நடிகர்கள் : சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், மிதுன் ஜெய்சங்கர், ரவீந்திர விஜய், பாலசரவணன், ஸ்டனட் சிவா, ராம்ஸ்
இசை : ஜி.வி.பிரகாஷ் குமார்
ஒளிப்பதிவு : எஸ்.ஆர்.கதிர்
இயக்கம் : மதிமாறன் புகழேந்தி
தயாரிப்பு : ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் – எல்ரெட் குமார்
பாய்மரப் படகுப் பந்தயத்திற்கு பேர்போன ராமநாதபுரம் மாவட்டத்தின் மீனவ கிராமமான முகவைப்பட்டினத்தைச் சேர்ந்த பந்தய வீரர் சூரி, தன் வாழ்நாள் முழுவதும் படகு பந்தயத்தில் பங்கேற்க முடியாத நிலைக்கு தள்ளப்படுகிறார். இதனால், ஊரை விட்டு வெளியேறும் சூரி 20 வருடங்களாக யாருடனும், எந்தவித தொடர்பும் இன்றி சென்னையில் வாழ்ந்துக் கொண்டிருக்க, அவரது முன்னாள் காதலியான மகிமா நம்பியாரின் மகன் உயிரை காப்பாற்றுவதற்காக மீண்டும் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டிய சூழல் அமைகிறது. சூரியின் வருகையால் அவரது பழைய பகைமை மீண்டும் தலைதூக்குவதோடு, அவர் மீண்டும் பாய்மரப் படகுப் பந்தயத்தில் பங்கேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
சூரியின் வருகையால் தன்வசம் இருக்கும் முகவைப்பட்டின பாய்மரப் படகுப் பந்தய அணியையும், அதன் மூலம் தனக்கு இருக்கும் பெயர், தொழில் ஆகியவற்றை இழக்க நேரிடுமோ, என்று அச்சப்படும் சுஹாஸ், பந்தயத்தின் மூலமாகவே சூரியை அழித்து அவர் மீதான பழைய பகையை தீர்த்துக் கொள்ள திட்டம் போடுகிறார். எந்த பந்தயத்தினால், சொந்த ஊரையும், மக்களையும் விட்டு விலகி வாழ வேண்டிய சூழல் உருவானதோ, அதே பந்தயத்தினால் மீண்டும் சராசரியான வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும் சூரி, தன் கிராம இளைஞர்களில் இருந்து வீரர்களை தேர்வு செய்து அதன் மூலம் இழந்த தன் அணியை மீட்டெடுத்து, பந்தயத்தில் வெற்றி பெறும் முயற்சியில் ஈடுபடுகிறார். சூரியின் முயற்சி வெற்றி பெற்றதா ?, அல்லது சுஹாஸின் திட்டம் வெற்றி பெற்றதா ?, இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் பகையின் பின்னணி என்ன ? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
முத்துக்காளி என்ற கதாபாத்திரத்திற்கு தனது பண்பட்ட நடிப்பின் மூலம் உயிர் கொடுத்திருக்கும் சூரி, ஆக்ஷன் காட்சிகளில் கடுமையாக உழைத்திருப்பது படம் முழுவதும் தெரிகிறது. முதிர்ச்சியான நடிப்பு, மாஸ் காட்சிகளை கையாண்ட விதம், பாய்மரப் படகுப் பந்தயத்தில் வெளிப்படுத்திய உடல் மொழி என அனைத்தையும் நேர்த்தியாக கையாண்டு, தன்னை முழுமையான மாஸ் ஹீரோவாக நிலைநிறுத்தியுள்ளார்.
வில்லனாக நடித்திருக்கும் சுஹாஸ், சாட்டப்புலி என்ற கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வு. இளமை காலம் மற்றும் அதன் பிறகான காலக்கட்டத்தில் தோற்றத்தில் மட்டும் இன்றி, நடிப்பிலும் வித்தியாசத்தை காட்டியிருக்கும் சுஹாஸ், சூரி உடனான பகைமையை வசனம் ஏதும் இன்றி தனது கண்களின் மூலமாகவே வெளிப்படுத்தி நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் மகிமா நம்பியார் அழுத்தமான கதாபாத்திரத்தை மிக அழகாக கையாண்டிருக்கிறார். காதலையும், காதல் முறிவையும் பெண்கள் எளிதாக கடந்துபோகும் மனநிலையை தனது நடிப்பில் நேர்த்தியாக பிரதிபலித்திருக்கிறார். மச்சமுனி என்ற கதாபாத்திரத்தில் மூத்த மண்டாடியாக நடித்திருக்கும் சத்யராஜ், மாஸான கதாபாத்திரத்தில் கிளாசாக நடித்து கைதட்டல் பெறுகிறார்.
மாரி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மிதுன் ஜெய்சங்கர், ஆரம்பக் காட்சியில் அதிரடியாக அறிமுகமாகி கவனம் ஈர்ப்பதோடு, தனது வயதுக்கு ஏற்ற துள்ளல் நடிப்பால், யாருப்பா அந்த பையன் ? என்று கேட்க வைத்து விடுகிறார்.
சாதாரண வசனங்களை கூட டைமிங்கோடு பேசி சிரிக்க வைக்கும் பாலசரவணன், வரும் காட்சிகள் அனைத்தும் சிரிப்பு சரவெடி. மகிமா நம்பியாரின் கணவராக நடித்திருக்கும் ரவீந்திர விஜய், சுஹாஸின் தந்தையாக நடித்திருக்கும் ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சிவா, சூரியின் நண்பராக நடித்திருக்கும் ராம்ஸ், சுஹாசின் மச்சானாக நடித்திருக்கும் பத்மன், ஆடுகளம் முருகதாஸ், சுஹாசின் மகனாக நடித்திருக்கும் கிரிஷ் ஹாசன் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக பயணித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் கடல் பயணம் மற்றும் கதாபாத்திரங்களின் பயணம் இரண்டையும் காட்சிப்படுத்திய விதம் மிரட்டல். கடலில் நடக்கும் பாய்மரப் படகுப் பந்தயம் மற்றும் கரையில் நடக்கும் ஆக்ரோஷமான மோதல்கள் இரண்டையுமே மெய்சிலிரிக்கும்படி காட்சிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக பாய்மரப் படகு பந்தயத்தை வெவ்வேறு விதமாக காட்சிப்படுத்தினாலும், அதில் இருக்கும் ஆபத்து, அந்த ஆபத்தையும் மீறிய வீரர்களின் சாகசங்களை நம் கண்முன் நிறுத்திய நடிகர்களின் உடல்மொழியை மிக நுணுக்கமாக காட்சிப்படுத்தி பந்தயத்தை நேரில் பார்த்த அனுபவத்தை கொடுத்திருக்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்கள் கதைக்களத்தை விவரிக்கும் வகையில் இருந்தாலும் மனதில் நிற்கவில்லை. இருந்தாலும், பந்தயக் காட்சிகளுக்கும், ஆக்ஷன் காட்சிகளுக்கும் பின்னணி இசை கூடுதல் பலம் சேர்த்திருப்பதோடு, கதாபாத்திரங்களின் உணர்வுகளை வசனமே இல்லாத காட்சிகளில் கூட நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறது.
படத்தொகுப்பாளர் ஈ.ராகவுக்கு விருது நிச்சயம். கதை சொல்லிய விதம், சண்டைக்காட்சிகளை தொகுத்த முறை மற்றும் பந்தயக் காட்சியை பயணிக்க வைத்த விதம் ஆகியவை படத்திற்கு மிகப்பெரிய பலம். ஆரம்பக் காட்சியிலேயே பார்வையாளர்களின் கவனத்தை திரையின் பக்கம் ஈர்க்கும் விதமாக காட்சிகளை தொகுத்திருக்கும் ராகவ், இறுதி வரை திரைக்கதையை விறுவிறுப்பாகவும், வேகமாகவும் பயணிக்க வைத்திருக்கிறார்.
பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயண், மஹேஷ் மேத்யூ என்று மூன்று சண்டைப்பயிற்சியாளர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். மூவரது பணியும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக பந்தயக் காட்சியை படமாக்கிய விதம் பிரமிக்க வைக்கிறது.
கலை இயக்குநர் டி.ஆர்.கே.கிரண், இயற்கை எது, செயற்கை எது என்று கண்டுபிடிக்க முடியாதவாறு தனது பணியை செய்திருக்கிறார். அமீர் ஜமால் கான் மற்றும் மதிமாறன் புகழேந்தி ஆகியோரது வசனங்கள் எளிமையாக இருந்தாலும் கூர்மையாக இருக்கிறது.
தமிழ் சினிமாவில் மீனவர்களின் வாழ்வியலை மையமாக கொண்ட பல படங்கள் வெளியாகியிருந்தாலும், அவற்றின் வழக்கமான பாணியை தவிர்த்துவிட்டு, புதிய கோணத்தில் மீனவர்களின் வாழ்வியலை கதையாக்கி, திரைக்கதை மற்றும் தொழில்நுட்பத்தை ஒரே நேர்கோட்டில் பயணிக்க வைத்து, பார்வையாளர்களுக்கு புதிய திரை அனுபவத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, கதைக்களமாக கடல் மற்றும் கரையை கையாண்ட விதம் பாராட்ட வைக்கிறது.
மீனவர்களின் வாழ்வியலை புதிய கோணத்தில் கையாண்டது மற்றும் பாய்மரப் படகுப் பந்தயத்தை காட்சிப்படுத்திய விதம் போன்றவை மீனவர்களின் வாழ்வியலை இப்படியும் சொல்ல முடியுமா…!, என்று வியக்க வைத்ததோடு, பாய்மரப் படகுப் பந்தயத்தை மெய்சிலிக்கும்படி படமாக்கி பார்வையாளர்களை சீட் நுணியில் உட்கார வைத்திருக்கிறார்.
படத்தின் இறுதிக் காட்சி பாய்மரப் படகுப் பந்தயம் தான், என்பது படத்தின் ஆரம்பத்திலேயே தெரிந்தாலும், அந்த இறுதிப் பந்தயத்தில் மூன்று விதமான திருப்பங்களை வைத்து, என்ன நடக்கப் போகிறதோ…, என்று ரசிகர்களை பதட்டத்தின் உச்சத்திற்கே அழைத்துச் செல்லும் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி, மிக சிறப்பான கிளைமாக்ஸுடன், சிறப்பான திரை அனுபவத்தை கொடுக்கும் ஒரு கடல் சாகச பந்தயத்தை நம் கண்முன் நிறுத்தி கைதட்டல் பெறுகிறார்.
ரேட்டிங் 4.5/5