நடிகர்கள் : கார்த்தி, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, நிழல்கள் ரவி, ரஜிஷா விஜயன், தேவதர்ஷினி, ஆஷிஷ் வித்யார்த்தி
இசை : சாம்.சி.எஸ்
ஒளிப்பதிவு : ஜார்ஜ் சி.வில்லியம்ஸ்
இயக்கம் : பி.எஸ்.மித்ரன்
தயாரிப்பு : பிரின்ஸ் பிக்சர்ஸ், ஐவிஒய் எண்டர்டெயின்மெண்ட் – எஸ்.லக்ஷ்மன் குமார், இஷான் சக்சேனா
இறந்துவிட்டதாக கருதும் சர்தார் உயிருடன் இருக்கும் தகவல் அவரது மகன் கார்த்திக்கு தெரிய வருகிறது. ரா அமைப்பில் பணியாற்றும் கார்த்தி, தனது தந்தையை தேடி செல்ல முடிவு செய்கிறார். அதற்காக ரா அமைப்பு பின் தொடரும் சில உளவாளிகளை கண்டுபிடிக்கும் பயணத்தை மேற்கொள்ளும், சர்வதேச கூலிப்படை தலைவன் எஸ்.ஜே.சூர்யா, அந்த உளவாளிகளிடம் இருக்கும் ரகசிய பொருள் ஒன்றை அடைவதற்கும் அதன் மூலம் நாட்டையே அழிக்கும் திட்டம் ஒன்றை செயல்படுத்த இருப்பதையும் கார்த்தி அறிந்துக் கொள்கிறார். அவருக்கு முன்பாக அந்த ரகசிய பொருளை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபடும் கார்த்தி, அதில் வெற்றி பெற்றாரா?, உயிருடன் இருக்கும் தனது தந்தை சர்தாரை சந்தித்தாரா ? என்பது தான் படத்தின் கதை.
அப்பா – மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் கார்த்தி, உருவத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் வித்தியாசத்தை காண்பித்திருக்கிறார். வெள்ளந்தியான நபர், ஆனால் வேலைன்னு வந்துட்டா உயிரை துச்சமாக நினைத்து மக்களை காக்கும் பணியை திறம்பட செய்யும் சூப்பர் உளவாளி என்பதை நிரூபிக்கும் வகையில் சாகசம் நிறைந்த காட்சிகளை நம்பும்படி கையாண்டிருக்கிறார். காதல் காட்சிகள் குறைவு என்றாலும் ஆக்ஷன் காட்சிகளிலும், விமான சாகசங்களிலும் கார்த்தியின் உற்சாகமான நடிப்பு ரசிகர்களை குஷிப்படுத்துகிறது.
சர்வதேச கூலிப்படை தலைவன் பிளாக் டேக்கர் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா, வழக்கமான நடிப்பாக இருந்தாலும், திரைக்கதைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறார். வில்லனாக இருந்தாலும் மக்கள் செய்யும் தவறுகள், அதனால் எதிர்காலத்தில் ஏற்படும் விளைவுகளை விவரிக்கும் நீளமான காட்சியை தனது திரை இருப்பு மற்றும் நடிப்பு மூலம் தொய்வில்லாமல் கடத்தியிருக்கிறார்.
சிறிய வேடம் என்றாலும் ஆக்ஷனில் அமர்க்களப்படுத்தியிருக்கிறார் மாளவிகா மோகனன், படம் முழுவதும் பயணித்தாலும் ஆஷிகா ரங்கநாத்தின் வேடம் மனதில் நிற்கவில்லை. ஒரு காட்சியில் தலைகாட்டி மறைகிறார் ரஜிஷா விஜயன். யோகி பாபு மற்றும் நிழல்கள் ரவியின் புதிய காமெடி கூட்டணியின் காட்சிகள் சிரிக்க வைக்கிறது. அதிலும், வில்லன் எஸ்.ஜே.சூர்யா சொல்லும் கதையை கேட்டு கொடுக்கும் இவர்களது ரியாக்ஷன் திரையரங்கையே சிரிப்பு சத்தத்தால் அதிர வைக்கும்.
ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் காட்சிகளை பிரமாண்டமாக படமாக்கியிருக்கிறார். ஆக்ஷன் மற்றும் சாகச காட்சிகள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்றாலும் அது தெரியாதவாறு காட்சியை கையாண்டிருக்கிறார்.
சாம்.சி.எஸ்-ன் இசை படத்தின் தரத்தை அதிகரிக்கச் செய்திருக்கிறது. சேசிங் மற்றும் சாகச காட்சிகள், ஜேம்ஸ் பாண்ட் படம் பார்க்கும் அனுபவத்தை கொடுக்கும் விதத்தில் அமைந்திருக்கும் சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை அளவாக பயணித்து படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது.
படத்தின் மிகப்பெரிய பலமே விஜய் வேலுகுட்டியின் படத்தொகுப்பு தான். நாயகன் இரண்டு வேடம், வில்லன் எஸ்.ஜே.சூர்யா, மக்களை காப்பாற்ற உளவாளிகள் மேற்கொள்ளும் ஜப்பான் திட்டம், ரா அமைப்பின் பிளாஷ்பேக் காட்சிகள் என்று படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் மற்றும் காட்சிகள் இருந்தாலும், அவை அனைத்தையும் சரியான முறையில் தொகுத்து படத்தை தொய்வின்றி நகர்த்தி சென்றிருக்கிறார்.
‘சர்தார்’ முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருந்தாலும், வேறு ஒரு பிரச்சனையோடு மக்களை எச்சரித்திருக்கும் இயக்குநர் பி.எஸ்.மித்ரன், எதிர்காலத்தில் இப்படியும் ஒரு பேரழிவு ஏற்படலாம், என்ற கற்பனையை சாகசங்கள் நிறைந்த உளவாளியின் வாழ்க்கை பின்னணியில் பிரமாண்டமாகவும், கமர்ஷியலாகவும் சொல்லியிருக்கிறார்.
மக்கள் எதிர்கொள்ள இருக்கும் ஆபத்து, அது குறித்த விளக்கம், வில்லனின் திட்டத்தை முறியடிக்கும் நாயகனின் அதிரடி பயணம், சர்தாரின் ஜப்பான் மிஷன் போன்ற காட்சிகளை ஹாலிவுட் படங்களுக்கு நிகராக வடிவமைத்து திரையில் ஆக்ஷன் மேஜிக் செய்திருக்கும் இயக்குநர் பி.எஸ்.மித்ரன், நம்ம உள்ளூர் ரசிகர்களுக்கு புரியும் வகையிலும், அவர்களை சிரிக்க வைத்து மகிழ்விக்கும் விதத்தில் காட்சிகளை காமெடியாகவும் கையாண்டிருக்கிறார்.
சாகசங்கள் நிறைந்த ஆக்ஷன் காட்சிகள் மற்றும் வில்லன் – ஹீரோவுக்கு இடையிலான பேச்சுவார்த்தையில் காமெடி நடிகர்களையும் சேர்த்து வடிவமைத்த காட்சிகள் போன்றவற்றால், அனைத்துவிதமான ரசிகர்களுக்குமான படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் பி.எஸ்.மித்ரன், ‘சர்தார் 2’ மூலம் இரட்டிப்பான வெற்றியை கொடுத்திருக்கிறார்.
ரேட்டிங் 4/5