக்கிறது. அவரது சாம்ராஜ்யத்திற்கும், அவரது மகனுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. அந்த ஆபத்தில் இருந்து தனது மகனையும், சாம்ராஜ்யத்தையும் யாஷ் காப்பாற்றினாரா ? , அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
ராயா மற்றும் டிக்கெட் என்ற அப்பா-மகன் வேடங்களில் நடித்திருக்கும் யாஷ், விதவிதமான மேல்நாட்டு ஆடைகளை உடுத்திக் கொண்டு, பலவிதமான பெண்களுடன் உல்லாசமாக இருப்பது, விதவிதமான பாட்டில்களில் மது அருந்துவது, கண் இமைக்கும் நேரத்தில் தலை, கை, கால்களை வெட்டுவது என்று வன்முறையும், ஆபாசமும் நிறைந்த ஒரு வாழ்கையை வாழ்ந்திருக்கிறார்.
யாஷின் சகோதரியாக நடித்திருக்கும் நயன்தாரா, ஆரம்பத்தில் சில அதிரடியான காட்சிகளில் அமர்க்களமாக எண்ட்ரி கொடுத்தாலும், அடுத்தடுத்த காட்சிகளில் செட் பிராபர்ட்டி போல் அமைதியாக நிற்க வைக்கப்பட்டிருக்கிறார்.
யாஷின் முதல் மனைவியாக நடித்திருக்கும் கியாரா அத்வானி, இரண்டாவது மனைவியாக நடித்திருக்கும் ருக்மணி வசந்த், காதலியாக நடித்திருக்கும் தாரா சுதாரியா, வில்லியாக நடித்திருக்கும் ஹுமா குரேஷி என திரை முழுவதும் நிரம்பியிருக்கும் நாயகிகளின் நடிப்பை விட அவர்களின் ஆடைகள் தான் கவனம் ஈர்க்கிறது.
ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி, கிராபிக்ஸ் காட்சிகளை சரியான முறையில் காட்சிகளுடன் இணைத்து படத்தை பிரமாண்டமாக காட்டியிருக்கிறார். 1947 – 1970 காலக்கட்டங்களுக்கான உடை மற்றும் கதைக்களத்தை காட்சிப்படுத்துவதற்காக பயன்படுத்திய வண்ணங்கள் பிரமிக்க வைக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது.
ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா, தனிஷ்க் பாக்சி ஆகியோரது இசையில் பாடல்கள் பெரிதாக கவரவில்லை என்றாலும், பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளுக்கு கைகொடுத்திருக்கிறது. படம் முழுவதும் வன்முறை காட்சிகள் நிரம்பியிருப்பதால், அவற்றுக்கு ஏற்ப பயணித்திருக்கும் பின்னணி இசை ஆங்காங்கே அதீத சத்தத்துடன் நம் காதை பதம் பார்த்து விடுகிறது.
பல கிளைக்கதைகள், ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் என்பதால் படத்தொகுப்பாளர் உஜ்வல் குல்கர்னி, பெரும் குழப்பமடைந்திருப்பது கதையை விவரிக்கும் விதத்திலேலேயே தெரிந்து விடுகிறது.
‘கே.ஜி.எப்’-ன் மிகப்பெரிய வெற்றியின் மூலம் ‘டாக்ஸிக்’ மீதான மக்களின் எதிர்பார்ப்பை, பிரமாண்டம் மற்றும் வன்முறை காட்சிகளின் மூலமாக பூர்த்தி செய்ய முயற்சித்திருக்கும் இயக்குநர் கீது மோகன்தாஸ், பலவீனமான திரைக்கதை மூலம் படத்தை பலவீனப்படுத்தி விட்டார்.
யாஷ் மற்றும் கீது மோகன்தாஸ் ஆகியோரது கதையில் பல கிளைக்கதைகள் இருந்தாலும், அவற்றை தெளிவாக விவரிக்காதது, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் பிரமாண்டத்திற்கும், ஆக்ஷன் காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுத்தது படத்திற்கு மிகப்பெரிய பலவீனம்.
இயக்குநர் கீது மோகன்தாஸ், கதை என்னவாக இருந்தாலும், ஹாலிவுட் பாணியில் அதை காட்சிப்படுத்த வேண்டும் என்ற முடிவில், தேவை இல்லாத காட்சிகளை திணித்து பார்வையாளர்களை பதம் பார்த்திருக்கிறார். படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை வன்முறை காட்சிகளும், பெண்கள் உடனான ஆபாசக் காட்சிகளும் அதிகம் நிறைந்திருப்பதோடு, எந்த ஒரு விசயத்தையும் சுவாரஸ்யமாக சொல்லாமல் பார்வையாளர்களை கடுப்பேற்றும் வகையில் சொல்லி படத்தை குதறியிருக்கிறார்கள்.
படத்தை இயக்கியது கீது மோகன்தாஸ் மட்டுமா அல்லது நடித்த அனைவரும் அவர் அவர் பாகங்களையே அவர் அவரே இயக்கி கொண்டார்களா? என்ற சந்தேகம் எழும் விதத்தில் திரைக்கதை கட்டுக்கடங்காத காற்றாற்று வெள்ளம் போல் திசை மாறி பயணித்து, ரசிகர்களை சோர்வடைய வைத்து விடுகிறது.
ரேட்டிங் 2.7/5