நடிகர்கள் : கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா, அபிராமி, நாசர், ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், குமரவேல்
இசை : ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு : ரவி கே.சந்திரன்
இயக்கம் : மணிரத்னம்
தயாரிப்பு : ராஜ்கமல் பிலிம் இண்டர்நேஷ்னல், மெட்ராஸ் டாக்கீஸ் – கமல்ஹாசன், மணிரத்னம், மகேந்திரன்
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கமல்ஹாசன் மற்றும் அவரது குழுவினர் டெல்லியில் தாதாக்களாக வலம் வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு எதிரி. இரு தரப்புக்கும் இடையிலான மோதலில் அப்பாவி ஒருவர் கொல்லப்படுகிறார். அங்கிருக்கும் அவரது பிள்ளையை காப்பாற்றும் கமல் அந்த சம்பவத்தின் போது தொலைந்த சிறுவனின் தங்கையை கண்டுபிடித்து தருவதாக சத்தியம் செய்வதோடு, தன்னை போன்ற ஒரு தாதாவாகவும் சிறுவனை வளர்க்கிறார். அவர் தான் சிம்பு.
இளம் வயதிலேயே தொழிலில் இவ்வளவு பெரிய ஆளாகிட்டானே..,என்று கமலே கொஞ்சம் பொறாமைப்படும் அளவுக்கு சிம்புவின் வளர்ச்சி இருக்கிறது. கமலை போல் மற்றவர்களுக்கும் சிம்பு மீது பொறாமை வருகிறது. இப்படி ஒருவர் மீது ஒருவருக்கு பொறாமையும், வன்மமும் ஏற்பட அதுவே கமலுக்கு எதிரான துரோகமாக வளர்ந்து நிற்கிறது. அந்த துரோகத்தினால் கமலின் சாம்ராஜ்யம் சரிந்ததா? அல்லது துரோகிகளை அவர் சாய்த்தாரா? என்பதே மீதிக்கதை.
ராயர் சக்திவேல் கதாபாத்திரம் நடிப்பில் மட்டும் இன்றி ஆக்ஷனிலும் மிரட்டும் கமல்ஹாசன், தற்போதைய தலைமுறை நடிகர்களுடன் அனைத்து விசயங்களிலும் போட்டி போட்டு அமர்க்களப்படுத்தியுள்ளார்.
கமல்ஹாசனுடன் போட்டி போட்டு நடித்திருக்கும் சிலம்பரசன், ஸ்டைலிஷான இளம் ஹீரோவாக ரசிகர்களை கவர்வதோடு, திரிஷாவிடம் மனதை பறிகொடுத்துவிட்டு தவிக்கும் காட்சியில் ரசிகர்களை ஆர்ப்பரிக்க செய்கிறார்.
கதாநாயகர்களின் நாயகியாக நடித்திருக்கும் திரிஷா கொடுத்த வேலையை நிறைவாக செய்திருக்கிறார்.
கமல்ஹாசனின் மனைவியாக நடித்திருக்கும் அபிராமி, நாசர், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், பகவதி பெருமாள் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவருக்கும் சிறிய வேலை என்றாலும் அதை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் “ஜிங்குஜா ஜிங்குஜா…” பாடல் மட்டுமே ஆட்டம் போட வைப்பதோடு முணுமுணுக்க வைக்கிறது. மற்ற பாடல்களை செவி கூட சேர்க்க மறுக்கிறது.
ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் மற்றும் அவரது குழுவினர் கடுமையாக உழைத்திருப்பது திரையில் தெரிகிறது. குறிப்பாக கார் சேசிங் காட்சிகள் மிரட்டலாக இருக்கிறது. ஸ்டண்ட் இயக்குநரும் பாராட்டுக்குரியவர்.
மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இணைந்து எழுதியிருக்கும் கதை, நிழல் உலக தாதாக்களின் துரோகம் நிறைந்த வாழ்க்கை மற்றும் வலிகளை மிக நேர்த்தியாக பிரதிபலித்திருக்கிறது.
திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கும் மணிரத்னம், நிழல் உலக தாதாக்களின் வாழ்வியலை வேறு ஒரு பாணியில் கொடுத்திருக்கிறார். கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் இருவரை சுற்றி கதை நகர்ந்தாலும், படத்தில் இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் திரைக்கதையில் முக்கிய பங்கு வகிக்கும்படி பயணித்திருக்கிறது.
ஒளிப்பதிவு, ஆக்ஷன் காட்சிகள், மேக்கிங் உள்ளிட்ட அனைத்தும் பிரமிக்க வைக்கும்படி இருப்பதோடு, நீண்ட நாட்களுக்குப் பிறகு அதிரடி ஆக்ஷன் படத்தை பார்த்த அனுபவத்தை கொடுக்கிறது.
ரேட்டிங் 3.5/5