’என்ன விலை’ விமர்சனம்

நடிகர்கள் : கருணாஸ், நிமிஷா சஜயன், விஜயலக்‌ஷ்மி வீரமணி, கமலேஷ் ஜெகன், சாஷா, சேத்தன் சீனு, பாண்டி, மோகன்ராம், கவிதாலயா கிருஷ்ணன், சுவாமிநாதன், பூர்ணிமா பாக்யராஜ், நிழல்கள் ரவி, பாண்டி
இசை : சாம்.சி.எஸ்
ஒளிப்பதிவு : ஆல்பி ஆண்டனி
இயக்கம் : சஜீவ் பழவூர்
தயாரிப்பு : ஜித்தேஷ் விஸ்வாம்பரன், அனுகோபால் வேணுகோபால்

ராமேஸ்வரம் தீர்த்தக்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் போது, மக்கள் தண்ணீரில் போடும் காசுகளை கடலுக்குள் மூழ்கி எடுக்கும் பணியை செய்து வரும் கருணாஸுக்கு, அந்த கடலில் ஒரு பதக்கம் கிடைக்கிறது. அதை காவல்துறையிடம் ஒப்படைக்க முடிவு செய்கிறார். அந்த பதக்கத்தை அபகரிக்க நினைக்கும் சில காவலர்கள் அது முடியாமல் போனதால், தப்பித்துக் கொள்வதற்காக கோவில் நகை கொள்ளை வழக்கில் கருணாஸை சிக்க வைத்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அது கோவில் நகை அல்ல, என்பது தெரிந்ததும் அவரை வேறு ஒரு திருட்டு வழக்கில் சிக்க வைத்து விடுகிறார்கள்.

சிறையில் இருக்கும் கருணாஸை காப்பாற்ற வழக்கறிஞர் நிமிஷா சஜயன், சட்டம் போராட்டம் நடத்துகிறார். அவரது வாதத்திறமையால் கருணாஸை நிரபராதி என்று நிரூபிக்கும் நிமிஷா சஜயன், எந்த தவறும் செய்யாமல் தண்டிக்கப்பட்ட சாமானியன் கருணாஸ் குரலாக நீதிமன்றத்தில் ஒரு கேள்வியை முன் வைக்கிறார். இதுவரை நீதித்துறையிடம் யாரும் முன்வைக்காத அந்த கேள்வியால் நீதிபதி அதிர்ச்சியடைய, பாதிக்கப்பட்டவருக்காக பணத்தை தாண்டிய இழப்பீடு ஒன்றையும் நிமிஷா கேட்கிறார்.
வழக்கறிஞர் நிமிஷா சஜயன் கேட்கும் அந்த இழப்பீடு அரசுக்கு எதிரானதாகவும், அரசு வழங்குவதற்கான சாத்தியம் இல்லை என்றாலும், அந்த கேள்வி நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. மக்கள் அரசிடம் பல்வேறு கேள்விகளை முன் வைக்கிறார்கள். சாமானியன் கருணாஸ் கேட்ட அந்த கேள்வியும், அதற்கான தீர்வாக நிமிஷா கேட்ட இழப்பீடு கிடைத்ததா? இல்லையா ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகனாக தவசிமுத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கருணாஸ், தனது திரை இருப்பு மற்றும் உடல்மொழி மூலம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். குடும்பத்திற்காக கடுமையாக உழைக்கும் ஒரு சாதாரண மனிதர் மீது விழும் வீண் பழி அவரை எந்த அளவுக்கு பாதிக்கிறது, என்பதை தனது நடிப்பு மூலம் மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கும் கருணாஸ், தனது அளவான நடிப்பு மற்றும் அழும் காட்சிகளில் பார்வையாளர்களை கண்கலங்க வைத்து விடுகிறார்.

வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிமிஷா சஜயன், சொந்தமாக டப்பிங் பேசி நடித்திருக்கிறார். நீதிமன்ற காட்சிகளில், உணர்வுப்பூர்வமான வசனங்கள் பேசி நடித்திருக்கும் நிமிஷா சஜயன், தனது வாதத்திறமை மூலம் நீதிமன்றக் காட்சிகளுக்கு சுவாரஸ்யம் சேர்த்திருக்கிறார்.

கருணாஸின் மனைவியாக நடித்திருக்கும் விஜயலக்‌ஷ்மி வீரமணி, தங்கையாக நடித்திருக்கும் சாஷா ஆகியோர் இயல்பான முகம் மற்றும் நடிப்பு மூலம் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

வழக்கறிஞர்களாக நடித்திருக்கும் சுவாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணன், நீதிபதிகளாக நடித்திருக்கும் நிழல்கல் ரவி, பூர்ணிமா பாக்யராஜ், டி.எஸ்.ஆர்.ஸ்ரீனிவாசன், காவலர்களாக நடித்திருக்கும் மோகன் ராம், தர்ஷன் உள்ளிட்ட பலர் ஒரு சில காட்சிகளில் முகம் காட்டினாலும், திரைக்கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களாக பயணித்து பார்வையாளர்கள் மனதில் தங்கி விடுகிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஆல்பி ஆண்டனி, இயற்கையான ஒளிகளை மட்டுமே பயன்படுத்தி கதைக்களத்தின் இயல்பு தன்மை மாறாமல் காட்சிகளை படமாக்கியிருக்கிறார். கதை மாந்தர் யார் ?, அவர் செய்யும் தொழிலில் இருக்கும் ஆபத்து என்ன ? போன்றவற்றை விளக்கிய காட்சிகள் கோப்புக் காட்சிகள் என்றாலும் அதை கையாண்ட விதம் மற்றும் நீதிமன்ற காட்சிகளை காட்சிப்படுத்திய விதம் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.

இசையமைப்பாளர் சாம்.சி.எஸ், தனது வழக்கமான பாணியில் இருந்து முற்றிலும் விலகி புதிய வடிவிலான ஒரு பின்னணி இசை மூலம் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.

பதக்கம் மூலம் நாயகனுக்கு ஏற்படும் சிக்கல், வெவ்வேறு பாதையில் பயணிப்பதையும், அதன் மூலம் நிகழும் நீதிமன்ற வாதங்களையும் மிக நேர்த்தியாக தொகுத்து படத்தை வேகமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி சென்றிருக்கிறார் படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங்.

எந்த தவறும் செய்யாமல் சட்டத்தின் மூலம் சாமானியர்கள் குற்றவாளிகளாக்கப்பட்டு தண்டிக்கப்படுவதும், சிலர் அதே சட்டத்தின் மூலம் போராடி தங்களை நிரபராதி என்று நிரூபிப்பதும் புதிதல்ல என்றாலும், பாதிக்கப்பட்ட சாமானியன் மிது விழுந்த அந்த வீண் பழியை போக்குவது அரசின் கடமை, என்று வாதிடும் இயக்குநர் சஜீவ் பழவூர், அதற்கான திரைக்கதை மற்றும் காட்சிகளை வீரியம் நிறைந்ததாக சொல்லி புதிய சட்டப்புரட்ச்சியை நிகழ்த்தியிருக்கிறார்.

சட்டப்போராட்டம் மற்றும் நீதிமன்ற வாதங்கள் படத்தின் பெரும்பாலான காட்சிகளாக இருந்தாலும் அதை திரைக்கதையில் மிக சுவாரஸ்யமாக கையாண்டிருக்கும் இயக்குநர் சஜீவ் பழவூர், பதக்கம் ஒன்றை மையக்கருவாக வைத்துக்கொண்டு சமூக பிரச்சனை பற்றி பேசியிருப்பதோடு, அதை தொய்வில்லாத திரைக்கதை மூலம் விறுவிறுப்பான திரைப்படமாகவும் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்.

ரேட்டிங் 4 / 5

enna vilai movie reviewenna vilai reviewtamil movie enna vilai reviewஎன்ன விலை திரைப்பட விமர்சனம்என்ன விலை விமர்சனம்தமிழ்ப் படம் என்ன விலை விமர்சனம்