நடிகர்கள் : சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, இளங்கோ குமரவேல், பக்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக்
இசை : ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு : அரவிந்த விஷ்வநாதன்
இயக்கம் : அபிஷன் ஜீவிந்
தயாரிப்பு : மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோஸ் & எம்.ஆர்.பி எண்டர்டெயின்மெண்ட் – பசிலியன் நசரேத், மகேஷ்ராஜ் பசிலியன், யுவராஜ் கணேசன்
ஈழத் தமிழரான சசிகுமார், தனது மனைவி சிம்ரன் மற்றும் இரண்டு மகன்களுடன் கள்ளத்தனமாக இலங்கையில் இருந்து தமிழகம் வருவதோடு, சட்டவிரோதமாக சென்னையில் குடியேறி வசிக்க தொடங்குகிறார்கள்.
இதற்கிடையே, சசிகுமாரின் குடும்பம் ராமேஸ்வரத்திற்கு வந்த அதே நாளில் அங்கு குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நடக்க, இதற்கும் சசிகுமாரின் குடும்பத்திற்கும் தொடர்பு இருப்பதாக நம்பும் காவல்துறை, அந்த குடும்பத்தை பிடித்து வழக்கை முடிப்பதற்கான முயற்சியில் ஈடுபடுகிறது. அதன் பிறகு என்ன ஆனது என்பதை மேடை நாடகம் போல் சொல்வதே ‘டூரிஸ்ட் ஃபேமிலி’
எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் ஒரே மாதிரியான எக்ஸ்பிரஷன்கள் கொடுக்க கூடிய நடிகர்களில் ஒருவரான சசிகுமார், தனது வழக்கமான பணியை சிறப்பாக செய்திருக்கிறார்.
சசிகுமாரின் மனைவியாக நடித்திருக்கும் சிம்ரனுக்கு பெரிய வேலை இல்லாதது ஒரு பக்கம் இருந்தாலும், சசிகுமாரை விட மூத்தவராக திரையில் தெரிபவர், அவரது மனைவிக்கான கதாபாத்திரத்தில் கொஞ்சம் கூட ஒட்டாமல் பயணித்திருக்கிறார்.
சசிகுமார் – சிம்ரன் தம்பதியின் மூத்த மகனாக நடித்திருக்கும் மிதுன் ஜெய்சங்கர் மற்றும் இளைய மகனாக நடித்திருக்கும் கமலேஷ் ஜெகன் இருவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள். குறிப்பாக சிறுவன் கமலேஷ், தூங்கும் ரசிகர்களை தட்டி எழுப்பும் வேலையை அவ்வபோது செய்திருக்கிறார்.
படத்தின் ஆரம்பத்தில் வரும் யோகி பாபு அதன் பிறகு காணாமல் போய் விடுகிறார். பிறகு படம் முடியும் முன்பு தலை காட்டிவிட்டு மறைந்து விடுகிறார்.
எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பக்ஸ், இளங்கோ குமரவேல், ஸ்ரீஜா ரவி, யோகலக்ஷ்மி என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் செயற்கைத்தனமாக நடித்திருக்கிறார்கள்.
ஷான் ரோல்டன் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.
அரவிந்த விஷ்வநாதன் ஒளிப்பதிவு மேடை நாடகத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன், திரைக்கதையில் பலம் மிக்க அம்சங்கள் பெரிதாக இல்லை என்பதை உணர்ந்து காட்சிகளை சுருக்கி, படத்தின் நீளத்தை குறைத்திருப்பது படத்திற்கு பெரிதும் கைகொடுத்திருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் அபிஷன் ஜீவிந், ஈழத் தமிழர்களின் அவல நிலையை கதைக்கருவாக வைத்துக் கொண்டு திரைக்கதை அமைத்தாலும், அதை நகைச்சுவையாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், படத்தில் இடம்பெறும் நகைச்சுவை காட்சிகள் அனைத்தும் செயற்கைத்தனமாக இருப்பதால் சிரிப்புக்கு பதில் தூக்கம் தான் வருகிறது.
முதல் பாதி முழுவதும் சீரியல் போல் பயணித்தாலும், இரண்டாம் பாதியில் கொனுசம் சிரிக்க வைப்பதோடு, காவல்துறை சசிகுமாரின் குடும்பத்தை நெருங்க நெருங்க என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இயக்குநர் அபிஷன் ஜீவிந், இறுதியில் எதிர்பார்க்காத கிளைமாக்ஸை வைத்து ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்.
ரேட்டிங் 3/5