நடிகர்கள் : புகழ், பிராக்யா நயன், ரவி மரியா, கும்கி அஷ்வின், திடியன், இந்திரன், வின்சென்ட் அசோகன்
இசை : சுபாஷ் முனிரத்னம்
ஒளிப்பதிவு : யு.கே.செந்தில்குமார்
இயக்கம் : சஜோ சுந்தர் முருகேசன்
தயாரிப்பு : லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் – டாக்டர்.எம்.ஸ்ரீவத்சன், எம்.கோகுல் கிருஷ்ணன்
மருத்துவர் வின்சென்ட் அசோகனுக்கு சொந்தமான கடற்கரை பங்களாவில் பல கோடி ரூபாய் பணம் இருப்பதாக தகவல் கசிகிறது. இந்த தகவலை அறிந்துக் கொள்ளும் திருடர்களான புகழ், கும்கி அஷ்வின், திடியன், இந்திரன் ஆகிய நான்கு பேரும் அதை கொள்ளையடிக்க திட்டம் போட்டு பங்களாவுக்குள் நுழைய முயற்சிக்கும் போது, அந்த பங்களாவின் காவலாளி ரவி மரியாவிடம் சிக்கிக் கொள்கிறார்கள். ஆனால், சிக்கிய திருடர்களுடன் ரகசிய ஒப்பந்தம் ஒன்றை ரவி மரியா போட, அதற்கு நான்கு பேரும் சம்மதிக்கிறார்கள்.
இதற்கிடையே, அந்த கடற்கரை பங்களாவின் உரிமையாளரான மருத்துவர் வின்சென்ட் அசோகன் பற்றியும், காவலாளி ரவி மரியா பற்றியும் நான்கு திருடர்களுக்கும் ஒரு உண்மை தெரிய வர, அச்சத்தில் உறைந்து போகிறவர்கள், அந்த உண்மை தங்களுக்கு தெரிந்தது போல் காட்டிக்கொள்ளாமல் அங்கிருந்து தப்பிக்க முயற்சிக்கிறார்கள். அவர்களின் முயற்சி வெற்றி பெற்றதா ?, பங்களாவின் உரிமையாளர் மற்றும் காவலாளியின் மர்மம் நிறைந்த பின்னணி என்ன ? என்பதை நகைச்சுவையாக சொல்வதே ‘4 இடியட்ஸ்’
கதையின் நாயகன் என்ற அந்தஸ்த்துடன் நடித்திருக்கும் புகழிடம் பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் காமெடி ஒன்று கூட ஒர்க் அவுட் ஆகவில்லை. அதற்கு காரணம், விஜய் தொலைக்காட்சி போல் பின்னணியில் சிரிக்கும் ஒலியை இசையமைப்பாளர் சேர்க்கவில்லை. தொலைக்காட்சிகளில் எதை எதையோ செய்து, யார் யாரையோ கலாய்த்து அவர்களை எளிதில் சிரிக்க வைப்பதோடு, அவர்களாகவே சிரித்துக் கொண்டு, ”நல்ல காமெடி…” என்று தங்களை தாங்களே புகழ்ந்துக் கொள்வார்கள். ஆனால், சினிமாவில் அப்படி பூச்சாண்டி காட்ட முடியாது. காரணம், கதையோடு பயணிக்கும் கதாபாத்திரங்கள் பார்வையாளர்களை சிரிக்க வைக்க அதிகம் சிந்திக்க வேண்டும், சரியான டைமிங்கில் காமெடி வசனங்களை உச்சரிக்க வேண்டும். ஆனால், அது தனக்கு வரவே வராது, என்று ஒவ்வொரு படங்களிலும் புகழ் நிரூபித்துக் கொண்டிருப்பது போல், இந்த படத்திலும் நிரூபித்திருக்கிறார்.
புகழ், கும்கி அஷ்வின், திடியன், இந்திரன் ஆகிய நால்வர் கூட்டணி வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறது. ஒரு சில காட்சிகளில் ஓவர் ஆக்டிங் மூலம் கடுப்பேற்றினாலும், அவ்வபோது அந்த கடுப்பை மறந்து ரசிகர்களை சிரிக்க வைத்திருப்பது ஆறுதல்
ரவி மரியா வித்தியாசமான கெட்டப்பில் வழக்கம் போல் காமெடி சரவெடி வெடித்திருக்கிறார். வின்சென்ட் அசோகன் தனக்கான பணியை குறையின்றி செய்திருக்கிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் பிரக்யா நயன், கவர்ச்சி காட்சிகள் மூலம் ரசிகர்களின் பல்சை எகிற வைக்கிறார்.
யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு படத்தை கலர்புல்லாக காட்சிப்படுத்தியிருப்பதோடு, கமர்ஷியல் அம்சங்களை கண்ணுக்கு குளிர்ச்சியளிக்கும் விதத்தில் காட்டியிருக்கிறது. சுபாஷ் முனிரத்னம் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்தவையாக இருக்கிறது.
எழுதி இயக்கியிருக்கும் சஜோ சுந்தர் முருகேசன், ஒரு வீட்டில் முழு கதையும் நகரும்படியான திரைக்கதையை சாமர்த்தியமாக நகர்த்தி செல்வதோடு, ரசிகர்களை சிரிக்க வைக்கும் வித்தையை மிக சரியாக செய்திருக்கிறார்.
நாயகியை பல்வேறு கெட்டப்புகளில் காட்டியிருப்பதோடு, கமர்ஷியல் பட விரும்பிகளை கவரக்கூடிய அனைத்து அம்சங்களையும் அளவாக கையாண்டு படத்தை தொய்வின்றி நகர்த்தி செல்கிறார். சில இடங்களில் சிறு சிறு குறைகள் இருந்தாலும், நகைச்சுவை காட்சிகள் அந்த குறையை மறந்து சிரிக்க வைத்து விடுகிறது.
ரேட்டிங் 3/5