’மொத ராத்திரி’ விமர்சனம்

நடிகர்கள் : ரிஷிகாந்த், அனிஷ்மா, ராஜா கருப்புசாமி, சேத்தன், பக்ஸ், சங்கீதா பாலன், பானுப்பிரியா, வர்ஷினி கார்மேகம், அப்துல் லீ, ஏ.வெங்கடேஷ்
இசை : பரத் சங்கர்
ஒளிப்பதிவு : சுரேந்தரன் பரஞ்சோதி
இயக்கம் : ராஜா கருப்புசாமி
தயாரிப்பு : மைத்ரி மூவி மேக்கர்ஸ்

காதல் தோல்வியால் திருமணமே வேண்டாம் இருக்கும் நாயகன் ரிஷிகாந்துக்கு தெரியாமலேயே அவரது குடும்பத்தார் திருமண ஏற்பாடு செய்கிறார்கள். விசயம் அறிந்து மீண்டும் ஊரை விட்டு வெளிநாட்டுக்கு செல்ல முயற்சிக்கும் ரிஷிகாந்த், குடும்பத்தாரின் வற்புறுத்தலினால் திருமணத்திற்கு சம்மதிக்க, அவருக்கும் நாயகி அனிஷ்மாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது.

திருமணத்திற்குப் பிறகு தன மனைவியிடம் மனம் திறந்து பேச முயற்சிக்கும் ரிஷிகாந்துக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் விதமாக அனிஷ்மா, அங்கிருந்து வெளியேறி தன் காதலருடன் ஊரை விட்டு ஓட முடிவு செய்த உண்மை தெரிய வருகிறது. மனைவியின் முன்னாள் காதல் பற்றி அறிந்துக் கொண்டு அவரை அவரது காதலருடன் சேர்த்து வைக்க முடிவு செய்யும் ரிஷிகாந்த், அதற்கான முயற்சியில் இறங்குகிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்கள் தான் படத்தின் மீதிக்கதை,.

நாயகனாக நடித்திருக்கும் ரிஷிகாந்த், நாயகன் பற்றாக்குறையை தீர்ப்பார் என்ற நம்பிக்கையை கொடுக்கும் விதமாக நடித்திருக்கிறார். மருது கதாபாத்திரத்தில் அளவாக நடித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருப்பவர், பல இடங்களில் அமைதியாக இருந்தே தனது உணர்வை சரியான முறையில் வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் அனிஷ்மா அனில்குமார், ‘சிறை’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தை அசால்டாக கையாண்டு பாராட்டு பெறுகிறார். முதல் பாதி படத்தில் குறைவாக பேசியிருப்பவர், இரண்டாம் பாதி படம் முழுவதும் பேசாமலேயே நடித்தாலும், இறுதிக் காட்சியில் தன் மனக்குமுறலை வெளிப்படுத்தி அழும் காட்சியில் கைதட்டல் பெறுகிறார்.

சேத்தன், பக்ஸ், சங்கீதா பாலன், பானுப்பிரியா, வர்ஷினி கார்மேகம், அப்துல் லீ, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவரும் நடிகர்களாக அல்லாமல் கிராமத்து மனிதர்களாக தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்த விதம் திரைக்கதைக்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

ஒளிப்பதிவாளர் சுரேந்தரன் பரஞ்சோதி கதாபாத்திரங்களைப் போல் கதைக்களம் மற்றும் காட்சிகளையும் இயல்பாக படமாக்கியிருக்கிறார். ஒரு திருமண நிகழ்வு மற்றும் திருமண வீட்டில் பயணித்த உணர்வை கொடுப்பவர், இரவு நேர காட்சிகளை மிக சிறப்பாக கையாண்டு கவனம் ஈர்க்கிறார்.

பரத் சங்கரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கதைக்களத்தையும், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. பின்னணி இசையில் சில பாடல்களின் இசை ஒட்டிக்கொண்டிருந்தாலும், காட்சிகளுக்கு உயிரூட்டியிருக்கிறது.

ஒரு நாளில் நடக்கும் கதையாக இருந்தாலும், நேர்த்தியான முறையில் காட்சிகளை தொகுத்து கதையின் இயல்பு தன்மை மாறாமல் படத்தை ந்கர்த்திச் சென்றிருக்கும் படத்தொகுப்பாளர் அசோக் அர்ஜுனன், ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் இருந்தாலும், அனைவர் மீதும் பார்வையாளர்களின் கவனத்தை கடத்தும் வித்தையை சிறப்பாக செய்திருக்கிறார்.

திருமண நிகழ்வில் தொடங்கும் கதை, மொத ராத்திரியோடு முடிவடைந்தாலும், அந்த இடைப்பட்ட நேரத்தில் மனித மனங்களை அலசியிருக்கும் இயக்குநர் ராஜா கருப்புசாமி, காதல் உள்ளிட்ட பல விசயங்களை மேலோட்டமாகவும், நகைச்சுவையாகவும் பேசியிருந்தாலும் பார்வையாளர்கள் மனதில் ஆழமாக பதியும்படி பேசியிருக்கிறார்.

கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம் மற்றும் அவர்களிடம் வேலை வாங்கிய விதம், ஒரு திருமண வீட்டில் நடக்கும் நிகழ்வை உண்மைக்கு நெருக்கமான முறையில் காட்சிப்படுத்திய முறை ஆகியவை வழக்கமான கமர்ஷியல் சினிமாவை கடந்த ஒரு படைப்பாக பாராட்டு பெறுகிறது.

முதல் பாதி எந்தவித தொய்வின்றி நகர்ந்தாலும், இரண்டாம் பாதி படத்தின் நீளம் அதிகமாக இருப்பதும், ஒரே விசயத்தை திரும்ப திரும்ப பேசுவது போல் குடும்ப உறவுகள் மோதிக்கொள்ளும் காட்சி அமைந்திருப்பதும் படத்தை சற்று தொய்வடைய செய்தாலும், ஒரு முழுமையான பொழுதுபோக்கு படமாகவும், எளிமையான விசயத்தை மிக வலிமையாக பேசும் படமாகவும் இந்த ‘மொத ராத்திரி’ வெற்றி முத்திரை படைத்திருக்கிறது.

ரேட்டிங் 4/5

modha rathri movie reviewmodha rathri reviewtamil movie modha rathri reviewதமிழ்ப் படம் மொத ராத்திரி விமர்சனம்மொத ராத்திரி திரைப்பட விமர்சனம்மொத ராத்திரி விமர்சனம்